iOS 11 இயங்குதளத்தின் டாப் 11 சிறப்பம்சங்கள்!

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் (WWDC 2017), iOS, macOS, tvOS, watchOS போன்ற இயங்குதளங்களின் புதிய பதிப்புகளும் மற்றும் HomePod ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற பல்வேறு புதிய தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

வரும் செப்டம்பர்-டிசம்பரில் பொது பயன்பாட்டாளர்களுக்கு வெளியிடப்படவுள்ள iOS 11ன் டாப் 11 சிறப்பம்சங்களை இக்கட்டுரையில் காண்போம்.

1. ஆப்பிள் மேப்ஸ்:

கூகுள் மேப்ஸ்க்கு போட்டியாளராக தன்னை ஆப்பிள் நினைத்தாலும், அதற்கேற்ற சிறப்பம்சங்களை இதுவரை வழங்கவில்லை என்றே கூறலாம். ஆனால் iOS 11-யில் சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு புதிய வசதிகள் மூலம் தனது இருப்பை ஆப்பிள் உறுதிசெய்துள்ளது.

குறிப்பாக, குறிப்பிட்ட பாதைக்கான இன்-லைன் வழிகாட்டுதல் மற்றும் வேக கட்டுப்பாட்டு தகவல்களை இனி ஆப்பிள் மேப்ஸ் அளிக்கும். மேலும், குறிப்பிட்ட விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற உள்ளரங்க இடங்களுக்கான வழியையும் காணலாம்.

2. இடைஞ்சலற்ற வாகன இயக்கம்:

கார் போன்ற வாகனங்களை இயக்கும்போது கவனத்தை சிதறடிக்கும் வகையில் நமக்கு வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகளை தானியங்கியாக துண்டித்துவிட்டு நீங்கள் வாகனத்தை இயக்குவதாக உங்களை தொடர்புக்கொண்டவருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் Do Not Distrub While Driving என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மிக முக்கியமான அழைப்புகளை தொடர்பு கொள்பவரின் பதிலை பொறுத்து உங்களுக்கு தானாகவே சொல்லும் வகையிலும் இது செயல்படும்.

3. புதிய வசதிகளுடன் ஐமெசேஜ் செயலி:

வாட்ஸ்அப், மெஸ்சேஞ்சுர் மற்றும் அல்லோ போன்ற பல்வேறு குறுந்தகவல் செயலிகளுக்கு சவால் விடும் வகையில் பல புதிய சிறப்பம்சங்களை iMessage செயலி பெற்றுள்ளது. குறிப்பாக, ஒருவரிடம் உரையாடும்போதே ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு செயலிகளிலிருந்து தகவல்களை மிக எளிதாக பகிரும் வசதியும், ‘ஆப்பிள் பே’யை பயன்படுத்தி உரையாடலின்போதே பணம் அனுப்பும்-பெறும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களின் உரையாடலை உங்களின் மற்ற ஆப்பிள் சாதனங்களுடன் பரிமாறி, தொடர்ந்து பயன்படுத்தும் வசதியையும் அளிக்கிறது.

4. புத்தம்புதிய கட்டமைப்புடன் ஆஃப் ஸ்டோர்:

ஆப்பிள் ஆஃப் ஸ்டோர் கிட்டத்தட்ட முழுமையாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு குறிப்பிட்ட செயலியை நீங்கள் திறக்கும்போது அந்த செயலியை உருவாக்கிய டெவலப்பர் அளித்த பிரத்யேக விளக்கத்தையும், பேட்டியையும் தகுந்த கிராபிக்ஸ் உடன் காண முடியும். மேலும், அன்றைய தினத்துக்கான டாப் செயலிகள், எடிட்டர் சாய்ஸ் மற்றும் பல்வேறு வகையினத்தையும் புதிய, எளிமையான வழியில் பயன்படுத்த முடியும்.

5. மேம்படுத்தப்பட்ட கண்ட்ரோல்-சென்டர்:

உங்களுக்கு தேவையான அனைத்து ஆப்சன்களையும் எளிமையாக, வேகமாக பயன்படுத்தும் வகையில் கண்ட்ரோல்-சென்டர் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 3D டச் மற்றும் பிங்கர் பிரிண்ட் உபயோகம் இந்த புதிய இயங்குதள அப்டேட் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய இயலும். அத்துடன் லாக்-ஸ்கிரீன் நோட்டிபிகேஷன் ஒரே இடத்தில் மின்னஞ்சல், அழைப்புகள் மற்றும் மற்ற தகவல்களை பார்க்கும் வகையில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. புத்திசாலியான பதிலளிக்கும் சிறி:

மொபைலில் தட்டச்சு செய்து பதில் பெறும் காலம் மாறி, மனிதர்களுடன் மேற்கொள்ளும் இயல்பான உரையாடலைப் போன்று மொபைலுடன் செய்து, தக்க பதிலை பெறும் நிலையில் நாம் உள்ளோம். இதற்கான முன்னோடி தான்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது ஆப்பிளின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டான சிறி. முன்னெப்போதும் இல்லாததைவிட இயற்கையான ஒலி, ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் குரல்வழி மொழிபெயர்ப்பு மற்றும் கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் வகையில் பல்வேறு மேம்பாடுகளை பெற்றுள்ளது.

7. போட்டோ ஆஃப்:

சிறந்த தரத்திலான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டும், ஆனால் குறைந்த அளவு ஸ்டோரேஜ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கான புதிய HEVC மற்றும் HEIF என்னும் பார்மட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லைவ் போட்டோ மற்றும் வீடியோக்களை எளிமையாக எடிட் செய்யும் பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

8. iPad-களுக்கான புதிய வசதிகள்:

iOS இயங்குதளமென்பது ஐபோன்களுக்கு மட்டுமல்லாது ஐபாட்களிலும் செயற்படக்கூடியதாகும். எனவே, iOS 11 ஆனது மேக் ரக கணினிகளை போன்ற தோற்றத்தை ஐபாட்களுக்கு வழங்குகிறது. மேலும், புதிய ட்ராக் & ட்ராப் வசதியானது எழுத்துக்கள் மற்றும் போட்டோக்களை எளிதாக பரிமாற்றம் மற்றும் இடமாற்றம் செய்ய உதவுகிறது. படைப்புத்திறனை வெளிப்படுத்தும் ஐபாட் ப்ரோ இன்னும் பல மேம்பாடுகளை பெற்றுள்ளது.

9. சிறந்த ஸ்டோரேஜ் பயன்பாடு:

ஐபோன்/ஐபாட் பயன்பாட்டாளர்களுக்கு அதன் ஸ்டோரேஜ்தான் மிகப் பெரிய தலைவலி. இந்நிலையில், ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பைல் மற்றும் வீடியோ பார்மட்களான HEIF & HEVC ஆகியவை ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் பயன்பாட்டாளர்களின் பைல் அளவை 50% வரை குறைத்து அதிக ஸ்டோரேஜ் பெற வழிவகை செய்கிறது.

10. நோட்ஸ் ஆஃப் மற்றும் எளிமையான கீ-போர்டு:

பல்வேறு விதமான குறிப்புகளை எடுத்துக்கொள்ள பயன்படும் நோட்ஸ் ஆஃப்பில், தற்போது  டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை எடிட் செய்து சேமிக்கும் வசதி iOS 11ல் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே கையில் மொபைலை பயன்படுத்தும்போது அதற்கேற்றவாறு கீ-போர்டு இயங்கும் வகையிலும், எண்கள் மற்றும் சின்னங்களை வேகமாக பெறும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

11. ஸ்கிரீன் ரெகார்டிங்:

உங்களது ஐபோனில் செய்யும் செயற்பாட்டை ஸ்கிரீன் ரெகார்டிங் செய்ய மேக் ரக கணினியில் QuickTime பிளேயருடன் இணைத்தால் மட்டுமே சாத்தியம் என்றிருந்த நிலையில், தற்போது iOS 11யில் அளிக்கப்பட்டுள்ள வசதியின் மூலம் மிக எளிமையாக ரெகார்ட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட சிறப்பம்சங்களை தவிர்த்து iOS 11 குறித்த இன்னும் சில பிரத்யேக அறிவிப்புகளை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 8 வெளியீட்டின்போது ஆப்பிள் நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிகிறது.

*மேற்கண்ட கட்டுரையானது, “ஊடகம் 360” இணையதளத்தின் முதன்மை ஆசிரியரால் விகடன் இணையதளத்திற்காக எழுதப்பட்டதாகும்.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *