ஐ.ஓ.எஸ்10: நீங்கள் அறிய வேண்டிய 10 அப்டேட்ஸ்!

ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை அறிவித்துவிட்டு அவை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான  ஐ.ஓ.எஸ்-ஐ வெளியிடுவது ஆப்பிளின் ஸ்டைல். அதே போன்று இந்தாண்டுக்கான ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் சென்ற செப்டம்பர் 7-ம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டத்தோடு ஐ.ஓ.எஸ்10 செப்டம்பர் 13-ம் தேதி முதல் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்பிளின் பளிச்சிடும் மாற்றங்கள் ஐ.ஓ.எஸ்10-ல் இருக்கிறதா?

1. இனி ஸ்டாக் ஆப்ஸ்-ஐ நீக்கலாம்:

பல ஐ-போன் பிரியர்களுக்கு பிடிக்காத ஒன்று இந்த ஸ்டாக் ஆப்ஸ். இதற்கு முந்தைய ஐ.ஓ.எஸ்-களில் நமக்குத் தேவையில்லை என்றால் நீக்க முடியாமல் இருந்த ஸ்டாக் ஆப்ஸை இந்த முறை நீக்க முடியும். ஐ.ஓ.எஸ்10-ல் மற்ற ஆப்ஸ்களை நீக்குவது போன்றே மேப்ஸ், போட்காஸ்ட் மற்றும் கான்டக்ட்ஸ் போன்ற சில ஸ்டாக் ஆப்ஸ்களை நீக்கலாம். மீண்டும் தேவைப்பட்டால், ஐ-டியூன்ஸ் சென்று டவுன்லோட் செய்து இன்ஸ்டாலும் செய்துகொள்ளலாம். இதில் முக்கியமானது, ஆப்ஸ்களோடு அதன் டேட்டாவையும் நீக்க வேண்டுமென்றால் ஐ-கிளவுட் சென்று குறிப்பிட்ட ஆப்பினுடைய பேக்கப்பை டெலீட் செய்வது அவசியம்.

2. விதவிதமான எமோஜிக்கள்:
இதுவரை ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் மிஸ் செய்த ஒரு சிறப்பம்சம் என்றால் அது எமோஜிக்கள்தான். குறுஞ்செய்தி மேலும் குறைந்துப்போய் எமோஜிக்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் ஆப்பிள் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜிக்களை தனது கீபோர்டில் சேர்த்துள்ளதால் இனி ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுடன் சாட்டிங்கில் கலக்கலாம்.

3. தானாக திறக்கும் நோட்டிபிகேஷன்:

ஐ.ஓ.எஸ்10-ல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள “ரைஸ் டு வேக்” என்னும் வசதியின் மூலம் ஐபோன் 6, 6S, 5SE மற்றும் புதிய ஐபோன் 7-களில் மொபைலை கையில் எடுத்தாலே பாஸ்வேர்டினை டைப் செய்யாமல் நேரடியாக நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும்.

4. பல ஆப்களுக்கும் இனி சிரியை பயன்படுத்தலாம்:

இதுவரை ஆப்பிளின் ஆப்களுக்கு மட்டுமே வாய்ஸ் அசிஸ்டன்ட்டான சிரியை பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் ஐ.ஓ.எஸ்10-ல் சிரியை மற்ற நிறுவனங்களின் ஆப்களிலும் பயன்படுத்தும் வசதியை ஆப்பிள் கொடுத்துள்ளது. அதன்படி உங்கள் குரல் மூலமாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் அப்டேட்டும், லிங்கிடு இன்னில் புதிய வேலையையும் நீங்கள் தேடலாம். இன்னும் சில மாதங்களில் மற்ற பல ஆப்களில் சிரியை பயன்படுத்த முடியும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

5. ஆப்களை திறக்காமலே பயன்படுத்தும் வசதி:

நமக்கு வரும் நோட்டிபிகேஷனுக்கு பதில் சொல்வதற்கு அந்தக் குறிப்பிட்ட ஆப்பைத் திறந்து பதிலளிக்க வேண்டுமென்ற அவசியம் இதில் இல்லை.  ஐ.ஓ.எஸ்10-ல் எந்த ஒரு ஆப்பையும் திறக்காமலேயே நோட்டிபிகேஷன் பகுதியிலிருந்து நேரடியாக பதிலளிக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளதாக நோட்டிபிகேஷன் வந்தால், மின்னஞ்சல் ஆப்பை திறக்காமல் நேரடியாக பதிலளிக்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

6. மேம்படுத்தப்பட்ட புகைப்பட தேடல்கள்:

நாம் ஐ-போனிலோ, ஐ-பாடிலோ எடுக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் குறிப்பிட்ட புகைப்படங்களை தேடி கண்டுபிடிப்பதற்கு சிறிது நேரம் எடுக்கும். ஆனால், இந்த ஐ.ஓ.எஸ்10-ல் நீங்கள் தேடும் புகைப்படம் குறித்த குறிப்பு வார்த்தைகளை (கடற்கரை, கல்லூரி, சூரிய உதயம், மலைகள்) அளித்தால் போதும், அதனோடு தொடர்புடைய புகைப்படங்களை எளிதாக காணலாம்.

7. புதிய வசதிகளுடன் மெசேஜ் ஆப்:

வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சரின் போட்டியை சமாளிக்கும் விதமாக ஏராளமான சிறப்பம்சங்களுடன் ஐ-மெசேஜ் ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மெசேஜ் செய்ய விரும்பும் வார்த்தைகளை டைப் செய்தவுடன் அதற்கு பொருத்தமான எமோஜிகளை இந்த ஆஃப் காண்பிக்கும். மேலும் கையால் எழுதியும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் மீது நம் கைப்பட எழுதியும் வரைந்தும் அனுப்பும் வசதியும் உள்ளது.

8. அதிசயிக்க வைக்கும் ‘ஹோம்கிட்’:

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டிலுள்ள லைட்டுகள், கதவுகள், டிவி முதல் மியூசிக் சிஸ்டம் வரை அனைத்தையும் உங்கள் ஐபோன் மற்றும் ஐ-பேடிலிருந்தே இயக்கவும் அல்லது நிறுத்தும் வகையில் வசதி கொண்ட ‘ஹோம்கிட் ஆப்’ மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

9. பல மொழிகளில் டைப் செய்யலாம்:

இதற்கு முன் ஆங்கிலத்தில் கீபோர்டு வைத்திருந்தால் அதை செட்டிங்குக்கு சென்று தமிழில் மாற்றிய பின்னர்தான் பயன்படுத்த முடிந்தது. ஆனால் ஐ.ஓ.எஸ்10-ல் ஒரே நேரத்தில் பல மொழிகளில் டைப் செய்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நமது வார்த்தைகளுக்கு அளிக்கும் பரிந்துரைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

10. வேகமாக திறக்கும் கேமரா ஆப்:

பொதுவாக கேமரா ஆப்பை திறக்க வேண்டுமென்றால் அந்த ஐகானை தேடி கண்டுபிடித்து கிளிக் செய்தால் மட்டுமே திறக்க இயலும். ஆனால் ஐ.ஓ.எஸ்10-ல் ஐபோனோ அல்லது ஐபேடோ ‘லாக்’ செய்யப்பட்டிருக்கும்போதே இடதுப்புறம் நோக்கி தள்ளினாலே கேமரா ஆப் உடனடியாக திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *