காற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள்! பாதுகாப்பது சாத்தியமா?

■ 5ஜிபி வரை உங்கள் டேட்டாக்களை இலவசமாக “கிளவுட் ஸ்டோரேஜில்” சேமித்துக்கொள்ளலாம்.

■ எங்கள் இணையதளத்தில் புதிய கணக்கை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி.

■ இந்த சர்வேயில் பங்கெடுத்து பதிலளித்தால் 500 ரூபாய் மதிப்புள்ள அமேசான் கூப்பன் இலவசமாக வழங்கப்படும்.

■ எங்கள் இணையதளத்தில் பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி.

          மேற்கண்ட வகைகளில் இணையத்தில் தினந்தினம் வலம் வரும் நூற்றுக்கணக்கான கவர்ச்சி வார்த்தைகளை நம்பியோர் ஆயிரக்கணக்கில் இருப்பர். ஆனால், தான் அளித்த தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் அவர்களுக்கு என்றாவது ஒரு நாள், தன்னுடைய போட்டோ மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும்போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படும்போதோதான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.

அதுபோன்று, ஜிமெயில் முதல் பேஸ்புக் வரை, ட்விட்டர் முதல் இன்டர்நெட் பாங்கிங் வரை என ஒரே கடவுச்சொல்லை பெரும்பாலான இணையத்தளங்களுக்கு பயன்படுத்துவோரும் அதிகளவில் உள்ளனர். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு தரப்பினரிடமும் இதுகுறித்து நாம் கேட்டோமானால் “தாங்கள் கணக்கு வைத்துள்ள இணையதளங்கள் பாதுகாப்பானவை என்றும், அதிலிருந்து எங்களது தகவல்கள் திருடமுடியாத வகையில் சேமிக்கப்பட்டுள்ளன” என்றும் கூறுவார்கள்.

அப்போது, கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமான Dropboxன் 164,611,595 கணக்குகளும், LinkedInன் 164,611,595 கணக்குகளும், யாஹூ நிறுவனத்தின் 453,427 கணக்குகளும் என 225 இணையதளங்களின் 3,808,893,616 கணக்குகள் பல்வேறு இணைய ஹேக்கிங் குழுக்களால் திருடப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை இலவசமாக இணையத்தில் எவரும் பார்க்கும், பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது எனக்கூறும் https://haveibeenpwned.com என்னும் இணையதளத்தின் கூற்றுக்கு உங்கள் பதிலென்ன?. இதில் நகைச்சுவை மற்றும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் ஹேக்கிங் மற்றும் வைரஸ் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் Avast Antivirus நிறுவனத்தின் 422,959 கணக்குகளும் அப்பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டு இணையத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்பதுதான்.

இணைய தகவல் திருட்டில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சில வழிமுறைகள்:

■ இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பிறகே அதில் கணக்கு துவக்க வேண்டும்.

மேலும், அக்கணக்கிற்கான கடவுச்சொல் உங்களுடைய மற்ற கணக்குகளின் கடவுச்சொல்லைவிட வித்தியாசமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும்.

■ இலவசமாக கிடைக்கிறதென்று நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உங்களின் போட்டோக்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

■ கிப்ட் கூப்பன் மற்றும் தள்ளுபடி போன்ற கவர்ச்சிகரமான, நம்பிக்கைத்தன்மையற்ற சர்வே, ப்ரோமோஷனல் சலுகைகள் போன்ற விளம்பரங்களுக்கு பதில் அனுப்புவதை தவிர்க்கவும்.

■ தங்களின் தனிப்பட்ட கணினி, செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை தவிர்த்து மற்றவரின் பொருட்களை பயன்படுத்தினால் தவறாமல் லாகு-அவுட் செய்யவும்.

■ சிறந்த ஆன்டி-வைரஸ் ஒன்றை பதிந்து அதையும், கணினியின் ஆப்பரேட்டிங் சாப்ட்வேரையும் தொடர்ந்து அப்டேட் செய்யவும்.

மேற்கண்டவை தனிப்பட்ட தகவல்களை பறிகொடுக்காமல் இருப்பதற்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும். ஆனால், இவற்றை மீறியே Linkedin, Avast, Yahoo, Sony மற்றும் Zomato போன்ற எண்ணிடலங்கா இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் பயனர் கணக்கு வைத்துள்ள ஒரு இணையதளத்திலிருந்து நமது தகவல் திருடப்பட்டால் அது குறித்த எச்சரிக்கையை நமது மின்னஞ்சலுக்கு இலவசமாக அனுப்பும் சேவையை அளிக்கிறது https://haveibeenpwned.com என்னும் இணையதளம்.

இந்த https://haveibeenpwned.com இணையத்தளத்திற்கு சென்று அதன் முகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இட்டால் ஒரு சில நொடிகளில் இதுவரை அக்குறிப்பிட்ட மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பயனர் கணக்கு எப்போது, எங்கு, எப்படி திருடப்பட்டது என்ற தகவலை அளிக்கிறது.

மேலும், உங்களுக்கு தேவையென்றால் அந்த இணையத்தளத்தின் Notify me என்பதை கிளிக் செய்து உங்களின் மின்னஞ்சலை அளித்தால், எதிர்காலத்தில் உங்கள் மின்னஞ்சல் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டால் உங்களுக்கு தானாக மின்னஞ்சல் வந்து சேரும். அவ்வாறு எனக்கு சமீபத்தில் வந்த எச்சரிக்கை மின்னஞ்சல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் யாரால், எப்படி செயற்படுத்தப்படுகிறது?

நமது மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டால் எச்சரிக்கை செய்யும் இணையதளங்கள் பல இருந்தாலும் https://haveibeenpwned.com என்ற இந்த தளம்தான் பிரபலமானதாகவும், சிறந்ததாகவும். கருதப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரும், இணையதள பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியில் முக்கியமானவருமான டிராய் ஹண்ட் என்பவர்தான் இந்த இணையதளத்தை உருவாக்கியராவார். தற்போது அதிகரித்து வரும் இணைய திருட்டை பற்றி மக்களுக்கு இலவச சேவையாக அளிக்கவும், தனது தொழில்நுட்ப அறிவை வெளிக்காட்டவும், வளர்க்கவும் இதை தொடர்ந்து நடத்தி வருவதாக டிராய் தெரிவித்துள்ளார்.

இந்த தளமானது இதுவரை 225 இணையதளங்களில் நிகழ்ந்த 3,808,893,616 திருட்டுகள் குறித்த தகவல்களை தனது அதிநவீன தொழில்நுட்பம் மூலம் திரட்டியுள்ளது. அதாவது தகவல்களை திருடும் ஹாக்கர்கள் அவற்றை உடனடியாகவோ அல்லது பல வருடங்கள் கழித்தோ அதற்கென உள்ள இணைய குழுக்களுக்களில் வெளியிடுவார்கள். அப்படி பொதுவெளியில் வெளியிடப்பட்ட தகவலை பிரதி எடுக்கும் இத்தளம் உங்களின் மின்னஞ்சல் முகவரி அதில் இடம்பெற்றுள்ளதா என்பதை பரிசோதித்தே உங்களுக்கு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே,

இக்கட்டுரையின் முற்பகுதியில் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளையும், மேலே அளிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை சேவைகளையும் செயற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எனக்கும் தொழில்நுட்பத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று இனியும் கூறாமல், தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளையும் தொடர்ந்து பின்தொடர்ந்தால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவது ஏறக்குறைய(!) உறுதிதான்.

ஒரு தகவலானது இணையத்தில் இணைக்கப்படாமல் இருக்கும் வரைதான் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம். கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், IBM, நோக்கியா மற்றும் சாம்சங் போன்ற பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் அதே சமயத்தில் அதைவிட சிறந்த தொழில்நுட்பத்தை நமக்கு பிரபலமில்லாத நபர்கள் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது!  

*மேற்கண்ட கட்டுரையானது, “ஊடகம் 360” இணையதளத்தின் முதன்மை ஆசிரியரால் விகடன் இணையதளத்திற்காக எழுதப்பட்டதாகும்.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *