“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும்

ஒவ்வொரு நாளும் சூரியன் மேற்கில் உதித்து, கிழக்கில் மறைகிறதோ இல்லையோ, புதிய தொழில்நுட்பங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்படும் இவை இந்தியா போன்ற நாடுகளை வந்தடைவதற்கு சில மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை ஆகின்றன.

அதிலும், நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளை பேசும் மக்களுள்ள இந்தியா போன்ற நாடுகளில் பொதுவாக ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்படும் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் பெரும்பான்மையினரை சென்றடைவதில்லை. அந்த இடைவெளியை குறைத்து மக்களுக்கு தேவையான செய்திகளை புதுமையான வழியில் தெளிவாக வழங்குவதை அடிப்படை கொள்கையாக கொண்டு செயல்படுகிறது “ஊடகம் 360”.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மொழியில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை பத்திரிகைகள், இதழ்கள், புத்தகங்கள் மற்றும் வலைப்பதிவுகளை “சைபர் சிம்மன்” என்னும் புனைப் பெயரில் எழுதி வரும் திரு. நரசிம்மன், சமீபத்தில் “டிஜிட்டல் பணம்” என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

பொதுவாக அரசியல், சமூகம், மதம், சாதி மற்றும் வரலாறு போன்ற தலைப்புகளில் எழுதப்படும் புத்தகங்களுக்கு எழும் ஒரு வித எதிர்மறையான கருத்துக்கள் இப்புத்தகத்துக்கும் எழுந்துள்ளது. ”டிஜிட்டல் இந்தியா” என்ற பெயரில் மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும், பணத்தை செலவிடுவதில் தேவையற்ற குழப்பத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், “டிஜிட்டல் பணம்” என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்நூலின் தலைப்பை பார்த்தவுடனையே, இது மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவானது என்று முடிவெடுத்து விடுகின்றனர்.

ஆனால் இப்புத்தகம் சொல்ல வருவது என்னவென்றால், தற்போது “டிஜிட்டல் இந்தியா” என்ற பெயரில் மத்திய அரசால் திணிக்கப்பட்டு வரும் முறைகளை விட மிகவும் எளிமையான “மொபைல் பணம்” என்னும் பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பம் குறித்தேயாகும். இது ஏற்கெனவே, கென்யா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், சோமாலியா னை முறையாஎன பல ஏழை நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ள ஒரு மாற்று பணப் பரிவர்த்தனை முறையாகும். எனவே, இது குறித்து “ஊடகம் 360” வாயிலாக இப்புத்தகத்தின் ஆசிரியர் சைபர் சிம்மன் என்னும் திரு. நரசிம்மன் அவர்கள் எழுதிய விளக்க கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் எதிர்காலமும், டிஜிட்டல் பணமும்!

நம்மைச்சுற்றி எல்லாமே டிஜிட்டல்மயமாகி வருகிறது, பணமும் டிஜிட்டல்மயமாக வேண்டும். இந்த செய்தியை வலியுறுத்தி தான் டிஜிட்டல் பணம் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். ரொக்கமில்லா சமூகத்தின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த புத்தகத்தை எழுத இதைவிட சரியான நேரம் இல்லை என நினைக்கும் அதே நேரத்தில், இந்த புத்தகம் எழுதப்பட இதைவிட மோசமான நேரம் இல்லை என்றும் உணர்கிறேன்.

இது ஒரு முரண் தான். ஆனால், என்னளவில் மிகுந்த தெளிவுடன் செயல்பட்டிருக்கிறேன். இந்த புத்தகத்தின் நோக்கம் மற்றும் அவசியம் பற்றி எனக்குள் தயக்கமோ, குழப்பங்களோ கிடையாது. தொழில்நுட்பம் பற்றியும், அதன் தாக்கம், பயன்பாடு, புதிய சாத்தியங்கள் பற்றி பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதி வருபவன் என்ற முறையில், நம்மைச்சுற்றி உலகில் வெகுவேகமாக நிகழும் மாற்றங்களை ஓரளவுக்கேனும் உள்வாங்கி கொண்டிருப்பதன் வெளிபாடே, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான வாதங்களை முன்வைக்கும் இந்த புத்தகம்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், டிஜிட்டல் நுட்பங்களின் தாக்கம் உங்களுக்கே புரியும். கடிதங்கள் மின்னஞ்சல்களாக மாறி, மின்னஞ்சல்களும், வாட்ஸ் அப் செய்திகளாகவும், ஸ்லேக் செயலி பரிமாற்றங்களாகவும் மாறியிருக்கின்றன. தொலைநகலி எனும் பேக்ஸ் பழைய நுட்பமாகிவிட்டது. பங்குச்சான்றிதழ்கள் முதல் காப்பீடு பாலிசிகள் வரை எல்லாம் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிச்சேவையும் வேகமாக டிஜிட்டல்மயமாகி வருகிறது.

எதிர்கால வங்கிகள் ரோபோக்களின் சேவையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. வங்கிக்கிளைகள் ஸ்மார்ட்போன் செயலிக்குள் அடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் சேவை முதல் கடன் தகுதி அளவீடு எல்லாம் புதிய தரவுகளால் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

ஆக, நாமறிந்த வகையில் வங்கிச்சேவையை மாறிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல் வங்கிச்சேவை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக வங்கியாளர்களுக்கே சரியான புரிதல் இல்லை. தொலைநோக்கு மிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இந்த திசையில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

ஆவணங்களும், பரிமாற்றங்களும் டிஜிட்டல்மயமாகி கொண்டிருப்பது மட்டும் அல்ல, வருங்காலத்தில் தானியங்கி கார்களும், மெயநிகர் தொழிநுட்பமும் விவஸ்ரூபம் எடுக்க உள்ளன.

இந்த பெரும் மாற்றங்களுக்கு மத்தியில் தான் டிஜிட்டல் பரிவர்த்தனையை பார்க்க வேண்டியிருக்கிறது. பணத்தை டிஜிட்டல் வடிவில் கையாளவது என்பது தொழில்நுட்பம் அளித்துள்ள கொடை. இது நவீன வாழ்க்கையின் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். பல புதிய பிரச்சனைகளையும் உருவாக்கும் என்பது வேறு விஷயம். எனவே தான் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதன் அவசியத்தையும், அதில் உள்ள சாதகங்களையும் அழுத்தந்திருத்தமாக பேச வேண்டியிருக்கிறது.

அந்த நோக்கத்துடன் தான் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. ரொக்கமில்லா சமூகம் எனும் கருத்தாக்கத்தின் எளிய வரலாற்றுடன் துவங்கி, உலகம் எப்படி அதை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது.

இந்த வாதத்திற்கு எதிராக, இந்தியா போன்ற நாட்டில் இதெல்லாம் சரி பட்டுவருமா? நாம் இன்னமும் அந்த அளவுக்கு தயாராக இல்லையே போன்ற கேள்விகள் எழுவது இயல்பே. இணைய வங்கிச்சேவையும், மொபைல் வாலெட்களும் மேட்டுக்குடி மற்றும் மிடில் கிளாஸ் சங்கதி அல்லவா என பலரும் ஆவேசமாக வாதிடக்கூடும்.

அது மட்டும் அல்ல, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மோசமான பாதிப்பு இன்னமும் மக்கள் மத்தியில் மாறாக வடுவாக இருக்கும் நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையின் மகத்துவத்தை பேசுவது, மக்கள் விரோதமாகவே பார்க்கப்படலாம்.

அது மட்டும் அல்ல, இது பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவான முயற்சி என விமர்சிக்கப்படலாம். மேலும் பல கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படலாம். இவற்றை எல்லாம் நன்கறிந்தே டிஜிட்டல் பணம் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.

அதற்கு முக்கிய காரணம், மொபைல் பணம் தான். சாதாரண செல்போன் மூலம் பண பரிவர்த்தனையே மொபைல் பணம் என புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த மொபைல் பணம் வெற்றிகரமாக செயல்பட பலரும் நினைப்பது போல வங்கிகளின் தயவோ, ஸ்மார்ட்போன்களோ அவசியம் இல்லை. இது அடிப்படையில் செல்போன் ரீசார்ஜ் செய்வது போல தான்.

கென்யாவின் எம்-பெசாவில் துவங்கி, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், சோமாலியா என பல ஏழை நாடுகளில் மொபைல் பணம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. எனவே இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் உள்ள பிர்ச்சனைகளுக்கு மொபைல் பணம் தீர்வாகும். மொபைல் பணம் மட்டும் அல்ல, பிரிபைடு கார்டு போன்றவை டிஜிட்டலுக்கு மாற கைகொடுக்கும்.

இதற்கான நடைமுறை உதாரணங்களும், முன்முயற்சிகளும் இந்தியாவிலேயே இருக்கின்றன. அவற்றை எல்லாம் சுட்டிக்காட்டும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, மொபைல் பணமும், பிரிபைடு கார்டுகளும், டிஜிட்டல் கடன் போன்ற கருத்தாங்களும் வங்கிச்சேவையை விளிம்பு நிலை மக்கள் வரை கொண்டு செல்லகூடியவை.

நமது அரசாங்களாலும் வங்கிகளாலும் செய்ய முடியாததை டிஜிட்டல் தொழில்நுட்பம் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை தான் இந்த புத்தகம். இதற்கு ஆதாரவாக அமைந்த முன்னோடி முயற்சிகளை இது மையமாக கொண்டுள்ளது.

தொடர்புக்கு: enarasimhan@gmail.com

 

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *