“தமிழக ஆளுநர் நியமனம் எப்போது?” – தருண் விஜய் பதில்

திருவள்ளுவரில் ஆரம்பித்து ஜல்லிக்கட்டு விவகாரம்வரையிலும், தமிழையும் தமிழர்களையும் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார் பி.ஜே.பி எம்.பி தருண்விஜய்! அவரது நோக்கம் உண்மையிலேயே தமிழுக்கு மரியாதை சேர்ப்பதுதானா? அல்லது தமிழகத்துக்குள் பி.ஜே.பி-யை காலூன்ற வைக்கும் முயற்சியா? சென்னை வந்திருந்த அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

”தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மத்திய அரசின் பதில்?”                        இலங்கை கடற்படையின் இந்தச் செயலுக்கு பி.ஜே.பி வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாகத் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி இலங்கை குடியரசுத் தலைவரிடம் பேசியுள்ளார். இலங்கை கடற்படை இதுபோன்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

”ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் நடத்திய போராட்டம் குறித்து?”                              மத்திய அரசு விவசாயிகள் மற்றும் மக்களைப் பாதிக்கும் வகையிலான எந்தவிதமான திட்டங்களையும் செயற்படுத்தாது. உதாரணமாக, கூடங்குளத்தில் அணுஉலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் என்பது வெளிநாட்டுப் பணத்தில் தேசத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.

”ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து?”                                                                                                                                                                  குறிப்பிட்ட கட்சியினர் குறித்த விவகாரங்களைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

”2014 முதல் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி., ஜல்லிக்கட்டு நடத்துவதற்குரிய முறையான நடவடிக்கைகளை முன்னரே எடுக்காமல், மக்களின் போராட்டத்துக்குப் பிறகு எடுத்தது ஏன்?”                                                                                                                    தமிழகத்தின் கலாசாரத்தில் ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டை பி.ஜே.பி முதலிலிருந்தே ஆதரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2015-ம் ஆண்டே ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதற்கான துறைரீதியான நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் அந்த முயற்சி உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.

”ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காகத் தமிழக அரசுக்கு, அவசர சட்டம் பிறப்பிக்க ஆலோசனை வழங்கியதாக உரிமை கொண்டாடும் மத்திய அரசு, அதை ஏன் முன்பே செய்யவில்லை?”                                                                                                                      ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை ஒரே சட்டம்தான் அமலில் உள்ளது. தற்போது மாநில அரசு இயற்றிய இந்த அவசர சட்டத்தை இதற்கு முன்பேகூட அவர்களே இயற்றி இருக்கலாமே? தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பி.ஜே.பி-யைக் குறைகூறும் எதிர்க்கட்சிகள் ஜல்லிக்கட்டைப் பற்றி ஒருநாள்கூட நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதில்லை.

”ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லையே?”                                தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலதாகக் கவனித்துவரும் வித்யாசாகர் ராவ், அரசியலமைப்புச் சட்டத்தின்படி முறையாக, நேர்த்தியாகச் செயல்பட்டு வருகிறார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து மாநில தேர்தல்களுக்குப் பிறகு தமிழகத்துக்கென நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படுவார்.

”ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, மக்களிடையே பி.ஜே.பி மீது வெறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?”                                                                                                                                                     தமிழக மக்கள் இன்னமும் மோடியையும், பி.ஜே.பி-யையும் விரும்புகிறார்கள். தமிழக மக்களின் நலனை மோடி நன்றாகக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. பி.ஜே.பி மீது எதிர்மறையான எண்ணங்களையும், கருத்துகளையும் பரப்ப தேசத்துரோகிகள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடைபெறாது.

”தற்போது நாடே எதிர்நோக்கியிருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பற்றி?”                                                                                 நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே  நடக்கும் இந்தப் போரில் கண்டிப்பாக இந்தியா வெற்றி பெறும்.

”பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மக்களிடமும், பல்வேறு கட்சிகளிடமும், பி.ஜே.பி தலைவர்களிடமும் வேறுபட்ட கருத்துகள் நிலவுகிறதே?”                                                                                                                                                                                          பி.ஜே.பி மட்டுமல்ல, மற்ற அனைத்துக் கட்சியினரிடமும்கூட வேறுபட்ட கருத்துகளே நிலவுகின்றன. ஆனால், இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது ஊழல், கறுப்புப் பண முதலைகளை எதிர்த்து ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசாங்கம் தொடுத்துள்ள போர் என்பதை அனைத்து நிலையையும் சார்ந்த மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

”தமிழ்மொழியை நாடு முழுவதும் எடுத்துச் சென்று அங்கீகரிக்கும் பணியில் ஈடுபடும் உங்களின் அடுத்தகட்ட திட்டம்?”           தமிழகத்திலேயே தமிழைக் கற்கும் மக்களின் எண்ணிக்கை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மிகவும் குறைந்து வருகிறது. எனவே, தமிழை மீண்டும் தமிழகத்துக்குக் கொண்டு வருவது அவசியம். தமிழ் மொழியற்ற இந்தியா, முழுமையான இந்தியாவாகாது. தமிழையும் திருக்குறளையும் இந்தியா முழுவதும் பரப்புவதற்காக எடுத்துவரும் நடவடிக்கைளைச் செயல்படுத்த பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர்களும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

”நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு கொண்டுவருவதில் பி.ஜே.பி-யின் நிலைப்பாடு?”                                      ஆணாதிக்கச் சமூகத்தில் வாழ்ந்துவரும் நாம், பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது அவசியமானது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைக் கொண்டுவருவதில் பி.ஜே.பி அரசு விரும்பினாலும், மற்ற கட்சிகளின் எதிர்ப்பால் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *