வறண்ட ரசனையின் வசந்தமா பாகுபலி?

பிரமாண்டம்…!

அழகியல்…!

அருமையான பொழுதுபோக்கு…!

அற்புதமான திரைக்காவியம்…!

அதகள வசூல் சாதனை…!

இந்திய சினிமாவின் புதிய முன்னோடி…!

வேறொன்றுமில்லை, ‘பாகுபலி – 2’ குறித்து காற்றில் மட்டுமல்ல, பல பத்திரிக்கைகளின் பக்கங்களில் எழுத்து வடிவிலும் பரவிவரும் சிலாகிப்புகளில் சிலதான் மேற்கண்டவை. பாகுபலியின் முதல் பாகம் என்னை எந்தவிதத்திலும் பெரிதாக கவரவில்லைதான். சரி, எத்தனையோ படங்களைப் பார்ப்பதுபோல் இரண்டாம் பாகத்தையும் பார்த்துவிடலாமே என்றுதான் பார்த்தேன். இதிலோ, முதல் பாகத்தைவிட பெரிய ஏமாற்றங்கள் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தன.

பார்ப்பது இப்படமாஅல்லது அப்படமா…!

இயற்கை தொடர்பான பிரமாத அழகியல் காட்சிகள் நிறைந்துள்ளன என்றார்கள். கொடுமை என்னவென்றால், அந்த அழகியலைப் பார்த்த நான், ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ படத்தின் முதல் பாகத்திற்குள் சென்று, என்னை அங்கிருந்து விடுவிப்பதற்குள் சிரமப்பட வேண்டியதாயிற்று. இந்த தொல்லை போதாதென்று ‘பிரேவ் ஹார்ட்’ போன்ற சில படங்களும் நான் அழைக்காமலேயே என் நினைவில் வந்து இம்சித்தன. பாகுபலியை நிம்மதியாக பார்க்க முடியவில்லை. இன்னொரு பெரிய சிலாகிப்பு – இப்படத்தின் பிரமாண்டம்…! அட… இதிலும், ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ உள்ளிட்ட பல படங்களின் தொல்லைதான். பாகுபலி போன்ற இந்திய பிரமாண்டங்களை ஒருவர் நிம்மதியாக ரசித்து லயிக்க வேண்டுமெனில், அவருக்கான அடிப்படை மற்றும் முக்கியத் தகுதி அவர் இந்தியப் படங்களை மட்டுமே பார்த்தவராக இருக்க வேண்டுமென்பதுதான்.

இப்போது படத்தின் இன்னொரு முக்கிய அம்சமான அரசவைக் காட்சிகளுக்குள் செல்வோம்.

சத்ரிய தர்மமென்ற மனுதர்மம்…!

இப்படம், தனது கருத்தாக மக்களுக்கு சொல்ல வருவது என்ன? ஒரு படம், கருத்து என்று எதையும் கட்டாயமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், இப்படம் அதை வலிந்து செய்ய முயல்கிறதோ என்று எண்ணும் வகையில்தான், அதன் பல வலுவான அரச சபை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சனாதன தர்மமும், அதை தக்கவைக்க வேண்டிய சம்பந்தப்பட்டவர்களின் அவசியமும்தான் இப்படத்தின் மையக் கருத்தாக உள்ளது. நிலமானிய அமைப்பு எனும் கொடுங்கோன்‍மையின் வளர்ச்சியடைந்த நிலையான மன்னராட்சி முறையில் பின்பற்ற வேண்டிய சத்திய – தருமங்கள் பற்றி பாடம் எடுக்க முயல்கிறார்கள்.

சத்தியமும் நேர்மையுமே உருவான ராஜமாதாவின் (ரம்யா கிருஷ்ணன்) தேசத்தில், பிரமாண்ட கோட்டை வளாகத்திற்குள் கணக்கிலடங்காத செல்வம் கொழித்திருக்க, அந்த ராஜ்யத்தின் சாதாரண மக்களோ, வறுமை தவிர வேறெதையும் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், எஜமான விசுவாசம் அவர்களிடத்தில் ஊட்டி வளர்க்கப்படுகிறது. அரியணையை தன் சித்தப்பா மகன் பாகுபலிக்கு விட்டுத்தருவதாய் நடிக்கும் பல்லாளத் தேவனுக்கு, அவனின் தாயாரும், ராஜமாதாவுமானவர், ஒரு பிரமாண்ட, அதேசமயம் அழகான ஒரு வசந்த மாளிகையை எழுப்பத் திட்டமிடுகிறார். மக்களோ, ஓட்டைக் குடிசையில் வாழ்கிறார்கள். தன் மகனுக்கு பெண் கேட்க செல்லும் குழுவினரிடம், ஏராளமான விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்தனுப்புகிறார் சத்தியத்தின் வடிவமாக திகழும் ராஜமாதா. யார் எப்படி போனாலும் என்ன, தன் சொல் நிறைவேற்றப்பட வேண்டுமென துடிக்கிறார் நீதியின் மறுவடிவமான ராஜமாதா. இத்தகைய ஒரு ராஜமாதாவின் மீதும், அவரின் வழி நடப்பதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாய் கொண்டவனுமாகிய பாகுபலி மீதும், அந்நாட்டின் பாவப்பட்ட, பரதேசி வாழ்வு வாழும் மக்கள் பெரும் அன்பும், விசுவாசமும் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அரச குடும்பத்தவர் கொலை குற்றம் செய்தாலும், அதற்கான அதிகபட்ச தண்டனை, கோட்டை வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது மட்டுமே…

படத்தின் இறுதியில் மன்னராக முடிசூட்டிக் கொள்ளும் ஜுனியர் பாகுபலி, வாக்குறுதி சாசனம் வழங்கும்போது, அதை ஏன் தனது பாட்டி ராஜமாதா சிவகாமி தேவியின் சாட்சியாக வழங்க வேண்டும். தன்னைப் பெற்ற அன்னையும், 25 ஆண்டுகாலம் சங்கிலியால் பூட்டப்பட்டு சொல்லொணா வேதனைகளை அனுபவித்தவரும், பல்லாள தேவனின் ஆசைக்கு இணங்காதவரும், எவ்வளவு சோதனைகள் நேர்ந்தபோதும் தன் உறுதியிலிருந்து மாறாதவரும், நடப்பு ராஜமாதாவுமான தேவசேனையின்(அனுஷ்கா) பெயரால் ஏன் வழங்கியிருக்கக் கூடாது…? சரி, அதை விடுங்கள்; தன்னை பச்சைக் குழந்தையாக இருக்கும்போதே மன்னராக அறிவித்தவர் அந்த சிவகாமி தேவி என்ற நன்றியுணர்வோ என்னவோ…!

எப்படிப் பார்த்தாலும், மன்னர் பாகுபலி வழங்கிய சாசனம், மன்னராட்சிக்குப் பொருந்தாத ஒன்றே.

ரியாலிட்டி உணர்வே இல்லை

இப்படத்தின் முதல் பாகத்தில் ஒரு பெரிய போர்க்கள காட்சி இடம்பெறும். இரண்டாம் பாகத்திலும் ஒரு போர்க்கள காட்சி வருகிறது. ஆனால், போரைத்தான் பார்க்கிறோம் என்ற உணர்வைக் கொண்டுவர மெனக்கெட வேண்டியுள்ளது. கிளாடியேட்டர், ட்ராய் மற்றும் கிங் ஆர்தர் போன்ற படங்களில் அந்த உணர்வு எப்படிப் பீரிட்டது…! போர்க்களத்தில் பல்லாளத் தேவன் பயன்படுத்தும் அந்த வாகனம் வேறு படத்தில் வருவதாயிற்றே…! இயற்கைக்கு மாறான பல அம்சங்கள் நிறைந்தவை என்று விமர்சிக்கப்படும் சீனாவின் ஷவோலின் படங்களையே மிஞ்சும் வகையில், சண்டைகளில் பல அமானுஷ்ய தன்மைகள் நிறைந்துள்ளன. ஒருவேளை, ஷவோலின் படங்களை மிஞ்சியாக வேண்டுமென்ற தனிப்பட்ட ஆசை ராஜமெளலிக்கோ அல்லது பாகுபலி குழுவினருக்கோ இருந்திருந்தால், அதற்கு யார் என்ன செய்ய முடியும்?

ராஜமாதாவின் கணவரும், ஒரு கையில் வாதநோய் தாக்கியவரும், வயதானவருமான நாசர், தன் கையால் ஆவேசத்துடன் கோட்டையின் ஒரு பெரியத் தூணை ஓங்கிக் குத்துகையில், அதன் ஒரு பகுதி பிய்ந்துகொண்டு, பறந்து சிதறுகிறது. இம்சை அரசன் புலிகேசி படத்தில் வரும் கொல்லனைப்(மனோபாலா) போன்ற ஒரு கொத்தானரை வைத்து அதைக் கட்டியிருப்பார்களோ என்று நாம் நம்மை சமாதானம் செய்ய முயன்றாலும்கூட, ஒரு கோட்டை விஷயத்தில் அப்படிப்பட்ட சமாதானத்தைக்கூட நம்மால் அடைய முடியாதுதான்.

அட, இது விளம்பரமப்பா…!

வறட்சியான சினிமா உலகில், வாடிக்கிடந்த மக்களின் சினிமா ரசனையை அபாரமாய் துளிர்க்கச் செய்து, அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி, இந்திய சினிமா பரிமாணத்தை அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய படம் என்றெல்லாம் எழுதப்படும் விமர்சனங்களையும், விளம்பரங்களையும் கண்டு எதற்காக எரிச்சலடைய வேண்டும்…? வணிக சினிமா உலகில் அவையெல்லாம் சகஜம்தானே…! நாம் அதற்கெல்லாம் பழகிவிட்டோம்தானே…!

தெற்கும்வடக்கும்

இன்று உலகளவில் 1500 கோடிகளைத் தாண்டி, வசூலை வாரிக் குவித்து, படக்குழுவினரை, பாகுபலியின் அரியாசனமே கிடைத்துவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது இத்திரைப்படம். இது, இந்திய சினிமாவிற்குள் நடக்கும் ஒரு வணிகப் போட்டி. வட இந்திய சினிமாக்களுக்கு, ஒரு தென்னிந்திய சினிமா, ஒரு பெரிய சவாலை எய்திருக்கிறது. அது அவர்களை ஆழமாகவோ அல்லது ஆழமின்றியோ குத்தியிருக்கலாம். பதிலுக்கு அவர்கள் எப்படி எய்யப் போகிறார்கள் என்பது இனிமேல் தெரியும்.

சினிமா என்ற கலையில் அரசியலும், பிரச்சாரமும் எப்போதுமே போட்டிப்போட்டு ஒன்றுக்கொன்று துருத்திக் கொண்டிருக்கும். ஆனால், அவற்றின்மேல் வணிகம் என்ற ஒன்று கிளைத்து வளர்ந்து, பிரமாண்டமாய் நிற்கிறது. அதை இப்போதைக்கு எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், அந்த வணிகப்போட்டி காப்பியடிப்பதில்தான் நடக்க வேண்டுமா…?

பாகுபலி ஒரு பொழுதுபோக்கு படம்தான்…ஆனால், அதில் சில தனித்துவ அம்சங்களும், ஆச்சர்யமூட்டும் காட்சிகளும் இருக்குமென்று நினைத்தவர்களுக்கு வழக்கமான ஏமாற்றமே மிச்சம்.

எது எப்படியோ…இதுவொரு பொழுதுபோக்குப் படமாக இருந்து நம் ரசிகர்களை மகிழ்விக்கட்டும்…! ஆனால், அந்த பொழுதுபோக்கு, கருத்தியல் சாராத ஒன்றாக இருப்பதே மிக முக்கியம்.

Prasanna Bharathi

Associate Editor - Udagam 360

Prasanna Bharathi has 9 posts and counting. See all posts by Prasanna Bharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *