ஸ்மார்ட்போன் உற்பத்தி, விர்ச்சுவல் ரியாலிட்டி, 5G டெக்னாலஜி..ரீ-என்ட்ரி கொடுக்கும் நோக்கியா!

உலகில் உள்ள பலரின் முதல் மொபைல் போன் கனவை நிஜமாக்கிய நோக்கியா நிறுவனம் வரும் 2017-ம் ஆண்டு முதல் மீண்டும் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குத்தளத்தில் செயல்படும் இரண்டு மொபைல் போன்கள் மற்றும் டேப்லட் ஆகியவை அடுத்தாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேப்பர் மில் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை நோக்கியாவின் 151 வருட பிரமாண்ட  பயணம்!

1865-ம் ஆண்டு பின்லாந்து நாட்டில் நோக்கியா என்னும் பேப்பர் கூழ் தயாரிக்கும் நிறுவனம் துவக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் எலக்ட்ரானிக் துறையில் கால்பதித்த நோக்கியா, முதலில் டெலிபோன்களையும் அதற்கு தேவையான எலக்ட்ரிக்கல் கேபிள்களையும் தயாரித்தது.

1967-ம் ஆண்டு நோக்கியா மற்றும் இருவேறு நிறுவனங்கள் இணைக்கப்பட்டு நோக்கியா கார்ப்பரேஷன் என்னும் தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனமானது பின்லாந்து நாட்டின் ராணுவத்துக்குத் தேவையான சில உபகரணங்களையும், சிறியவகை ரேடியோக்கள் மற்றும் மிக்ரோமிக்ரோ என்னும் பெயரில் பர்சனல் கம்ப்யூட்டர்களையும் தயாரித்தது.

1981-ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் சலோரா என்னும் நிறுவனத்துடன் இணைந்து உலகின் முதல் சர்வதேச செல்லுலார் நெட்வொர்க்கையும், 1982-ல் Mobira Senator என்னும் தனது முதல் மொபைல் போனையும், 1987ல் Mobira Cityman என்னும் மொபைலும்  வெளியிட்டது.

மொபைல் போன்களின் வெற்றி!

நோக்கியாவின் உண்மையான சகாப்தம் என 1991-ம் ஆண்டு பின்லாந்து பிரதமர் நோக்கியாவின் மொபைலை பயன்படுத்தி செய்த உலகின் முதல் ஜிஎஸ்எம் அழைப்பை அழைக்கலாம். ஏனெனில் இதன் மூலம் கிடைத்த வரவேற்பின் காரணமாகத்தான் 1992ம் ஆண்டிலேயே நோக்கியா தனது முதல் வர்த்தகரீதியான மொபைலான “Nokia 1011”ஐ வெளியிட்டது.

அதன் பிறகு பல மொபைல் போன்கள் வெளியிடப்பட்டாலும் 2003-ல் வெளியான Nokia 1100-த்தான் ஆசிய, ஐரோப்பிய நாட்டு மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று 25 கோடிக்கும் மேற்பட்ட மொபைல்கள் விற்பனையானது. நோக்கியாவின் வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய வெற்றியாக இது கருதப்படுகிறது. இந்த மொபைலை நேசிக்காதவர்களே இருக்க முடியாது எனலாம்.

இதனிடையே 2006-ம் ஆண்டுதான் நோக்கியா தனது மிகப் பெரிய மொபைல் போன் தொழிற்சாலையை சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2100, 3110, 3230, 3310, 6020, 6600, 7610, 9500, N70, N95, N86 போன்ற பல்வேறு வெற்றிகரமான மொபைல்களை வெளியிட்டது.

என்ட்ரி கொடுத்த ஆண்ட்ராய்டு போன்கள்!

கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குத்தளம் மற்றும் பல புதிய சிறப்பம்சங்களை தந்த ஆப்பிளின் ஐபோன்கள் ஆகியவை டெக் உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்த கொஞ்சம் பின்தங்கியது நோக்கியா. இவற்றின் வருகையால் ஏற்பட்ட கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல் நோக்கியாவின் சிம்பியன் ஆட்டம் காணத் தொடங்கியது.
இதனிடையே 2010-ம் ஆண்டில் லினக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோக்கியா உருவாக்கிய MeeGo என்னும் புதிய இயங்குத்தளமும் எதிர்பார்த்த வரவேற்பை தராததால், 2011-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைத்து விண்டோஸ் இங்குத்தளத்தில் இயங்கும் முதல் மொபைலான Lumia 800-ஐ வெளியிட்டது.

நோக்கியாவின் அடுத்தடுத்த வெளியீடுகளும் தோல்வியடைந்ததால் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் சரியத் தொடங்கியது. இதனிடையே மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட விரும்பிய மைக்ரோசாப்ட் நிறுவனம் 2014-ம் ஆண்டு நோக்கியாவின் மொபைல் போன் பிரிவை சுமார் 7.9 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

நோக்கியாவின் எதிர்காலம் என்ன?

மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட மொபைல் போன்களும் எதிர்பார்க்கப்பட்ட முடிவை தரவில்லை. மேலும் மைக்ரோசாப்ட்டின் இந்த கையகப்படுத்துதல் டெக் உலக வரலாற்றின் மோசமானதாகவும் கருதப்படுகிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிய நோக்கியா அது சார்ந்த பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது. வருங்காலத்தின் முக்கியமான தொழில்நுட்பமாக கருதப்படும் 5ஜி மொபைல் தொழில்நுட்பம், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி மற்றும் பலவற்றில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

மொபைல் போன் துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்த நோக்கியா நிறுவனம் பல்வேறு ஹார்வேர்ட், சாப்ட்வேர் சார்ந்த கண்டுபிடிப்பு உரிமங்களை கொண்டு பின்லாந்தில் இந்தாண்டு மே மாதம் புதியதாக தொடங்கப்பட்டுள்ள HMD Global என்னும் நிறுவனத்தின் மூலம் மீண்டும் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடயிருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக 10 ஆண்டுகால ஒப்பந்தத்தையும் இவ்விரு நிறுவனங்கள் செய்துகொண்டுள்ளன.

தற்போது நோக்கியா மற்றும் HMD Global-யிடம் எவ்வித மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையும் இல்லாததால் அவற்றின் மொபைல் போன்கள் Foxconn நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது.

நோக்கியாவின் புதிய மொபைல்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும்?

வரும் 2017-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் “மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்” என்னும் வருடாந்திர தொழில்நுட்ப விழாவில் புதிய மொபைல்கள் குறித்த அறிவிப்புகளை நோக்கியாவின் தலைமை செயலதிகாரி ராஜீவ் சூரி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதற்கு முன்னதாகவே சில அதிகாரபூர்வமற்ற  தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி இரு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வகையிலான அவ்விரு மொபைல்களும் 5.2 மற்றும் 5.5 இன்ச் அளவுடைய 2K திரையை கொண்டிருக்கும். மெட்டாலிக் வடிவமைப்பில் IP68 என்னும் நீர்புகா சான்றுடனும் இருக்கும். மேலும் Snapdragon 430 ப்ரோசசோருடன் 13MP திறனுள்ள பின்பக்க கேமராவையும், 5MP முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கும். 3GB RAM-மையும் 32GB ROM-மையும் நினைவகமாக கொண்டிருக்கும் இது ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பான நௌகட் 7.0-ல் செயல்படும் என்று தெரிகிறது. இதுனுடன் சில டேப்லட்களும் வெளியிடப்பட வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *