1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும்

1987ம் ஆண்டின் கடைசி நாட்கள் மற்றும் 1988ம் ஆண்டின் தொடக்க நாட்கள். இன்று ஊடகங்கள் அலையாய் அலைகிறதே ‘பிரேக்கிங் நியூஸ்’, அந்த பிரேக்கிங் செய்திகளுக்கு, அன்றைய நாட்களின் தமிழக அரசியலில் எந்தப் பஞ்சமும் இல்லை. குற்றால அருவிபோல கொட்டின..! ஆனால், தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ந்திராத காரணத்தால், அவற்றை மக்களால் பிரேக்கிங் செய்திகளாகப் பெற முடியவில்லை. பரவாயில்லை….நாம் அவற்றை இப்போது மிகப்பழைய செய்திகளாகவே (வரலாறாகவும்) பார்த்துவிடுவோம்.

என்ன நோக்கம்…?

1972ம் ஆண்டு, எந்த உயரிய நோக்கத்திற்காக தனிக்கட்சி தொடங்குகிறார் இவர் என்று சற்று சிந்திக்க தெரிந்தவர்கள் யாருக்குமே சரிவர புரியாமல், ஒரு புதிய கட்சியைத் தொடங்குகிறார் அன்றைய பிரபல நடிகரும், சட்டமன்ற உறுப்பினரும், திமுக-வின் பிரபல முகங்களில் ஒருவராகவும் இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன். அவர் தனிக்கட்சி தொடங்கியதில், 2 காரணங்கள் மிக முக்கியமாக பேசப்படுகின்றன. ஒன்று, தனது சினிமா அஸ்திவாரத்தை ஆட்டம்காண வைக்க, அன்றைய முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி, தனது மூத்த மகன் மு.க.முத்துவின் மூலம் முயன்றது.

மற்றொன்று, டெல்லியில் சர்வ வல்லமையுடன் ஆட்சியில் இருந்த இந்திராகாந்தியின் தூண்டுதல் மற்றும் மிரட்டல். அன்றைய நாட்களில், மிக வலுவாகவும், கவனிக்கத்தக்கதாகவும் இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை எப்படியேனும் சிதைக்க வேண்டுமென்ற டெல்லி அதிகார மையங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளில் இதுவும் ஒன்று. (ஆனால், இதில் என்ன கொடுமையென்றால், எந்த காங்கிரசின் தூண்டுதலால் அதிமுக தொடங்கப்பட்டதோ, அதே அதிமுக, அந்த காங்கிரசின் தமிழக ஓட்டு வங்கியை அப்படியே முக்கால்வாசி விழுங்கிவிட்டதுதான் சோகம்.)

டெல்லியின் ஆசியோடுதான் கட்சித் தொடங்கினார் என்ற கருத்தாக்கத்தை நிரூபிக்கும் விதமாகவே, எம்.ஜி.ராமச்சந்திரனின் பல்வேறான தொடர்ச்சியான செயல்பாடுகள் அமைந்தன. நெருக்கடி நிலை பிரகடனம், கச்சத்தீவு தாரை வார்ப்பு உள்ளிட்ட பல்வேறான விஷயங்களில் அவர் இந்திரா காந்தியை ஆதரித்தார். (ஆனால், அதுபற்றி எப்போதும் யாரும் வாய்திறந்து பெரிதாக விமர்சனம் செய்ததை நான் கண்டதில்லை) இதுமட்டுமல்ல, புதுச்சேரி அரசியல் களத்தில் இந்திராவை நம்பி மோசம் போனாலும்கூட, எதிர்க்காமல் வாய்மூடியே இருந்தார். அவரின் மிகப்பெரிய ஆதரவு தளங்களாக, அவரின் ரசிகர்கள் நீங்கலாக, திமுக-வின் சில முற்போக்கு செயல்திட்டங்களைப் பிடிக்காத தமிழகத்தின் சில பிற்போக்கு ஜாதிகள், அறியாமையிலிருந்த வேறுசில ஜாதிகள் போன்றவை அமையப்பெற்றன. இதுதவிர, திராவிட எதிர்ப்பு இந்துத்துவ மற்றும் இந்துத்துவ சார்பு சக்திகள் ஆகியவற்றின் முழு ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

அடுத்துது யார்..?

எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற தனிமனித கவர்ச்சி மற்றும் வழிபாடு ஆகிய அம்சங்களைத் தாண்டி, இவர் கட்சியின் அம்சங்களாக வேறு எதையும் யாரும் எப்போதும் கண்டிருக்கவே முடியாது என்றே உறுதிபடக் கூறலாம். 3 முறை தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தல்களில் வென்ற பிறகு, தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்ட பின்னர், கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இன்னும் ஆட்சி காலம் மீதமிருந்த சூழலில், 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமாகிவிட்டார் எம்.ஜி.ராமச்சந்திரன். அவரின் அமைச்சரவை என்று பார்த்தால், இரண்டாமிடத்தில் இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் (ஆனால், அவருக்கு கட்சியிலோ, வேறு எங்குமோ குறிப்பிடத்தக்க அளவில் எந்த செல்வாக்கும் இருக்கவில்லை). கட்சிரீதியாக தனி செல்வாக்குடனும், எம்.ஜி.ராமச்சந்திரனின் செல்லப் பிள்ளையாகவும் வலம் வந்தவர் ஆர்.எம்.வீரப்பன். இவர்களைத் தாண்டி ஜெயலலிதா. பல சீனியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ‘தன் வழி, தனி வழி’ என்று கட்சியில் வளர்ந்து கொண்டிருந்தார் அவர்.

இப்படி பலர் இருந்தாலும், தனிமனித கவர்ச்சி மற்றும் துதிபாடல் என்ற ஒன்றையே ஒன்றைக் கோட்பாடாக வைத்து கட்சி நடத்திய எம்.ஜி.ராமச்சந்திரன், தனக்குப் பிறகு இவர்தான் வாரிசு என்று யாரையும் அறிவிக்கவில்லை. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நேரத்திலும்கூட, அவர் வாரிசு தொடர்பாக எந்த முன்முயற்சியும் எடுக்காதது பலருக்கும் பெரிய ஆச்சயர்மே..! எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்தவுடன், ஆர்.எம்.வீரப்பன் தரப்பார் தமது கைப்பாவையாக எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவி ஜானகியை முன்னிறுத்த, ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், சசிகலா நடராஜன் தரப்போ, கள அனுபவசாலி திருநாவுக்கரசரின் துணையுடன், ஜெயலலிதாவை முன்வைத்து ஒரு பெரிய ஆட்டத்தை தொடங்கினார்கள். ஏறக்குறைய 28 எம்.எல்.ஏ -க்கள் வரை அவர்களால் இழுக்க முடிந்தது.

ஜெயலலிதாவுடன் இருந்த நட்பின் காரணமாக, முதல்வராக பதவியேற்றிருந்த ஜானகியின் அரசை கலைக்க அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி தயாராகிவிட்டதாகவும், ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாய்ப்பு தரலாம் என அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் சிபாரிசு செய்ததாகவும் கூறுவார்கள். ஆனால், வெங்கட்ராமனால் சில நாட்கள்தான் ராஜீவ்காந்தியை சமாதானம் செய்ய முடிந்தது. தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்கள் வேறுமாதிரி யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

காங்கிரசுக்கான களம்:

அதிமுக சரியான தலைமையின்றி தவிக்கிறது. திமுக-வோ பல்லாண்டுகள் ஆட்சியில் இல்லாமல் சுணங்கிக் கிடக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு விட்டதைப் பிடிக்க இதுதான் சரியான வாய்ப்பு. எனவே, ஆட்சியைக் கலையுங்கள்; தேர்தலை நடத்தி நாம் மறுவாழ்வு பெற்றுக்கொள்ளலாம். இந்த அருமையான வாய்ப்பை விட்டால் இனிமேல் இதுபோன்று கிடைக்காது என்று ராஜீவ்காந்திக்கு தூபம் போட, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு களேபரத்தில் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் புண்ணியத்தால் ஜானகி அரசு வென்றதாக அறிவிக்கப்பட்டாலும், தமிழக ஆட்சி கலைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விளையாடிப் பார்க்க நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு களம் கிடைத்தது. அடுத்த தலைமை யார் என்று அறிவிக்காமல் எம்.ஜி.ராமச்சந்திரன் காலமானதால், தேவையற்ற ஒரு தேர்தல் திணிக்கப்பட்டது. பல அரசியல் சித்து விளையாட்டுகள் நிகழ வேண்டியதாகிவிட்டது.

ஆனால், அடுத்து நடந்த தேர்தலில், பாவம், காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாமல் போய்விட்டது. இரட்டை இலை இல்லாமல் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா, காங்கிரசை விஞ்சிவிட்டார். அவரே தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரானார். ஜெயலலிதாவின் செல்வாக்கைக் கண்ட ஜானகி, நமக்கு இனி இது ஒத்துவராது என்று விலகிப்போக, அதிமுக ஒரு தலைமையின் கீழே மறுபடியும் வந்தது. அன்றைய நிலையில் காங்கிரஸ் ஆடிப்பார்க்க நினைத்ததை நாம் அரசியல் தர்மத்தின் பார்வையில் முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர்கள் தமிழகத்தை பல ஆண்டுகள் ஆண்டவர்கள் மற்றும் அங்கே அவர்களுக்கு ஒரு வலுவான அடித்தளமும் உண்டு. ஆனாலும் அவர்கள் பெரியளவில் சிக்கலை உண்டாக்காமல், ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடத்திவிட்டார்கள்.

இதோ மீண்டும் இன்று திரும்பிய வரலாறு:

29 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு மீண்டும் திரும்பியது; அதே அதிமுக என்ற கட்சியை மையமாக வைத்து. அதன் மாபெரும் வல்லமை வாய்ந்த தலைவி ஜெயலலிதா எதிர்பாராமல் மரணமடைந்தார். அவர் தன் காலத்தில், தனக்கு சமமாக மரியாதை கொடுத்தும், சுயமரியாதை கொண்ட மனிதராகவும் நடத்திய ஒரே நபரான சசிகலாவையோ அல்லது ஊரறிய, உலகறிய அவர் மரியாதையுடன்(!) நடத்திய அவரின் அமைச்சரவை சகாக்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்களில் ஒருவரையோ அவர் தனது வாரிசாக எப்போதும் மறந்தும்கூட அடையாளம் காட்டியதில்லை. (பன்னீர் செல்வத்தை இருமுறை முதல்வராக அமர வைத்த காரணமெல்லாம் வேறு. அவர், தன் காலத்தில் பன்னீர் செல்வத்திற்கு எந்தளவிற்கு மரியாதை கொடுத்து நடத்தினார் என்றுதான் பார்க்க வேண்டும்).

29 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லியின் அதிகார மையத்திலும் பெரியளவில் மாறுதல்..! அன்று கோலோச்சிய காங்கிரஸ் இன்றோ அந்தோ பரிதாப நிலையில். இன்று அதிகாரத்தில் இருப்பதோ வேறொரு கட்சி. ஆபத்தான பல கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் தன் அடையாளமாகக் கொண்ட கட்சி. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, மருத்துவமனையில் சேர்ந்த நாளிலிருந்து, தமிழ்நாட்டில் தன் ஆட்டத்தை தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்காவது ஒரு நியாயம் இருந்தது. ஆனால், இந்தக் கட்சிக்கு தமிழகத்தில் எந்த சுவடும் இல்லை, அடித்தளமும் இல்லை. இவர்கள், தமிழ்நாட்டில் வளர்வதற்கான எந்த வாய்ப்பும் நீண்ட நெடுங்காலத்திற்கு இல்லை. நிலைமை இப்படியிருக்கையில், அக்கட்சியின் திருவிளையாடல்கள் எந்த எல்லைக்கு சென்று கொண்டுள்ளன என்பதை நாம் அனைவரும் இன்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு சக்திவாய்ந்த அதிமுக தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவை அவர்கள் தொடர்ந்து எப்படி கையாண்டு வருகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். ஜெயலலிதாவின் காலத்தில் சசிகலா என்பவர் அசைக்க முடியாத நிழல் தலைவராக இருந்தார் என்பது அக்கட்சியில் மிகப் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால்தான், ஜெயலலிதா மறைந்தவுடன் பொதுச்செயலர் பதவி சசிகலாவை நோக்கி சென்றது.

அதிசய உளவியல்கள்:

ஒரு வலிமையான கட்சியை வழிநடத்திவிட்டு, அது தமக்குப் பிறகு ‘என்ன ஆனால்தான் என்ன’ என்ற மனநிலையில் எப்படி அந்த 2 தலைவர்களாலும் இருக்க முடிந்தது? அவர்களின் உளவியல் தன்மைதான் என்ன? திமுக -வை எடுத்துக்கொண்டால் அதன் கதையே வேறு. நிறுவனத் தலைவர் அண்ணாதுரை இறந்த பிறகு, அடுத்தது நெடுஞ்செழியன்தான் என்று பலரும் நினைத்திருந்த வேளையில், தொண்டர்கள் செல்வாக்கும், நிர்வாகத் திறனும், கள அனுபவமும் வாய்ந்த மு.கருணாநிதி இடையில் நுழைந்து நெடுஞ்செழியனை வீழ்த்தினார். ஆனால், இதை ஜெயலலிதா அதிமுக-வை கைப்பற்றிய கதையுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், திமுக-வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் கட்ட தலைவராக விளங்கியவர் மு.கருணாநிதி. அவரோ, நீண்டகாலத்திற்கு முன்பாகவே தனக்கடுத்த வாரிசு யார் என்பதை மிகத்தெளிவாகவே தெளிவுபடுத்திவிட்டார். இப்போது தனது அந்திம காலத்தில் மு.கருணாநிதி இருக்கும் வேளையில், அவர் கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை.

எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில் அவர் தன் கட்சியில் சிலருக்கு வழங்கிய அதிகாரம் மற்றும் விளம்பர வெளிச்சம் போன்றவற்றைக்கூட ஜெயலலிதா தன் காலத்தில் யாருக்கும் வழங்கவில்லை. தனிமனித கவர்ச்சி மற்றும் துதிபாடல் என்ற எம்.ஜி.ராமச்சந்திரன் கைகொண்ட சித்தாந்தத்தையேப் பின்பற்றிய ஜெயலலிதா, அதை இன்னும் இறுகிய, வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்.

எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக இருந்து, அவரின் கட்சிக்கு வாரிசான ஜெயலலிதா, தன் குருவின் ஆளுமையையும் செல்வாக்கையும் முடிந்தளவிற்கு மட்டுப்படுத்தி, அதிமுக-வின் ஏகபோக முகமாக தன்னையே முன்னிலைப்படுத்திக் கொண்டு வந்திருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரனின் நடைமுறைகளையே பெரும்பாலும் கட்சியிலும், ஆட்சியிலும் பின்பற்றி நடந்துகொண்டது கவனிக்கத்தக்கது. அவர்கள் இருவருக்குமான உளவியல் ஒற்றுமை ஆச்சர்யகரமான ஒன்று..!

ஆனால், அவர்களின் உளவியல் ஒற்றுமையை நினைத்து புலங்காகிதம் அடையும் நிலையில் இப்போது நாம் இல்லை. அந்த உளவியல்களால், தமிழகம் இப்படி சிக்கக்கூடாதவர்களிடம் சிக்கி அல்லகோலப்படுவதை நினைத்து புலம்பும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

Prasanna Bharathi

Associate Editor - Udagam 360

Prasanna Bharathi has 9 posts and counting. See all posts by Prasanna Bharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *