போலியான தகவலை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான மத்திய உள்துறை அமைச்சகம்!
ஸ்பெயின்-மொராக்கோ நாடுகளின் எல்லையில் கடந்த 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகமானது இந்தியாவின் எல்லைப் பகுதியில் தான் அமைத்த மின்விளக்குகளின் புகைப்படம் என்று அதன் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“பூமியை நோக்கி ஒரு மிகப் பெரிய விண்கல் வந்து கொண்டிருப்பதால் இரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை கைபேசியை பயன்படுவதை தவிர்க்கவும்” , “உலகின் சிறந்த தேசிய கீதமாக இந்தியாவின் தேசிய கீதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவிப்பு”, “இந்த புகைப்படத்தை பாருங்கள்- இந்த பசுவின் வயிற்றில் உலக வரைபடம் அச்சு அசலாக தானாக உருவாகியுள்ளது” – மேற்கண்ட செய்திகள் உங்கள் பேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகளில் நாள்தோறும் உலா வரும் நூற்றுக்கணக்கான போலிச் செய்திகளுள் ஒரு சில…
போட்டோஷாப் என்ற ஒற்றை சாப்ட்வேரை வைத்துக்கொண்டு நாள்தோறும் எண்ணிடலங்கா அளவில் பரப்பப்படும் வதந்திகளால், தினசரி செய்தி படிக்கும் நபருக்கே ஒரு உண்மை செய்திக்கும், போலிச் செய்திக்கும் இடையேயான வித்தியாசத்தை இனங்காண முடியாத மோசமான நிலையில் நாம் உள்ளோம். இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையிலேயே போலியான புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருப்பது மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டின் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், மற்ற துறைகள் மற்றும் மாநிலங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. எனவே, மத்திய உள்துறை அமைச்சகமானது ஒவ்வொரு ஆண்டும் தான் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2016-2017ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், இந்தியாவின் எல்லைப் பகுதியை பிரகாசமான மின்விளக்குகளை அமைந்துள்ளதாக கூறி ஒரு புகைப்படத்தையும் இணைத்திருந்தது. ஆனால் அவ்வறிக்கையில் இணைக்கப்பட்ட புகைப்படமானது ஸ்பெயின்-மொராக்கோ நாடுகளின் எல்லைப் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டே எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளதால், அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நம்பகத்தன்மை மீது மிகப் பெரிய கேள்வியையும், சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டுள்ள அந்த அறிக்கை குறித்த பத்திரிகை செய்தியில் ஒன்றாக, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் மத்திய அரசு எடுத்த முயற்சியின் காரணமாக நாட்டின் எல்லைப்பகுதியின் 647 கி.மீ மின்விளக்கு ஒளியால் பிரகாசப்படுத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதை குறிக்கும் விதமாக அந்த ஆண்டறிக்கையின் 40-வது பக்கத்தில் “எல்லைப்பகுதியில் பேரொளி விளக்குகள்” என்ற விளக்கத்துடன் ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்புகைப்படமானது 2006ம் ஆண்டு ஸ்பெயினை சேர்ந்த ஜாவியர் மயனோ என்ற புகைப்படக்காரரால் ஸ்பெயின்-மொராக்கோ எல்லைப்பகுதியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
மத்திய உள்துறையின் இந்த அறிக்கையை மேற்கோள்காட்டி பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும், ஒன்றுக் கூட அந்த தவறான புகைப்படத்தை பயன்படுத்தியதாக தெரியவில்லை. ஆனால், இந்துத்துவ கொள்கைகளை பரப்புவதற்காக செயல்படும் சில இணையதளங்கள் இந்த புகைப்படத்தை மையமாக வைத்து, அதை மோடி அரசாங்கத்தின் அபார சாதனை என்ற பொய்யான தகவலை பரப்பி வருகின்றன. குறிப்பாக http://hindutva.info என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் தலையங்கத்தில் “இந்திய எல்லையில் மோடி அரசாங்கம் செய்த சாதனையை நீங்கள் பார்த்தால் பெருமிதமும், பாராட்டும் தெரிவிப்பீர்கள்” என்று கூறி அந்த தவறான ஸ்பெயின்-மொரோக்கோ புகைப்படத்தையும் இணைத்துள்ளது. மேலும், இந்த போலிச் செய்தியை இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று https://thefearlessindian.in போன்ற வலதுசாரி இணையதளங்களும் இந்த தவறான புகைப்படத்தை செய்தியாக வெளியிட்டுள்ளன. சமீப காலமாக இந்துத்துவ கொள்கைகளை பரப்பும் பல்வேறு இணையதளங்கள், சாதாரண செய்தி இணையதளங்கள் போன்ற போர்வையில் தொடங்கப்பட்டு போலிச் செய்திகளையும், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும் வெளியிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளன என்பது நினைவுகூறத்தக்கது.
நாட்டையே ஆளும் மத்திய அரசாங்கத்தின் மிக முக்கிய துறைகளுள் ஒன்றான மத்திய உள்துறையின் ஆண்டறிக்கையிலேயே போலியான தகவல் பரப்பப்பட்டிருப்பதற்கு மத்திய அரசின் மெத்தனத்தனமும், கவனக்குறைவுமே காரணமாகும். உலகமெங்கும் போலிச் செய்திகள் பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்திவரும் சூழ்நிலையில், மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய அரசே போலிச் செய்தியை பரப்பினால் அதை எங்கே போய் முறையிடுவது?