பேஸ்புக்குக்கு போட்டியாக களமிறங்கியுள்ள “ஹலோ”!

சமூக இணையதள உலகின் முடிசூடா மன்னராக விளங்கும் பேஸ்புக்குக்கு போட்டியளிக்கும் விதமாக சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட “ஹலோ” என்னும் புதிய சமூக இணையதளம் சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 “ஹலோ, வெறும் லைக்குகள் பெறுவதற்கான இடம் அல்ல, அன்பை பெறுவதற்காக, பகிர்வதற்காக  உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார் “ஹலோ” என்னும் புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ள ஆர்குட் புயுகோக்டன்.

சமூக இணையத்தளங்களின் தற்போதைய நிலை:

பேஸ்புக்கில் சில முதல் பல மணிநேரங்களை செலவிடுவது நம்மில் பலருக்கு  தினசரி வேலைகளில் ஒன்றாகவே மா(ற்)றிவிட்ட ஒன்றாகவும், புதிதாக ஒருவரை பார்த்தவுடன் அவரின் கைபேசி எண்ணை கேக்காமல் பேஸ்புக் ஐடியைக் கேட்கும் டிஜிட்டல் காலத்தில் நாம் உள்ளோம்! புதிய நட்பை உருவாக்குவதற்கும் பழைய நட்பை வளர்ப்பதற்கும், நாட்டு நடப்பை தெரிந்துகொள்வதற்கு, எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் தொழிலை பிரபலப்படுத்தும், விளம்பரப்படுத்தும் இடமாகவும் பேஸ்புக் உள்ளது.

ஆர்குட்டின் அபார வளர்ச்சியும், திடீர் வீழ்ச்சியும்:

சில ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 2008ம் ஆண்டுலேயே சமூக வலைத்தளங்கள் இந்த முக்கியமான இடத்தை பெற்றுவிட்டது எனலாம். ஆனால் அது பேஸ்புக் அல்ல! ஆர்குட், ஆம், 2004ம் ஆண்டு கூகிள் மென்பொறியாளரான ஆர்குட் புயுகோக்டன் என்பவரின் “இணையத்தின் மூலம் உலக மக்களை இணைக்க வேண்டும்” என்ற கனவின் விளைவாக கூகிள் நிறுவனத்தின் பிராண்டிங்குடன் 2004ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி “ஆர்குட்” வெளியானது. அந்தாண்டின் ஜூலை மாதத்திலேயே பத்து லட்சம் பேரையும், செப்டம்பர் மாதவாக்கில் இருபது லட்சம் பேரையும் கவர்ந்த ஆர்குட் 2008ம் ஆண்டு பல மில்லியன் பயனர்களுடன் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.

அபரிதமாக வளர்ந்து வந்த ஆர்குட், பேஸ்புக்கின் புதுமையான போட்டியை சமாளிக்க முடியாமல் 2010ம் ஆண்டு சரியத்தொடங்கியது. கூகுள் மற்றும் ஆர்குட் புயுகோக்டனின் பல்வேறு மீட்பு முயற்சிகளும் படுதோல்வி அடைந்ததால் 2014ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியோடு, ஆர்குட் தனது சேவையை நிறுத்திக்கொண்டது.

“ஹலோ” உருவாக்கப்பட்டதற்கான காரணம்:

ஆர்குட் இணையதளம்தான் தனது சேவையை நிறுத்திக்கொண்டதே தவிர, அதை உருவாக்கியவரான ஆர்குட் புயுகோக்டன் தனது முயற்சியை சிறிதும் நிறுத்திக்கொள்ளவேயில்லை. தற்கால சமூகத்திற்கு தேவையான கட்டமைப்பு உடைய ஒரு புதிய சமூகவலைத்தளத்தை உருவாக்கும் பணியில் ஆர்குட்டும் அவருடன் கூகுளில் பணியாற்றிய சிலர் என இருபது பேர் கொண்ட அணி கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பணியாற்றியது.

சமூகவலைத்தளத்தின் இலக்கணத்தை மீறியும், அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிச்செய்ய தவறிய  தற்போதைய சமூக இணையத்தளங்களுக்கு மாற்றாக தனது இணையதளம் இருக்கும் எனக் கூறிய ஆர்குட் புயுகோக்டன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அயர்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய எட்டு நாடுகளில் “ஹலோ” என்ற பெயரில் தனது புதிய சமூக இணையதளத்தை  வெளியிட்டனர்.

இந்தியா, ஜெர்மனி மற்றும் மெக்ஸிகோ போன்ற பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  

“ஹலோ” எப்படி செயல்படுகிறது?

ஹலோ, உங்களை உங்களைப்போன்று ஒரே எண்ணமுடைய, ஆர்வமுடைய மக்களுடனும், தகவல்களுடனும் இணைக்கும் என உறுதியளிக்கிறது. மேலும், நீங்கள் யார் என்றும், உங்களுக்கு பிடித்தவை என்னவென்றும்  இந்த உலகத்துக்கு வெளிப்படுத்தும் இடமாகவும், அர்த்தமுடைய நட்பு வட்டத்தை உருவாக்க பயன்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஹலோவின் கட்டமைப்பானது, பேஸ்புக்கின் சமூக அமைப்பையும், ட்விட்டரின் வடிவமைப்பையும் மற்றும் இன்ஸ்டாகிராம், ரெட்டிட், கூகிள் பிளஸின் முக்கிய அம்சங்களை கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் பயனர்களுக்கு பாயிண்ட்ஸ், காய்ன்ஸ், ரேவார்ட்ஸ் மற்றும் லெவெல்ஸ் போன்றவற்றுடன் கூடிய ஒரு கேமிங் அனுபவத்தை ஜாலியாக அளிக்கிறது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் மட்டுமே வெளியிடப்பட்டாலும் இதுவரை வெப் வெர்சன் குறித்த தகவல் இல்லை.

ஒரே எண்ணமுடையவர்களுடன் இணையுங்கள்!

நீங்கள் ஹலோவின் செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், பயனர் கணக்கை தொடங்கும்போது முதலாவதாக உங்களுக்கு விருப்பம் உள்ள விஷயங்கள் (அதை இங்கு “பெர்சோனஸ்” என்று அழைக்கிறார்கள்) அதாவது புகைப்படக்காரர், சினிமா, உணவுப்பிரியர், பயணங்கள் செய்ய விரும்புபவர், விலங்குகளை விரும்புபவர் போன்று எக்கச்சக்கமான விருப்பத்தேர்வுகள் உள்ளன. ஆனால் நீங்கள் ஏதாவது ஐந்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால், உங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் பெர்சோனாசை மாற்றிக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவேற்றுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளவோம். முதலில் நீங்கள் ஆப்பில் லாக்-இன் செய்ததற்கு சில பாய்ண்ட்ஸும், புகைப்படம் போஸ்ட் செய்ததற்கு சில பாயிண்ட்ஸ் என நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பாயிண்ட்ஸ், காய்ன்ஸ், ரேவார்ட்ஸ் அளிக்கப்பட்டு அதற்கேற்ற லெவெலும் முன்னேறும்!

மேலும், பேஸ்புக்கில் ‘குரூப்’  என்று அழைக்கப்படும் குழுக்களானது ஹலோவில் ‘கம்யூனிட்டி’ என்று அழைக்கப்படுகிறது. எவர் வேண்டுமானாலும் ஒரு கம்யூனிட்டியை உருவாக்கலாம், சேரலாம், பகிரலாம், விருப்பம் தெரிவிக்கலாம். உங்களுக்கு பிடித்ததை பிடித்தவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும், பலரை புதிதாக தெரிந்துகொள்வதற்கு, இவை அனைத்தையும் ஒரு அற்புதமான கேமிங் அனுபவத்தோடு பெறுவதற்கு நீங்கள் ரெடிதானே?

பேஸ்புக்குக்கு ஈடு கொடுக்குமா ஹலோ?!

டெக் உலகை பொறுத்தவரை நிரந்தரமானது என்று எதையும் அறுதியிட்டு கூறவியலாது. உலகம் முழுவதும் மொபைல் சந்தையில் முடிசூடா மன்னராக விளங்கிய நோக்கியாவின் வீழ்ச்சியைக் கண்டு இனி நோக்கியா எழவே எழாது என்று கருதப்பட்ட சூழ்நிலையில், முன்பைவிட பிரம்மாண்டமாக திரும்பி வந்துள்ளது நோக்கியா.

பேஸ்புக்குக்கு இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 20 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அதில் விரைவில் 10 கோடி பேரை தன்பக்கம் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ள ஹலோவுக்கு, இந்தியாவில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹலோ, பேஸ்புக்குக்கு ஈடு கொடுத்து பெற்றி பெறுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்! இது டிஜிட்டல் உலகம் நண்பர்களே, எது எப்போ எப்படி நடக்கும்னே சொல்லமுடியாது! எனவே, பொறுத்திருந்து பார்ப்போம்!    

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *