பாரதிராஜாவின் படங்களும் ஆச்சர்யங்களும்…!

16 வயதினிலேசிகப்பு ரோஜாக்கள்

கடந்த 1977ம் ஆண்டு வெளியாகி, தமிழ் திரைத்துறையின் போக்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய படம்தான் ’16 வயதினிலே’. பாரதிராஜா என்ற மதுரை மாவட்ட(அன்றைய) இயக்குநர் அனைவரையும் ஆச்சர்யத்துடன் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார். இயல்பான கிராமியச் சூழலை, தமிழில் முதன்முதலாக எடுத்துக்காட்டியப் படம் என்ற வகையில், இன்றளவும் அது தமிழின் சிறந்த படங்களில் ஒன்று.

அப்படத்தில், அன்றைய காலகட்டத்தில் வெகு பிரபலமாக இருந்த கமல்-ஸ்ரீதேவி இணையை பயன்படுத்தினார். அப்படத்தின் முடிவானது, கமலஹாசன், வில்லன் ரஜினியைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்றுவிட, அவர் வருவார் என்ற நம்பிக்கையில், நெடுங்காலம் காத்துக் கொண்டிருப்பார் சட்ட நுணுக்கங்கள் ஏதும் அறியாத அப்பாவி கிராத்து மயிலு (ஸ்ரீதேவி). இறுதியில் கமல் வந்தாரா, இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது.

ஆக, இந்தப் படத்தின் முடிவானது, நாயக – நாயகி இருவரும் இணை சேர்வதாக அமைந்திருக்காது.

சிகப்பு ரோஜாக்கள்

1978ம் ஆண்டின் பிற்பாதியில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ஒரு சிட்டி சப்ஜெக்ட் த்ரில்லர் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இதிலும், தான் பயன்படுத்திய முதல் ஜோடியான கமல்-ஸ்ரீதேவி இணையையே பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ஆனால், ’16 வயதினிலே’ போல் அல்லாமல் இதுவொரு நகரத்து கதை. அப்படத்திலே, இருவரும் இணைவதற்கு முன்னதாகவே பிரிந்து விடுவார்கள். ஆனால், இங்கே திருமணமெல்லாம் செய்து கொள்வார்கள். ஆனால், இறுதியில் பிரிந்து விடுவார்கள். சைக்கோ கமலின் தவறுகள் அனைத்தும் வெளியே தெரிந்து, அவர் சிறைக்கு சென்றுவிடுவார். அவர் மனதில் ஸ்ரீதேவியின் பெயரான சாரதா என்பது மட்டுமே எஞ்சியிருக்கும். அப்பெயரை சிறை சுவரில் எழுதிக் கொண்டேயிருப்பார். அவர் எப்போது மீண்டு வருவார் என்று ஸ்ரீதேவி காதலுடன் காத்துக்கொண்டே இருப்பார். இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பது தெரியாது.

ஆக, மயிலு போலவே, இந்த சாரதாவும் தன் நாயகனுக்காக இறுதியில் காத்துக்கொண்டே இருக்கிறாள். தனது ’16 வயதினிலே’ மற்றும் ‘சிகப்பு ரோஜாக்கள்’ ஆகிய 2 படங்களில் தான் பயன்படுத்திய ஒரே ஜோடியை, முடிவில் பிரிக்கும் வகையிலேயே திரைக்கதையை கையாண்டிருக்கிறார் பாரதிராஜா…! ’16 வயதினிலே’ அவரின் முதல் படம், ‘சிகப்பு ரோஜாக்கள்’ அவரின் மூன்றாவது படம். இரண்டுமே மிகச் சிறந்த வெற்றிப் படங்கள்.

கிழக்கே போகும் ரயில்நிறம் மாறாத பூக்கள்

சுதாகர் – ராதிகா ஆகிய இருவரும் அறிமுகமான படம்தான் ‘கிழக்கே போகும் ரயில்’. இது பாரதிராஜாவின் இரண்டாவது படம். ’16 வயதினிலே’ போலவே, இதுவும் ஒரு கிராமியப் படம்தான். இப்படத்தில், சுதாகரும், ராதிகாவும் ஜாதியப் பிரச்சினையால் சேர முடியாமல், இறுதியில் ஊரை எதிர்த்து ஓடிப்போய் சேர்ந்து கொள்வார்கள்.

அதே ஜோடியை தனது ஐந்தாவது படமான ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்திலும் பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ஆனால், இதுவொரு சிட்டி சப்ஜெக்ட் படம். இதிலும், காதலர்களான சுதாகரும், ராதிகாவும் வர்க்கப் பிரச்சினையால் (பொருளாதார பேதம்) சேர முடியாமல், இறுதியில் இன்னொரு நாயகன் விஜயனின் உதவியால் ஓடிப்போய் சேர்ந்து கொள்வார்கள்.

ஆக, ஒரே ஜோடிகள் நடித்த இரண்டு படங்களிலும், முடிவு ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

மண்வாசனைபுதுமைப்பெண்

பாண்டியன்-ரேவதி ஆகிய இருவரும் அறிமுகமான படம் ‘மண்வாசனை’. இதுவொரு கிராமியப் படம். இப்படத்தில், தொடக்கத்திலிருந்தே இருவரும் இணைவதில் பல பிரச்சினைகள். இடையில், பாண்டியன் வேறொரு வடக்கத்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்வார். ஊர்க்காரர்கள், ரேவதியை இரண்டாம் தாரமாக, பாண்டியனுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிக்கையில், ரேவதி அதற்கு மறுத்துவிடுவார். கடைசி சண்டைக் காட்சியில், அந்த வடக்கத்தியப் பெண் உயிர் தியாகம் செய்ய, ரேவதியோ, வில்லன் வினுசக்கரவர்த்தியை கொலைசெய்து விடுவார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், படம் நிறைவுறும். ரேவதி ஜெயிலுக்கு சென்றாரா? பாண்டியன் – ரேவதி திருமணம்? இத்தகைய கேள்விகளோடு முடிவடையும் படம் இது.

புதுமைப் பெண்

இப்படம், ஒரு நகரத்துப் படம். அதே பாண்டியன்-ரேவதி ஜோடி. சில எதிர்ப்புகளுக்குப் பிறகு(பாண்டியன் தரப்பிலிருந்து), இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள். திருமண வாழ்வில், பாண்டியனின் மேலதிகாரி மூலமாக பிரச்சினை வர, பாண்டியன் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு சிறை சென்றுவிடுவார். அவரை மீட்பதற்காக கடுமையாக போராடும் ரேவதி, இறுதியில் தன் முயற்சியில் வெற்றியடைகிறார். ஆனால், பாண்டியனோ, ரேவதி குறித்தான தன் தாயின் அபாண்ட பழியால் மனம் மாறி, ரேவதியை சந்தேகப்படுகிறார். இதனால், மனம் வெறுத்து வெகுண்டெழும் ரேவதி, பாண்டியனைப் பிரிந்து வெளியேறும் நிலையில் படம் நிறைவடையும். எனவே, இப்படத்திலும் அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பது தெரியாமலே போய்விடும்.

அலைகள் ஓய்வதில்லைவாலிபமே வா வா

முகங்களில் குழந்தைத்தனம் கொண்ட கார்த்திக் – ராதா ஆகிய இருவரும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். இப்படம், ஒரு கடற்கரை கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், இதையும் நாம் கிராமத்துப் பட வரிசையில்தான் சேர்க்க முடியும். இப்படத்தில் மத வேறுபாடு உள்ளிட்ட சில சிக்கல்களால் பெரும் போராட்டங்களுக்கு இடையில்தான் கார்த்திக் – ராதா ஜோடி கிளைமாக்ஸில் இணைவார்கள்.

இந்த இருவரையும் வைத்து பாரதிராஜா எடுத்த இரண்டாவது படம் நகர வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘வாலிபமே வா வா’. இதிலும், காதலர்களான கார்த்திக்கும் ராதாவும் சில போராட்டங்களுக்குப் பின்னரே இணையும் நிலை வரும். ஆக, எப்படியோ இரண்டு படங்களிலுமே அவர்கள் இணைந்துவிடுவார்கள்.

ஒற்றுமை

ஆக, மேற்கண்ட 8 படங்களையும் அலசினால், சில விஷயங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை;

கமல்-ஸ்ரீதேவி, சுதாகர்-ராதிகா, பாண்டியன்-ரேவதி மற்றும் கார்த்திக் – ராதா ஆகிய இணைகளை வைத்து எடுத்த முதல் படங்கள் கிராமத்துப் படங்களாகவும், அதே இணைகளை வைத்து எடுத்த இரண்டாவது படங்கள் நகரத்துப் படங்களாகவும் உள்ளன. இணைகள் தொடர்பான படங்களின் முடிவுகளும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன.

கார்த்திக்ராதா ஜோடி

தமிழில் பாரதிராஜாவின் சிறந்த மற்றும் வித்தியாசமான முயற்சிகளைக் கொண்ட படம் ‘நிழல்கள்’. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த விரக்தியில், அடுத்ததாக எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’. இதன் ஜோடி கார்த்திக்-ராதா. (‘நிழல்கள்’ படம் வெற்றி பெற்றிருந்தால் நான் உலக சினிமாவின் பக்கம் சென்றிருப்பேன் என்று பாரதிராஜா பின்னர் ஒரு பேட்டியில் வருத்தமுடன் கூறியிருந்தார்)

பாரதிராஜா எடுத்த ‘காதல் ஓவியம்’ ஒரு வித்தியாசமான படம். ஆனால் தோல்வியை சந்தித்தது. அந்த விரக்தியில் எடுக்கப்பட்ட அடுத்த கமர்ஷியல் படம்தான் ‘வாலிபமே வா வா’. இதன் ஜோடியும் கார்த்திக்-ராதா.

ஆக, வித்தியாசமான படங்களின் தோல்விக்குப் பிறகு, கமர்ஷியல் படம் எடுக்கும் வெறிகொண்ட பாரதிராஜாவுக்கு இரண்டுமுறை கிடைத்தவர்கள் கார்த்திக்-ராதா ஜோடிதான். விரக்தியில் எடுத்த ஒரு கமர்ஷியல் படமான ‘அலைகள் ஓய்வதில்லை’ நன்றாக ஓட, இன்னொரு விரக்தி கமர்ஷியல் படமான ‘வாலிபமே வா வா’ படம் ‍தோல்வி. (இப்படம் தோல்வியடையக்கூடிய படமல்ல என்பது என் கருத்து. ஆனாலும், தமிழ் ரசிகர்களைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியாதே..!). இதில் ஒரு வருத்தமான சுவாரஸ்யம் என்னவென்றால், அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு(பாரதிராஜாவின் முதல் படமான ’16 வயதினிலே’ தயாரிப்பாளர்) ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் பாரதிராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் நீண்ட இடைவெளிவிட்டு, இப்படத்தில்தான் பாரதிராஜாவுடன் மீண்டும் தயாரிப்பாளராய் இணைந்திருப்பார். ஆனால், அவர்களின் மறுஇணைவு தோல்விப் படமாக அமைந்துபோனது..!

‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ மற்றும் ‘காதல் ஓவியம்’ ஆகிய 3 படங்களுக்குமே திரைக்கதை வசனம் மணிவண்ணன் என்பது கவனிக்கத்தக்கது.

ராஜா

பாரதிராஜாவால் ‘கடலோரக் கவிதை’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜா என்ற ரசிக்கத்தக்க, ஒரு அமைதியான முகம் கொண்ட அழகான நடிகர். ஆனால், பாரதிராஜாவின் படங்களில் இவரின் கதாபாத்திரம் பாவப்பட்டது. தான் விரும்பிய பெண்ணுடன் இவரால் சேர முடியாது.

‘கடலோரக் கவிதைகள்’ படத்தில், தான் விரும்பும் ரேகாவுடன் இவரால் இணைய முடியாது. ‘வேதம் புதிது’ படத்தில் விரும்பிய அமலாவுடன் சேர முடியாது. ‘கருத்தம்மா’ படத்தில் விரும்பிய ராஜஸ்ரீயுடன் சேர முடியாது. ‘கேப்டன் மகள்’ படத்தில்தான் இவருக்கு ஒரு ஆறுதல். இவர் காதலித்த குஷ்புவை மணந்து, சம்சாரியாக வாழவிட்டிருப்பார் பாரதிராஜா. ஆனாலும், இவராக சென்று குஷ்புவை காதலிக்க மாட்டார். குஷ்புதான் வலியவந்து இவரைக் காதலிப்பார். ஒருவேளை இவராக முதலில் விரும்பி காதலித்திருந்தால் அப்படத்திலும் இவரின் நிலை என்னவாகியிருக்குமோ…!

ரஜினிகமல்

பாரதிராஜா ரஜினியுடன் ’16 வயதினிலே’ செய்தபிறகு, நீண்ட இடைவெளிவிட்டு, ‘கொடி பறக்குது’ படத்தில்தான் இணைந்தார். ஆனால், அது படுதோல்வி.

ஆனால், கமலுடன் ’16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘ஒரு கைதியின் டைரி’ ஆகிய 4 படங்கள் செய்திருக்கிறார். அனைத்துமே வெற்றிப் படங்கள் மற்றும் ஓரளவு ஓடிய படங்கள்.

நடிகைகள்

பாரதிராஜா, தான் அறிமுகப்படுத்தும் நடிகைகளுக்கு ரகர வரிசையில் பெயர் வைப்பார் என்பது ஒரு பொதுக் கருத்து. அதன்படியே, ராதிகா, ரோகிணி (நிழல்கள்) ரதி (புதிய வார்ப்புகள்), ரேவதி, ராதா, ரஞ்சிதா, ரஞ்சனி (முதல் மரியாதை), ரேகா, ராஜஸ்ரீ (கருத்தம்மா), ரமா (என்னுயிர் தோழன்), ரியா சென் (தாஜ்மகால்), ருக்மணி(பொம்மலாட்டம்) ஆகியோர் வரிசைக் கட்டி நிற்க,

அருணா மற்றும் விஜயசாந்தி (கல்லுக்குள் ஈரம்), சுகன்யா (புதுநெல்லு புது நாத்து), ஸ்வப்னா (டிக் டிக் டிக்) போன்ற சில விதிவிலக்குகளும் உள்ளனர் (ஒருவேளை அவர்கள் ஏற்கனவே வேறுமொழி படங்களில் நடித்திருப்பார்களோ…!)

இளையராஜாவின் இசை

பாரதிராஜாவைப் பொறுத்தவரை, அவரிடம் இருக்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம், இளையராஜாவின் இசையை முடிந்தளவிற்கு சிறப்பாக பாடல்களாக காட்சிப்படுத்திவிடுவார். அதற்காக அவர் மெனக்கெடவும் செய்வார்.

 

தேவதைகளை உலவ விட்டோ, கைக் குட்டைகள் மற்றும் கடிதங்களைப் பறக்கவிட்டோ, சூரியகாந்தி தோட்டங்களில் ஓடவிட்டோ, சேலைகளைப் பறக்கவிட்டோ, உறுத்தாத வகையில் சிறியளவில் செட்டிங் அமைத்தோ அல்லது லாங் வியூ மற்றும் ஷார்ட் வியூ மாறிமாறி வைத்தோ, ஒரு பாடலை முடிந்தளவிற்கு அழகானதாக மாற்றிவிடுவார். இந்த விஷயத்தில், இவர் அவரின் சமகால இயக்குநர்களைவிட முன்னணியில் இருக்கிறார். ‘புதுமைப்பெண்’ படத்தில் வரும் ‘ஒரு காதல்…மயக்கம்’ என்ற பாடலை இவரின் ரசனைக்கு ஒரு உதாரணமாய் கூறலாம். இவருக்கு அடுத்து, மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்களுக்கு நாம் இடம் தரலாம்.

ஆனால், ‘தென்றலே என்னைத் தொடு’ என்ற படத்தை இயக்கிய பெயர்பெற்ற இயக்குநர் ஸ்ரீதர், அப்படத்தின் அற்புதமான பாடல்களை தனது காட்சியமைப்பின் மூலம் நாசம் செய்திருப்பார். இவரையெல்லாம் எப்படி சிறந்த இயக்குநர் என்கிறார்கள்? என்று கேட்பதுபோல் அவரின் அபத்தம் அப்படத்தில் இருக்கும். மற்றபடி, மணிவண்ணன் மற்றும் சுந்தர்ராஜன் போன்றவர்களை பரவாயில்லை ரகத்தில் சேர்க்கலாம்.

குறிப்பு

பாரதிராஜாவின் படங்களைப் பற்றிய ஒரு மேலோட்டமான கலை ஒப்பீடுதான் இப்படைப்பே தவிர, அவரின் படங்களைப் பற்றிய சமூக விமர்சனங்கள் தொடர்பானதல்ல.

Prasanna Bharathi

Associate Editor - Udagam 360

Prasanna Bharathi has 9 posts and counting. See all posts by Prasanna Bharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *