வளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்! இதுவரை நடந்ததென்ன?

மத்திய கிழக்கு நாடான கத்தாரின் மீது சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேகம் ஆகிய நான்கு நாடுகள் கூட்டாக விதித்துள்ள பொருளாதார மற்றும் ராஜாங்க ரீதியிலான தடைகள் ஒரு மாத காலம் ஆகியும் தீர்க்கப்படாத பிரச்சனையாகவே உள்ளது. அது குறித்த அனைத்து நிகழ்வுகளையும் அலசுகிறது இந்த கட்டுரை.

எப்போது, எப்படி தொடங்கியது?  

மத்திய கிழக்கு பகுதிகளில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் உதவி செய்வதாக கூறி கடந்து ஜூன் 5 அந்நாட்டுடனான பொருளாதார மற்றும் போக்குவரத்து தொடர்புகளை நிறுத்திக்கொள்வதாக பஹ்ரைன் முதலில் அறிவித்தது. அதைத்தொடர்ந்து படிப்படியாக சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேகம் போன்ற நாடுகள் கத்தாருடனான தங்களுடைய தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தன. மேலும் அந்நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் குடிமக்களை இரண்டு வார காலத்திற்குள்ளாக வெளியேற உத்தரவிட்டது. ஜூன் 23ம் தேதி கத்தார் மீதான தடையை நீக்கிக்கொள்ள எதிர்நாடுகள் 13 நிபந்தனைகள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் இரானுடனான கத்தாரின் ராணுவ உறவுகளை நிறுத்திக்கொள்வதில் தொடங்கி தோஹாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் அல்ஜசீரா செய்தி தொலைக்காட்சி மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களை நிரந்தரமாக நிறுத்தம் செய்வது வரை அரபு நாடுகள் விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் கத்தார் முற்றாக மறுத்து விட்டது.

ட்ரம்பின் அரேபியா வருகையும், அமெரிக்காவின் முரண்பட்ட நிலைப்பாடும்:

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் தன்னுடைய அரேபியா வருகையின் போது சவூதி அரசர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு குழுவில் (Gulf Cooperation Council ) உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளின் மன்னர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அப்போது தீவிரவாதத்திற்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகளின் நடவடிக்கைகளில் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்று உறுதி அளித்து இருந்தார். இந்த பயணத்தில் சவூதி அரேபியா உடன் 110 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வளைகுடா நாடுகளின் கத்தார் மீதான இந்த நடவடிக்கையை வரவேற்ற டொனால்ட் டிரம்ப், தீவிரவாதத்திற்கு அளிக்கப்படும் நிதி உதவிகளை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தான் வலியுறுத்தியதாகவும் அதைத் தான் தற்போது அரபு நாடுகள் செய்வதாகவும் பாராட்டு தெரிவித்தார். மத்திய கிழக்கிலேயே கத்தார் நாட்டில்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளமான அல் உதேய்த் அமைந்துள்ளது. அமெரிக்க அதிபரின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் வெளியிட்ட செய்தியில் “மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு கத்தார் மிகவும் உறுதுணையாகவும் பிராந்திய பாதுகாப்பில் உறுதியான பங்களிப்புடன் இருந்ததாகவும் தெரிவித்ததது. அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கான செயலாளர் ரெக்ஸ் டில்லர்சென் இந்த நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்தோடு வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். டிரம்ப்பின் வரவேற்பிற்கு பதிலளித்த சவூதி அரசு, ரெக்ஸ் டில்லர்சென் கோரிக்கைக்கு எந்த ஒரு இசைவும் கொடுக்கவில்லை.

குழப்பமளிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு:

பல்வேறு உலக நாடுகளின் அரசுகளும் தலைவர்களும் வளைகுடா நிலவும் நெருக்கடிக்கு தங்களின் ஆதரவு, எதிர்ப்பு என்று இருவேறு நிலையில் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்திய அரசோ இந்த விஷயத்தில் மௌனமே காத்து வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இது வளைகுடா ஒத்துழைப்பு கழகத்திற்கு உட்பட்ட விவகாரம் என்றும் இதனால் டெல்லிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களுக்கு இதனால் ஏதாவது பிரச்சனை என்றால் உரிய நேரத்தில் இந்தியா தலையிட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார். கத்தாருடன் இந்தியாவிற்கு பாதுகாப்பு மற்றும் ஆற்றல் துறையில் வலுவான தொடர்புகள் உள்ளன. திரவ இயற்கை வாயு (Liquefied Natural Gas) உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் கத்தாரின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக இந்தியா உள்ளது. கத்தாரின் இறக்குமதியில் இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. இருதரப்பு நாடுகளுடனுமே சுமுகமாண உறவுகள் இருப்பதாக இந்திய அரசு கூறினாலும் உலக நாடுகள் பலவும் தீர்வு காண முனையும் ஒரு நெருக்கடியில் இந்தியாவின் எதிர்வினை அழுத்தமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

கத்தாரின் மறுப்பும், குவைத், துருக்கியின் ஆதரவுக்கரமும்:  

ஆரம்பம் முதலே எதிர் நாடுகளின் புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து வந்தது கத்தார். கத்தாருடனான அனைத்து சேவைகளையும் முடக்கிக்கொண்ட சவூதி அரேபியா மற்றும் பிற நாடுகள், தரைவழி மற்றும் வான்வழி சேவைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. பொருளாதார அளவில் வலுவான நாடாக கத்தார் இருந்தாலும் அதன் பெருவாரியான உணவு மற்றும் மருத்துவ சேவைகள் பிற வளைகுடா நாடுகளையே சார்ந்து வருகிறது. இந்த தடை விதிப்பிற்கு முக்கியமான காரணமாக பிற நாடுககளின் தீவிரவாத குழுக்களுக்கு (ஐஸ்ஐஸ், தலிபான் மற்றும் அல்-கெய்தா போன்ற இஸ்லாமிய குழுக்கள்) கத்தார் உதவியதாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஈரான் நாட்டிற்கு ஆதரவு அளிப்பதையும் கூறின. இதை முற்றிலுமாக நிராகரித்த கத்தார், அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடவில்லை என்றும், இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட புகார் என்றும் தெரிவித்தது. உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க துருக்கி மற்றும் இரானிலிருந்தது உணவு பொருட்களை கப்பல் மற்றும் வான்வழியாக கத்தாருக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கு பெரும் முனைப்போடு செயல்பட்ட குவைத்தை பல உலக நாடுகளும் பாராட்டின. தடை விதித்து இரண்டு வார காலத்திற்கு மேலாகவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த கத்தாரிடம் எதிர் நாடுகளிடம் இருந்து எந்த ஒரு நிபந்தனைகழும் வைக்கப்படவில்லை. இதனால் குழப்பம் அதிகரிக்கவே உலக நாடுகளின் வற்புறுத்தலுக்கு பிறகு 13 நிபந்தனைகள் கொண்ட பட்டியல் குவைத்தின் மூலம் கத்தாரிடம் அளிக்கப்பட்டது. தடையை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றால் கத்தார் அந்த கோரிக்கைகளுக்கு உடன்பட வேண்டும் என்றும் மேலும் பத்து நாட்களுக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்தன.

சாத்தியமற்ற நிபந்தனைகளும் அதனை தொடர்ந்த நிகழ்வுகளும்:

எதிர் நாடுகள் வைத்த குற்றச்சாட்டுகளும், நிபந்தனைகளும் அடிப்படையற்ற மற்றும் ஏற்கவியலாதவைகள் என்றும் இதை செயல்படுத்த போவதில்லை என்பதே கத்தாரின் நிலைப்பாடாக இருந்தது. உலக நாடுகள் பலவும் கத்தாரில் நிலைப்பாடை ஆதரித்தன. எதிர் நாடுகளின் நிபந்தனைகள் பட்டியலில் குவைத்தில் செயல்படும் துருக்கியின் ராணுவ தளத்தை நிரந்தரமாக மூடி அந்நாட்டுடன் எந்த விதமான ராணுவ தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. இரானுடனான ராஜாங்க உறவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தோஹாவை தலைமையகமாக கொண்டு உலகம்முழுவதும் செயல்பட்டு வரும் அல் ஜசீரா செய்தி தொலைக்காட்சி  மற்றும் அதை சார்ந்துள்ள நிறுவனங்களையும் மூட வேண்டும் என்பன போன்ற நியாயமற்ற நிபந்தனைகள் இடம்பெற்றன. பல்வேறு உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் சவூதி அரேபியாவிடம் கோரின. துருக்கி பிரதமர் எர்டோகன் இந்த நிபந்தனைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் இதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

குறிவைக்கப்படும் அல் ஜசீரா:

மத்தியகிழக்கில் செயல்பட்டு வந்தாலும் உலகம் முழுவதும் செய்திகளை வழங்குவதில் தன்னிகரற்ற ஊடகமாக செயல்பட்டு வருகிறது அல் ஜசீரா குழுமம். தடை அறிவித்ததன் பின்பு சவூதியில் செயல்பட்டு வந்த அல் ஜசீரா கிளை மூடப்பட்டது. அதன் பின்னர் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அல் ஜசீரா நிரந்தரமாக மூடப்படவேண்டும் என்பதற்கு உலகெங்கும் கண்டனக்குரல்களும் ஆதரவுக்குரல்களும் ஒரு சேர ஒலித்தன. 2011 வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட புரட்சி, அரசியல் மாற்றம் போன்ற நிகழ்வுகளில் அல் ஜசீரா பாரபட்சமற்ற பார்வையை முன்வைத்தது. அன்று தொடங்கி இன்று வரையிலும் மேற்கத்திய ஊடகங்கள் சொல்ல மறைக்கும் விஷயங்களை துணிந்து ஒளிபரப்பிவருகிறது அல் ஜசீரா அதை பிடிக்காதவர்களே இது போன்று நிபந்தனை விதிக்கின்றனர். சவுதி அரேபியா அல் ஜசீரா மீது தடை கோருவது ஜெர்மனி பிரிட்டனில் செயல்படும் பிபிசி தடை செய்யக்கொருவதை போல அபத்தமானது. தரமான உண்மையான செய்தி வழங்கும் அல் ஜசீராவின் பணி இடைவிடாது தொடரும் என்று அதன் இயக்குனர்களில் ஒருவரான கில்ஸ் ட்ரென்டில் தெரித்துள்ளார்.

 

எதிர் நாடுகளின் நிபந்தனைகளுக்கு கத்தார் எந்த ஒரு மறுமொழியும் அளிக்கவில்லை. குவைத்தின் கோரிக்கையின்படி நீட்டிக்கப்பட்ட இரண்டு நாள் காலக்கெடு முடிவதற்கு முன், கத்தார் குவைத்தின் மூலம் எதிர் நாடுகளுக்கு அளித்த பதிலில், அரபு மற்றும் வளைகுடா நாடுகள் வைத்த சாத்தியமற்ற நிபந்தனைகளை ஏற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. பதில் கிடைக்கப்பெற்ற எதிரணியினர் புதன் அன்று கெய்ரோவில் சந்தித்து பேசிய பிறகு கத்தாரின் மறுமொழி வருத்தம் அளிப்பதாகவும் கத்தார் மீதான தடைகள் தொடரும் என்றும் அறிவித்தனர்.

கத்தாருக்குள்ள செல்வ வளத்திற்கு இது போன்ற தடைகளை ஏற்படுத்தினாலும், அதனால் பல நாட்கள், மாதங்கள், ஏன் வருடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியும். இது போன்ற நெருக்கடியான சூழல்களில் அதிகம் பாதிக்கப்படுவது அந்த தேசங்களில் பல காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பிற நாட்டு  மக்கள் தான். இடைப்பட்ட இந்த ஒரு மாத தடைகாலத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பொருளாதார அரசியல் நோக்கங்கள் பார்க்கப்படும் இடங்களில் உரிமை மீறல்கள் நடப்பது பற்றி ஆளும்வர்க்கம் அக்கறை கொண்டதாக இதுவரை வரலாறு இல்லை. இனியும் அதுபோன்ற வரலாறு உருவாகப் போவதாகவும் தெரியவும் இல்லை.

Mohan Elango

Features Editor - Udagam 360

Mohan Elango has 1 posts and counting. See all posts by Mohan Elango

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *