எப்போதும் உடையலாம்… அச்சுறுத்தும் அமெரிக்க அணை!
அமெரிக்காவின் மிக உயரமான அணைக்கட்டான கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஓரோவில் அணை, உடையும் நிலையில் உள்ளதால் அதைச் சுற்றி வசிக்கும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் ஓரோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஓரோவில் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, எந்நிலையிலும் அணை உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 770 அடி உயரமுள்ள இந்த அணைதான் அமெரிக்க நாட்டின் மிக உயரமான அணையாகும். இது 1968-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அதன் 48 வருடகால வரலாற்றில் முதல் முறையாக முழு கொள்ளளவைத் தாண்டி உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணை உடையும் பட்சத்தில் 100 அடிக்கும் அதிகமான உயரத்தில் நீர் பாயும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஓரோவில் அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகளான பியூட், யூபா மற்றும் சட்டெர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் என இதுவரை இரண்டு லட்சம் மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
1993-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலில் நடந்த கலவரத்துக்குப் பின்பு முதல் முறையாக கலிஃபோர்னியா மாகாணத்தின் அனைத்து வீரர்களும், அதாவது 23,000 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் அவசரகால மீட்புப் பணியில் ஈடுபடுவதற்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள கலிஃபோர்னியா நீர்வளத்துறை, “அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அதன் உபரி நீரை வெளியேற்றும் முதன்மை மற்றும் அவசரகால மதகுகளில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்கும் நடவடிக்கைகள் ஹெலிகாப்டர் உதவியுடன் மேற்கொள்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரோவில் அணைப் பகுதியில் வரும் புதன்கிழமை முதல் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அதற்குள் அணையிலுள்ள நீரின் இருப்பை 50 அடி வரை குறைப்பதே அந்நகரம் நீரில் மூழ்காமல் இருப்பதற்கான தற்காலிக தீர்வாக கருதப்படுகிறது.
நம் நாட்டில் எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் ஆளும் கட்சி எதிர்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியையும் குற்றஞ்சாட்டுவது போல, அமெரிக்காவிலும் இந்த அணை சம்பந்தப்பட்ட பிரச்னையில் ஒருவரையொருவர் மாறிமாறி காரணம் கூறி வருகின்றனர். அதாவது இந்த அணையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டதாகவும் ஆனால் மாநிலத்தின் கவர்னராக உள்ள ஜெர்ரி பிரவுன் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், தாழ்வான பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு காப்பகங்களில் கடந்த சில நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பலர் தங்களின் முக்கியமான ஆவணங்கள் மற்றும் பொருட்களை வீடுகளில் இருந்து எடுத்து வருவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.