‘ ஜியோ இணைய வேகம்தான் இந்தியாவிலேயே ஸ்லோ!’ ட்ராய் அதிர்ச்சி

ஜியோ ஆஃப்ப டவுன்லோட் பண்ணி அதுல புது சிம் கார்டுக்கு கோடு ஜெனேரேட் பண்ணி பக்கத்துல இருக்குற ரிலையன்ஸ் கடைக்கு போயி வரிசைல காலைலேந்து சாயங்காலம் வரை ரேஷன் கடையோட அதிகமா இருக்குற கூட்டத்துல நின்னு (காசு கொடுத்து வரிசையில் நிற்காமல் வாங்கியது மற்றொரு கூட்டம்) அடையாள அட்டைகளை கொடுத்து சிம் கார்டை வாங்கி ஒரு வாரம் ஆகியும் ஆக்டிவேட் ஆகலனு ரெண்டு மூணு முறை அந்த கடைக்கு போயி சண்டையபோட்டு நீங்க வாங்குன அந்த ஜியோ சிம்தான் இந்தியாவிலேயே வேகம் குறைவான 4ஜி நெட்ஒர்க் என்று இந்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது!

இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான ‘ட்ராய்’  பல்வேறு இணையசேவை நிறுவனங்களின் வேகத்தை அளவிடும் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலியை “MySpeed” என்னும் பெயரில் சமீபத்தில் வெளியிட்டது. அதன் மூலம் உங்களின் மொபைல் நெட்ஒர்க் அல்லது பிராட்பாண்ட்டின் டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் அந்த முடிவுகளை ட்ராய்க்கு அனுப்புவதன் மூலம் உங்கள் பகுதி குறித்த இணைய வேக விவரம் ட்ராயின் பிரத்யேக இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். அவ்வாறு இந்திய முழுவதும் பதிவேற்றப்பட்ட தகவல்கள் மூலம் இந்தியாவில் உள்ள 4ஜி இணைய சேவை வழங்கும் நிறுவனங்களிலேயே ரிலையன்ஸின் “ஜியோ” வேகம் குறைவானது என்று தெரியவந்துள்ளது.

இந்திய அளவில் சராசரி இணைய வேகம்:

அதன்படி 11.4Mbps டவுன்லோட் வேகத்துடன் ஏர்டெல் இந்தியாவிலேயே முதலிடத்தையும், 7.9Mbps உடன் ரிலையன்ஸ் இரண்டாம் இடத்தையும், 6.2Mbps வேகத்துடன் ஜியோ கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. அப்லோட் வேகத்தை பொறுத்தவரை ஐடியா நிறுவனம் 4.1Mbps உடன் முதலிடத்தையும், வோடாபோன் (4.0Mbps) மற்றும் ஏர்டெல் (3.7Mbps) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் மற்றும் ஜியோ 2.4Mbps வேகத்துடன் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் எந்த நெட்ஒர்க் வேகமானது?

தமிழகத்தைப் பொறுத்தவரை டவுன்லோட் வேகத்தில் ஏர்டெல் 11.2Mbps உடன் முதலிடத்தையும், 9.6Mbps வேகத்துடன் BSNL இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. ஜியோ நிறுவனமானது 7.5Mbps வேகத்துடன் ஆறாவது இடத்தையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்லோட் வேகத்தில் வோடபோன் 4.3Mbps உடன் முதலிடத்தையும், ஐடியா (4.1Mbps) இரண்டாமிடத்தையும் மற்றும் ஜியோ 2.4Mbps சராசரி வேகத்துடன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தொடர்ந்து வேகம் குறைந்து வரும் ஜியோ நெட்ஒர்க்:

இணைய வேகத்தை அளவிடுவதில் முன்னணியில் உள்ள தனியார் இணையதளமான ஓக்லா சமீபத்தில் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் தனது சேவையை தொடங்கியபோது பல இடங்களில் 15-30Mbps வேகத்தை வழங்கிய ஜியோ, சென்ற சில வாரங்களாக 23%  வரை வேகம் குறைந்துள்ளதாகவும், இந்திய அளவில் சராசரியாக 8.77Mbps வேகத்தை ஜியோ வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *