நோக்கியா 3310-ன் கம்பேக்..! அதன் வசதிகள் நினைவிருக்கிறதா?

12 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையான நோக்கியா நிறுவனத்தின் மிக வெற்றிகரமான மொபைல்களில் ஒன்றான “நோக்கியா 3310”, இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில், கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியிடப்படுகிறது.

எத்தனை புதிய வசதிகளுடன் கூடிய ஆப்பிளின் ஐபோன்கள், கூகுளின் பிக்ஸல் மொபைல்கள், சாம்சங்னின் காலக்ஸிகள், சோனியின் எக்ஸ்பீரியாக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொபைல்கள் சந்தையில் அறிமுகமானாலும் நோக்கியா மொபைல்களில் கிடைத்த எந்த சூழ்நிலையையும் தாங்கும் வடிவமைப்பும், பல நாட்கள் நீடித்துழைக்கும் பேட்டரியும், அதற்கும் மேலாக அளிக்கும் பணத்திற்கு நிறைவான திருப்தியும், முதன்முதலாக விளையாடிய ‘சினேக்’ கேமையும் எவராலும் மறக்கவியலாது எனலாம்.

பின்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனமான நோக்கியா, மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதாவது 1987-லேயே தனது முதல் மொபைல் போனை வெளியிட்டு சந்தையில் நுழைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் புதுப்புது மொபைல்களை வெளியிட்ட நோக்கியா தனது 3310, 1100, 6600, N73 உள்ளிட்ட பல வெற்றிகரமான போன்களை வெளியிட்டது. ஆனால் 2008-ல் வெளியிடப்பட்டு பின்பு மெதுவாக மொபைல் சந்தையை தன்னை நோக்கி இழுக்க ஆரம்பித்த ஆண்ட்ராய்டின் முன்பு நோக்கியாவின் முயற்சிகள் எடுபடாமல் போனது. அப்போது தொடங்கிய நோக்கியாவின் வீழ்ச்சி 2011-ல் மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து பணியாற்றியபோதும் தொடர்ந்தது.

இந்நிலையில் கடுமையான விற்பனை வீழ்ச்சியின் காரணமாக திணறிய நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2013ல் $7.6 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது. அதன் பிறகு லுமினா என்ற பெயரில் மைக்ரோசாப்ட் வெளியிட்ட மொபைல்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எனலாம். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் பின்லாந்தை சேர்ந்த HMD Global என்னும் நிறுவனத்திற்கு தனது பெயரையும், மொபைல் தயாரிப்பு உரிமங்களையும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு மக்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு மொபைல் கடந்த மாதம் சீனாவில் மட்டும் இதுவரை விற்பனைக்கு வந்து மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கிட்டத்தட்ட வெளியிடப்பட்டு 16 வருடங்கள் ஆனாலும் மக்களிடையே நீங்கா இடத்தை பிடித்த 3310 மாடல் மொபைலை மீண்டும் இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் வெளியிடவிருப்பதாக HMD Global நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 3310

நோக்கியாவின் வடிவமைப்பாலும், சிறப்பசங்கள் மற்றும் பேட்டரி திறனாலும் கவரப்பட்டவர்கள், நோக்கியா அதன் அதிகாரப்பூர்வ தயாரிப்பை நிறுத்திய சூழலிலும், அதிகாரபூர்வமற்ற நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் 1100, 3310 மொபைல்களை வாங்குவோர் இன்றும் உள்ள நிலையில் HMD Global நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாட்டு மக்களினாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 1100 மற்றும் ஐபோன் ஒப்பீடு எப்போதும் பிரபலமான ஒன்று. அதேபோல் நோக்கியா 3310-ன் வசதிகள் மற்றும் தற்போதைய ஐபோன் 7 இடையேயான ஒப்பீடு இதோ…

 
சிறப்பம்சங்கள் நோக்கியா 3310 ஐபோன் 7
எடை 133 கிராம் 138 கிராம்
தாங்கும் திறன் 10 அடி தூரத்திலிருந்து தூக்கியடித்தாலும் தாங்கும்! பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தாலே திரை உடையும் வாய்ப்பு உண்டு.
விலை  ரூ. 3500 (எதிர்பார்க்கப்படும் விலை) ரூ. 60000
கேமரா இல்லை. 12MP
சிறந்த கேம் சினேக் போக்கிமேன் கோ

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *