தெளிவற்று இருப்பது யார்?

அரசியலுக்கு வரும் விருப்பத்தை அறிவித்துள்ள ரஜினி,  இதுவரை தனக்கான கொள்கை என்னவென்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா..?

பலவிதமான மக்கள் சார்ந்த விஷயங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை தெளிவுபடுத்தியிருக்கிறாரா ரஜினி…?

அண்ணன்மார்களே…..தம்பிமார்களே…

அக்காமார்களே…தங்கைமார்களே…!

உங்களுக்கெல்லாம் என்னப் பிரச்சினை…?

இந்த அரசமைப்பில் இப்படியெல்லாம் கேள்வி கேட்பதே முதல் தவறு. அது நீங்களாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வரையறை அல்லது நெறிமுறை என்றால், அப்படியெல்லாம் வெளிப்படையாக தெரிவித்து, பொதுப்படையாக களமாடி, அரசியலில் வாக்குகளைப் பெறமுடியாது காணாமல்போன எத்தனையோ பேர்களுக்கு நீங்கள் வழங்கிய நஷ்டஈடு என்ன?

கொள்கை சார்ந்த, கோட்பாடு சார்ந்த அரசியல் என்பதெல்லாம் மக்கள் விழிப்புணர்வு அல்லது மக்கள் அறிவுடைமை என்ற அடிப்படையிலிருந்து துவங்க வேண்டியது. அது வாத-விவாதங்கள் அல்லது அறிவுஜீவித்தனமான எழுத்துகளிலிருந்து துவங்குவதல்ல. நமது ஜனநாயக அமைப்பு எத்தகையது? அதுகுறித்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் எத்தகையது? அதில் வாக்களிப்பவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் எத்தனை? என்பவற்றை சுற்றி வரவேண்டிய விவாதங்கள், ரஜினி போன்றவர்களின் அரசியல் நிலைப்பாட்டை சுற்றிவருவதுதான் இங்கு நடக்கும் தொடர்ச்சியான மற்றும் எந்தப் பயனையும் தராத நிகழ்வுகள்…!

இப்ப என்ன…? ரஜினியின் கொள்கைகள் மற்றும் அவரின் நிலைப்பாடுகள் தெரிய வேண்டும்…அவ்வளவுதானே; இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் அது தானாக தெரியவரப் போகிறது. அதற்கான ஆட்கள் கூடவா ரஜினிக்கு இல்லாமல் போய்விடப் போகிறார்கள்…? அந்தப் பொறுமைகூட இல்லாமலா இப்போதே ஆவேசப்பட வேண்டும்…?

நடைமுறையைப் பார்த்தால், அரசியலில் ஈடுபடுவோருக்கு ஒரு கொள்கைத் தெளிவு இருக்கவேண்டும்; ஒரு கொள்கைசார் செயல்பாடு இருந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு பயனற்ற முன்நிபந்தனைகளாகத்தான் உள்ளன. அத்தகைய கொள்கைசார் தெளிவின் மூலம் இதுவரை அடையப்பட்ட நடைமுறை சமுதாயப் பயன்கள் மிக மிக குறைந்தவையே…! இதை நம்மால் மறுக்க முடியுமா?

தேர்தல் அரசியலில் ஈடுபடுவோருக்கான அரசியல் கொள்கை, அவருக்கு, சம்பந்தப்பட்ட அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் சுதந்திரம் மற்றும் உலகத்தின் நடப்பு அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு உட்பட்டுதான் இருக்க முடியும் என்பது அரசியல் அறிந்தவர்கள் அறிந்ததே…

■ மாபெரும் மக்கள் போராளியும், தன்னிகரற்ற அறிவாளியுமான அம்பேத்கர் தேர்தல் அரசியலில் பட்டபாட்டை நாம் மறந்துவிட்டோமா…? 1920ம் ஆண்டிலிருந்து நடந்த தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டவர் வென்றதென்னவோ ஒரேயொரு முறைதான்; அதுவும் பிரிட்டிஷ் இந்தியாவில். ஆங்கிலேயர் அகன்ற பின்னர், நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தலாம் 1952 தேர்தலில் அவர் அவமானகரமாக தோற்றுப்போனார். பாவம், மக்களவையில் இருக்க வேண்டியவர், மாநிலங்களவைக்குத்தான் செல்ல முடிந்தது.

■ உலகம் அதிசயக்கத்தக்க சீர்திருத்தவாதியும், உன்னதமான மக்கள் போராளியுமான ஈ.வெ.ரா.பெரியார், தான் மரணிக்கும்வரை தேர்தல் அரசியலில் மறைமுகமாய் பங்கெடுத்தே வந்தார். அவர் சொல்வதைக் கேட்டு ஓட்டளித்தவர்கள் எத்தனை பேர்?

மக்களின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கிய இரோம் ஷர்மிளாவின் தோல்வி

■ மணிப்பூர் மாநிலத்தின் அற்புதமான போராளிப் பெண் இரோம் ஷர்மிளா பெற்ற அவலமான தோல்வியை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

■ தமிழகத்தில் உள்ளூர் பிரச்சினை சார்ந்து, மண்ணின் தேவை சார்ந்து இன்றும் களமாடி வரும் சில தலைவர்களின் தேர்தல் வெற்றி என்ன? உதயகுமார் மற்றும் வேல்முருகன் போன்றோர் தேர்தலில் களம் கண்டு, அடைந்தது எதை?

■ தான் இறந்து 30 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் மறக்கப்படாத, வாக்குகளை ஈர்க்கும் சக்தியுள்ள ஒருவர், எந்த அடிப்படையில் கட்சித் தொடங்கினார்? அவரின் கொள்கை என்ன? கட்சித் தொடங்கிய அவரின் ஆரம்பகால அரசியல் செயல்பாடுகள் எத்தகையவை?

கேட்கலாம்தான்…இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்தான். இதற்கான பதில்கள் சுற்றி வளைத்து கொடுக்கப்பட்டாலும், வந்துசேரும் இடம் ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது.

இங்கே அரசியலில் குதிப்பதற்கும், வாக்குகளைப் பெறுவதற்குமான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து ரஜினி அறியாதவர் என்று யாரால் சொல்லிவிட முடியும். அவர், வியாபார ரீதியில் ஏற்கனவே வித்தகர்…!

அரசியல் விஷயத்தில் மீடியா மட்டுமல்ல, அவரின் எதிர்ப்பாளர்களும் இப்போது அவருக்கு ஏகப்பட்ட விளம்பரத்தைக் கொடுத்து, அவரை திக்குமுக்காட செய்துவிட்டனர். இந்த விளம்பரத்தை நிச்சயம் அவரும் எதிர்பார்த்திருப்பார்தான்…! இது உண்மையான அரசியல் நுழைவுக்கான முயற்சியா? அல்லது வழக்கம்போல் இதுவும் வியாபார உத்தியா? என்பதெல்லாம் இருக்கட்டும்.

பொருத்தமான சூழலை உணர்ந்து, தேவையான விளம்பர பின்புலத்துடன், சரியான செயல்திட்டத்துடன் அரசியலில் குதித்தால் இங்கு பலரும் வெற்றிபெறலாம் என்பதே நடைமுறை நமக்கு சொல்லித்தருகிற பாடமாக இருக்கையில், கொள்கை முன்தேவையோ அல்லது அரசியல்சார் செயல்பாடுகளோ யாருக்கு வேண்டும்? ஆனால், விவாதங்களில் பங்கெடுப்போருக்கு அது நிச்சயம் தேவைதான். ஏனெனில் விவாதம் செய்ய வேண்டுமல்லவா…!

ஒவ்வொரு அரசமைப்புமே தன் மக்கள் எத்தகைய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டுமென நினைக்கிறதோ, அந்தளவில்தான் அவர்களை வைத்திருக்கும். வெகுஜன ஊடகங்களும், மக்களுக்கு எதைத் தெரியப்படுத்த வேண்டும் மற்றும் எதை தெரியப்படுத்தக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள்.

தமிழக அரசியல் சூழலில், ரஜினிக்கான இடம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆம்…ஆம்…நிச்சயம் இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். அந்த இடத்தைப் பெரிதாக்கிக் கொள்வதா அல்லது சுருக்கிக் கொள்வதா அல்லது எதுவுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதா என்பது ரஜினியின் சாமர்த்திய செயல்பாடுகளின் மூலமே தீர்மானிக்கப்படும்.

அதைவிடுத்து, அவருக்கு இது இருக்கிறதா? அது இருக்கிறதா? அவர் அதை செய்திருக்கிறாரா? அல்லது இதை செய்திருக்கிறாரா? என்றெல்லாம் கேட்டு, பலரின் நேரத்தை வீணடிக்கிறார்கள் சிலபேர்.

Prasanna Bharathi

Associate Editor - Udagam 360

Prasanna Bharathi has 9 posts and counting. See all posts by Prasanna Bharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *