நான் பேசுவது ஒரு ரஜினி ரசிகனிடம்…

அன்பார்ந்த ரஜினி ரசிகனே…!

■ 1975ம் ஆண்டு தனது முதல் படத்திலேயே வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, பலரையும் கவர்ந்த உன் தலைவர் ரஜினிகாந்தை, ஒரு நடிகராக நாம் என்றுமே குறைத்து மதிப்பிட்டதில்லை. அவர் மிகவும் திறமையான நடிகர். நடிப்பில் பலவித பரிமாணங்களிலும் அசத்தும் வல்லமை கொண்டவர்.

■ கமலஹாசன் போன்ற ஆளுமைகளை வேறுவிதமாக சமாளித்து, தன் துறையில் கொடி நாட்டிய உன் தலைவர், சுமன் போன்ற ஆளுமைகள் திடீரென முளைத்து தனக்கு நேரடி போட்டியானபோது, அந்த சவாலை முறியடித்த திறம் அபாரமானது என்பதை நீ அறிந்திருப்பாயா? என்று எனக்குத் தெரியாது.

■ சினிமாவில் தனது முதல் இடத்தை தக்கவைக்க உன் தலைவர் கையாண்ட வித்தைகளையெல்லாம் அறிந்த யாரும் பிரமிக்கவே செய்வார்கள். எம்.ஜி.ஆரைப் போன்று, மாறும் ரசிகனின் ரசனைக்கேற்ற படங்களை வழங்கி, தன் இடத்தை தொடர்ந்து தக்கவைத்திருக்கும் உன் தலைவரைப் பற்றி, அவர் ஒரு சினிமா நடிகர் என்ற முறையில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும்  எப்போதும் இருந்ததில்லை.

■ 1995ம் ஆண்டு அதிமுக அரசின் அமைச்சராக அப்போது இருந்த ஆர்.எம்.வீரப்பனுடைய சத்யா மூவிஸின் ‘பாட்சா’ பட வெற்றிவிழாவில் உன் தலைவர் காட்டிய திடீர் ஆவேசம், அதைத்தொடர்ந்த வீரப்பனின் பதவியிழப்பு, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கோபக் கனலில் இருந்து தப்பிக்க திமுக-வினர் செய்த உதவிகள் என்று அரசியல் உலகை திடீர் பரபரப்புக்குள்ளாக்கினார் உன் தலைவர்.

■ ரசிகர் மன்றங்களில் டிக்கெட் விற்பனை மூலமாக மட்டுமே சற்று ஆதாயமடைந்து வந்த நீங்களெல்லாம், தலைவர் இனி அரசியல் புயலாக மாறப் போகிறார்; நாமெல்லாம் எங்கோ செல்லப் போகிறோம் என்று கற்பனையில் மிதந்திருப்பீர்கள். (இல்லையில்லை, நானெல்லாம் அப்படி இல்லை என்று நீ சொன்னாலும் அதை நான் மறுக்கப்போவதில்லை). ஆனால், தேர்தலுக்கு முன்னரே ஜெயித்துவிட்ட திமுக-தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்ததோடு உங்கள் தலைவர் ஒதுங்கிக் கொண்டார். அதற்கு காரணம் அவருக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டுமே தெரியக்கூடியவை. அப்போதே, உன்னைப் போன்ற ரசிகர்களெல்லாம் நொந்து வெந்து போயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

■ 1996 தேர்தல் மூலம் உன் தலைவர் ஒரு வணிக பாடத்தைக் கற்றுக்கொண்டாரோ அல்லது கற்றுக்கொடுத்தார்களோ என்னவோ…! தன் ரசிகர்களை அவ்வப்போது அரசியல் ஜுரத்திலேயே வைத்திருக்க வேண்டுமென்று. அதை அடுத்த பல்லாண்டுகள் பயன்படுத்தி வந்துவிட்டார்…! ஆனால், 1996 தேர்தலுக்குப் பின்னர் வந்த சில தேர்தல்களில் அவர் உண்மையாகவே வாய்ஸ் கொடுத்துப் பார்த்தார்; ஆனால், வந்ததென்னவோ வெறும் காற்றுதான்…சத்தத்தையேக் காணோம்…!

■ தமிழகத்தின் இப்போதைய அரசியல் சூழ்நிலையில், உன் தலைவருக்கு சிலரிடமிருந்து நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன என்பது எமக்கெல்லாம் நன்றாகவேத் தெரிகிறது. ஆனால், அதை சமாளிக்கும் வழியும் உன் தலைவருக்கு நன்றாகவேத் தெரியும் என்பதும் எமக்குத் தெரியும். ஆனால், அவருக்கோ ஆசை வந்துவிட்டது போலும். தனித்துநின்று போனியாக முடியாத யாரோ சிலர், என்னவென்றே தெரியாத உன் தலைவரின் செல்வாக்கை நம்பி அவரை நன்றாக ஏற்றி விட்டிருக்கிறார்கள் போலும்.

■ நடத்தலாமா…வேண்டாமா….என்று திரும்ப திரும்ப யோசித்து நடத்தப்பட்ட உங்களையெல்லாம் சந்திக்கும் நிகழ்ச்சியில், உன் தலைவர் தன் ஆசையை ஓரளவுக்கு வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். இப்படி எதுவும் கிடைக்காதா என்று எப்போதுமே அலையும் வெகுஜன மீடியாக்களும் உங்கள் தலைவரின் பேச்சை இப்போதைய டிரெண்ட் ஆக்குகின்றன.

ரசிகனே…!

1.  உன் தலைவர் இதுவரை இந்த மாநிலத்திற்கு என்ன நல்லது செய்திருக்கிறார்?

2. சாதாரண அக்கடா துக்கடா நடிகர்கள் மற்றும் வேற்றுமொழி நடிகர்கள் செய்திருக்கும் நன்மைகளைக்கூட உன் தலைவர் செய்திருக்கிறாரா?

3. தன் படங்களின் வணிக நலனைத் தவிர, வேறெதையும் சிந்திக்காத உன் தலைவர் பொதுவாழ்வுக்கு தகுதியானவரா?

4. முள்ளிவாய்க்கால் கோரம் என்ற மனித இனப் படுகொலையை ‘நான் கண்டிக்கிறேன்’ என்றுகூட கருத்துசொல்ல மனமில்லாதவர் அல்லது துணியாதவர் அரசியல் கடலில் குதித்து எப்பக்கம் நீந்துவார்?

5. நடிகர் சங்கப் பிரச்சினையில்கூட, பட்டும்படாமல் நடந்துகொண்டு, தன் மண்டபத்தில் கூட்டம் நடத்திய இரு அணியினருக்கும் வாடகைக்கான பில் அனுப்பி வைத்தவர் என்று கூறப்பட்டவர், நாளைக்கு நாட்டின் பிரச்சினையில் எந்த நிலை எடுப்பார்?

6. பிறருக்கு உதவுவதின் அதிகபட்ச வரம்பு ஒரு லட்சம் என்ற கொள்கையைக் கொண்டிருப்பதாக கூறப்படும் ஒருவர், நாளை யாருக்கு என்ன செய்துவிடப் போகிறார்?

7. தன்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு உடல்-பொருள்-ஆவியை தருவேன் என்று பாடல் வசனத்தில் உருகும் உன் தலைவர், அவர்கள் பல வகைகளில் இன்னல்பட்ட நேரங்களிலெல்லாம் கொடுத்தது என்ன?

8. கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத இந்த நேரத்தில்தான் அவருக்கு தைரியம் வந்திருக்கிறதா?

9. தன் மண்டபத்தின் ஒரு பகுதியை மேம்பாலத்திற்காக இடித்துவிட்டார்கள் என்ற ஒற்றை மையப்புள்ளியில் கடைசிவரை அரசியல்‍ செய்து, இன்று ஏறக்குறைய காணாமல் போய்விட்ட விஜயகாந்த் காட்டிய ‍தைரியத்தையாவது உன் தலைவர் காட்டியிருக்கிறாரா?

10. தன்னை விமர்சிப்பது ஒரு இழிவான செயல் என்று கூறுமளவிற்கு கொஞ்சம்கூட சகிப்புத்தன்மை இல்லாதவர், அரசியலுக்கு லாயக்கானவரா?


அடேயப்பா…! பார்த்தாயா, மொத்தம் 10 கேள்விகள் வந்துவிட்டன. இப்படியாக, பல கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டு, உன்னை சலிப்படைய வைப்பேன் என்று நினைத்தாயா? அதுதான் இல்லை. கடந்த 2 நாட்களாக இதுபோன்று பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று உனக்கேத் தெரியும். எனக்கு அதிலெல்லாம் விருப்பமே இல்லை. உன் தலைவரின் பேச்சை இப்படியெல்லாம் பரபரப்பாக்குவது இந்த வெகுஜன மீடியாக்கள்தான். சினிமாக்காரர்களை நம்பி அவை பிழைக்கும். நாளைக்கு தனக்கு ஒரு லாபம் என்றால், அந்த சினிமாக்காரர்களை வாரவும் தயங்காதவை அவை. நமது வெகுஜன ஊடகங்கள் தமக்குள் வகுத்துக்கொண்டு செயல்படும் நீதிநெறி இப்படியானதுதான்…!

தமிழகத்தில் ஏற்கனவே பல நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் என்று, இப்போதும்கூட யாரையும் பகைத்துக்கொள்ள விரும்பாமல் பேசியிருக்கும் உன் தலைவர், சிஸ்டம் சரியில்லையே…என்ன செய்வது? என்று கூறியிருக்கிறார். நல்ல தலைவர்கள் இருந்தும் சிஸ்டம் சரியில்லை என்றால் என்ன அர்த்தம்? அந்த சிஸ்டம் என்பது என்ன? இந்தியாவின் ஜனநாயக அமைப்பா? அப்படித்தான் அர்த்தம்கொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில் அப்படித்தானென்றால், உன் தலைவரின் பேச்சு பெரிய குற்றமாகிவிடுமே? – இது 11வது கேள்வியாகக்கூட இருக்கட்டும்.

அரசியலில் முடிவெடுக்க தாமதம் செய்தவர்கள் வென்றதில்லை என்ற ஒரு பொதுவான கருத்து உன் மூளைக்கும் கட்டாயம் எட்டியிருக்கும். ஆனால் நாளை ஒருவேளை உன் தலைவர் உண்மையாகவே அரசியலில் இறங்கினால், ‘நான் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கிறேன்’ என்று பஞ்ச் டயலாக் விட்டாலும் விடுவார்.

இது தாமதமான முடிவா? அல்லது சரியான சந்தர்ப்பத்தில் எடுத்த முடிவா? என்பதை நாம் ஒவ்வொன்றும் நடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம். விமர்சிக்கவே தகுதியில்லாதவர்கள் என்ற நிலையிலிருக்கும் நபர்கள்கூட, அரசியலில் இறங்கி வென்ற மற்றும் வென்று கொண்டிருப்பதும், சிறந்த மக்கள் போராளிகள் தேர்தலில் அவமானகரமாக தோற்ற மற்றும் தோற்றுக்கொண்டிருப்பதும் நிகழும் நாடுதான் இது…! எனவே, உங்கள் தலைவர் அரசியலில் இறங்கினால் அனைத்தும் கெட்டுவிடும் என்று சொல்லுமளவிற்கு நாம் ஒன்றும் பச்சைக் குழந்தையல்ல…

இந்த நாட்டின் வாக்களிக்கும் மக்கள் எப்படியானவர்கள் என்பதை ஊகிப்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனையோ தேர்தல் முடிவுகளில் நாம் அறிந்த விஷயங்கள், நம்மை இப்படி சொல்ல வைக்கின்றன. அந்தவகையில், உன் தலைவரை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதை முன்பே அறுதியிட்டுக் கூறுவதெல்லாம் தவறு மற்றும் முட்டாள்தனமாகிவிடும்.

எது நடக்கிறதோ, அதை நடக்கும்போது பார்ப்போமே…!

Prasanna Bharathi

Associate Editor - Udagam 360

Prasanna Bharathi has 9 posts and counting. See all posts by Prasanna Bharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *