புதிய macOS முதல் HomePod வரை – #WWDC17 முக்கிய அறிவிப்புகள்!

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நேற்று தொடங்கிய ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் புதிய macOS, iOS, watchOS உள்ளிட்ட பல்வேறு புதிய சாப்ட்வேர் அப்டேட்களும், புதிய மேக் கணினிகள், ஐபாட் மற்றும் ஆப்பிளின் புதிய வரவான HomePod போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

பொதுவாக வருடத்தின் தொடக்கமென்பது ஜனவரி மாதம்தான். ஆனால், நமது வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் பல விதங்களில் ஆக்கிரமித்து வருவதால், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு, அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் வருடாந்திர டெவலப்பர் மாநாடுகளே வருடத்தை துவக்கிவைக்கின்றன. அதாவது இந்த டெவலப்பர் மாநாட்டில்தான் ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் கடந்த வருடம் சாதித்ததையும், எதிர்வரும் வருடம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடுவது வழக்கம்.

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு சில வாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான WWDC 2017, வழக்கமாக நடக்கும் சான் பிரான்சிஸ்கோவுக்கு பதிலாக 15 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவின் சான் ஜோஸில் நேற்று தொடங்கியது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரியான டிம் குக், அதிகரித்து வரும் டெவலப்பர்களின் எண்ணிக்கை மற்றும் iOS 10ன் சாதனைகளையும் பட்டியலிட்டு தனது பேச்சை தொடங்கினார். குறிப்பாக ஆப்பிளின் மிக இளவயது டெவலப்பர்ரான 10 வயதேயான ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவனையும், மிக மூத்த டெவலப்பரான ஜப்பானை சேர்ந்த 82 வயதான மூதாட்டியும் ஆப்பிளுக்கு பங்களிப்பதாக டிம் குக் பெருமையுடன் தெரிவித்தார். பிறகு ஆப்பிளின் பல்வேறு புதிய சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. அவற்றில் முக்கியமான அறிவிப்புகள் குறித்த தகவல்களை இங்கு காண்போம்.

1. புதிய macOS – High Sierra:

கணினிகள் (iMac) மற்றும் மடிக்கணினிகளுக்கான (MacBook) ஆப்பிளின் பிரத்யேக இயங்குதளமான macOSன் புதிய பதிப்பான ஹை சியரா (High Sierra) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 30 வருடங்களாக HFS என்பதே ஆப்பிளில் பைல் சிஸ்டமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், எளிமையான, பாதுகாப்பான மற்றும் அதிவேகமான புதிய பைல் சிஸ்டமான APFS நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஆப்பிளின் பிரௌசரான சஃபாரிதான் உலகிலேயே அதிவேகமானதென்றும், அதில் புதிதாக சேர்க்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆட்டோ-பிலே ப்ளாக்கிங் போன்றவை குறித்தும் அறிவிக்கப்பட்டன. மிக முக்கியமாக macOS ஹை சியராவானது  விர்ச்சுவல் ரியாலிட்டி பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர்த்து, போட்டோஸ் ஆப்பில் போட்டோக்களை எடிட் செய்வதற்காக பல்வேறு எளிமையான டூல்ஸ்களும், இயல்பான வகையில் பேசும் மெருகூட்டப்பட்ட சிறி குறித்தும் நேற்று அறிவிக்கப்பட்டன.

2. iOS 11:

ஆப்பிளின் அதிமுக்கியமான தயாரிப்புகளான ஐபோன்கள் மற்றும் ஐபாட்களின் இங்குதளமான iOSன் அடுத்த பதிப்பான iOS 11ன் சிறப்பம்சங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது, iOSன் தற்போதைய பதிப்பான iOS 10ஐ 86% பேர் பயன்படுத்துவதாகவும் ஆனால் ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பான நௌகட்டை வெறும் 7% பேர் மட்டுமே நிறுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. iOS 11ஐ முக்கிய சிறப்பம்சமாக ஒரே ஆப்பிள் ஐடியைக் கொண்டு சிறி, ஐமெசேஜ் போன்றவற்றின் பயன்பாட்டு தகவல்களை வெவ்வேறு ஆப்பிள் தயாரிப்புகளிடையே பரிமாறிக்கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐமெசேஜ் ஆப்பிலிருந்தே மற்றவர்களிடம் பணம் கேட்கும் – அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோனை ஒரே கையில் பயன்படுத்தும் வசதியும், மேம்படுத்தப்பட்ட லைவ் போட்டோஸ், ஸ்க்ரீன் ரெகார்டிங், 3D டச் மற்றும் QR கோடு சப்போர்ட் என பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

3. watchOS 4 மற்றும் tvOS:

உலகிலேயே அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்சான ஆப்பிள் வாட்சின் அடுத்த இயங்குதளமான watchOS 4 நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பதிப்பின் முக்கிய சிறப்பம்சமாக ‘சிறி பேஸ்’ என்னும் இயந்திர நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யும் மாயாஜாலத்தை ஆப்பிள் குறிப்பிடுகிறது. அதாவது நீங்கள் பயன்படுத்தும் ஆப்கள் மற்றும் பயன்பாட்டு முறையை புரிந்துகொண்டு சிறியே உங்களுக்கு தேவையான தகவல்களை முன்னிலைப்படுத்தி வழங்கும். மேலும், கலைடாஸ்கோப், ஊடி, ஜெஸ்ஸி, பஸ் லைட்இயர் உள்ளிட்ட புதிய அனிமேஷன் பாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்களது நீச்சல் மற்றும் உடற்பயிற்சி குறித்த புள்ளிவிவரங்களை துல்லிமாகவும், மற்ற கருவிகளுடன் எளிமையாக பகிரும் வகையிலான மாற்றங்களும், ஒரே சமயத்தில் பல செயற்பாடுகளை அளவிடும்  மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், மியூசிக் ஆஃப்பும் பல புதிய வசதிகளை பெற்றுள்ளது.

tvOS குறித்த முழுமையான தகவல்கள் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமேசான் வீடியோ சேவையை tvOS-யில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் tvOS குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

4. புதிய iMac மற்றும் MacBook:

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆப்பிள் தனது மேசை கணினி தயாரிப்பான iMac-யில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக iMac Pro என்னும் அதிநவீன கிராபிக்ஸ், ப்ரோசிஸோர், 5K திரை, 1080p பேஸ்டைம் கேமரா மற்றும் அதிவேகமான நினைவகங்களுடன் கூடிய கணினியை நேற்று அறிமுகம் செய்தது. MacBook Air ரக மடிக்கணினிகளை ஆப்பிள் நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் சிப்பை வேகப்படுத்தியும், MacBook Pro-க்கு ஏழாம் தலைமுறைக்கான இன்டெல் ப்ரோசிஸோர் மற்றும் முந்தையதைவிட பிரகாசமான திரையுடனும் அறிமுகப்படுத்தியுள்ளது.

5. புதிய iPad Pro 10.5:

கணினிகளில் செய்யப்படும் பெரும்பாலான வேலைகளை இன்னும் வேகமாகவும், எளிமையாக மட்டுமல்லாமல் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் அதிநவீன டேப்லெட்டான ஆப்பிளின் iPad Pro வரிசையில் புதியதாக 10.5 இன்ச் வகையும், பழைய 12.9 இன்ச் வகையில் மேம்படுத்தப்பட்ட திரை மற்றும் A10X ப்ரோசிஸோர் உடன் கூடிய வகையும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், முந்தைய பென்சிலை விட வேகமான புதிய பென்சிலையும் வெளியிட்டுள்ளது.

6. ஆப்பிளின் புதிய வரவான HomePod ஸ்மார்ட் ஸ்பீக்கர்:  

வீட்டிலுள்ள பல்வேறு பொருட்களையும் இயக்கும், நமது கேள்விகளுக்கு பதில் சொல்லும் மற்றும் நமக்கு பிடித்த பாட்டுக்களை கேட்டவுடன் பிலே செய்யும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சந்தையில் அமேசான் நிறுவனத்தின் எக்கோ, கூகுளின் கூகுள் ஹோம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடும்போது ஆப்பிள் நிறுவனம் மட்டும் சத்தமில்லாமல் இருந்து வந்தது. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் HomePod என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான், கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை விட நல்ல சத்தத்தையும், நமது கட்டளைகளை இரைச்சலான நிலையிலும் கிரகித்துக்கொள்ளும் வகையிலும் இதை உருவாக்கியுள்ளதாக ஆப்பிள் தெரிவித்தாலும் அதன் போட்டியாளர்களைவிட இரண்டு மடங்கு விலை அதிமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 22,500 ஆகும்!

மேற்கண்ட புதிய சாப்ட்வேர்களின் டெவலப்பர்களுக்கான பதிப்பு நேற்று முதலும், பொது பயன்பாட்டாளர்களுக்கான பதிப்பு செப்டம்பர் – டிசம்பர் காலகட்டத்தில் வெளியிடப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் எதிர்கால போட்டிகளை எதிர்கொள்ள தேவையான ARKit என்னும் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி ஆப்களை உருவாக்க தேவையான வழியை டெவெலப்பர்களுக்கு நேற்று அளித்துள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிளின் பிரத்யேக விர்ச்சுவல் ரியாலிட்டி கருவி, ஆண்ட்ராய்டிலும் இயங்கும் ஐமெசேஜ் ஆஃப், ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி கிளாஸ் போன்றவை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படாதது ஏமாற்றமே ஆகும். மேலும், சமீபத்தில் நடந்த கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான I/O அளித்த எதிர்கால தொழில்நுட்பம் குறித்த உற்சாகம் மற்றும் நம்பிக்கையை அளிக்க ஆப்பிள் தவறவிட்டதைப் போன்றே தெரிகிறது!

*மேற்கண்ட கட்டுரையானது, “ஊடகம் 360” இணையதளத்தின் முதன்மை ஆசிரியரால் விகடன் இணையதளத்திற்காக எழுதப்பட்டதாகும்.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *