தலித்துகளுக்கான பரிசு – கவிஞரின் உளக்குமுறல்
- இதுவல்லவோ நட்பிற்கு இலக்கணம்..! #நண்பர்கள்_தினம் - 06/08/2017
- 1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும் - 21/07/2017
- பாரதிராஜாவின் படங்களும் ஆச்சர்யங்களும்…! - 08/06/2017
உத்திரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்த பிறகு தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் விசித்திரங்களின் வரிசையில் ஒன்றாக, அம்மாநிலத்தின் சில தலித் கிராமங்களுக்கு, முதல்வர் ஆதித்யநாத் வருவதையொட்டி, கிராம மக்களுக்கு சோப்பு, ஷாம்பு ஆகியவற்றை அளித்து, அவர்களை தூய்மைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்திய செய்தி பரபரப்பை உண்டாக்கி, ஏராளமான கண்டனக் கணைகளை அவர்களை நோக்கி பறக்க வைத்தது.
இந்த அவமரியாதை குறித்து, தில்லி தேசிய சட்டப் பல்கலையில், அம்பேத்கர் – பெரியார் – பூலே வாசகர் வட்டத்தை உருவாக்கிய துணை – நிறுவனர் மற்றும் வழக்கறிஞருமாகிய ஆசாங் வான்கடே, தனது உளக்குமுறலை கவிதையாக ஆங்கிலத்தில் வடித்திருக்கிறார். இவர் ஒரு கவிஞரும் கூட..!
நாம், அனைத்து வாசகர்களின் பொருட்டும், அதை தமிழில் மொழியாக்கம் செய்து இங்கே தந்திருக்கிறோம்.
அவரின் கவிதை…
இதோ என்னுடைய வெகுமதி
மனு என்னை அசுத்தமானவனாய் ஆக்கினான்
சாதிப்பெயர்கள் மற்றும் தீண்டாமையின் துர்நாற்றம்
என்மீது உங்கள் தப்பெண்ணங்களால்
மனவேதனைகளின் நறுமணங்களுடன் நான் ஒளிவீசுகிறேன்
நான் ஒடுக்குமுறையால் உருவான அசுத்தம் ஆனால் உங்களின் கழிவு அல்ல.
உங்கள் பிரபுவை மகிழ்விக்கவே,
உங்களின் சோப்பும் ஷாம்ப்பும் இன்று
வெகுமதியாய் எனக்கு.
இவற்றை என்றைக்காவது உங்களின் நாவை சுத்தமாக்கப் பயன்படுத்தியதுண்டா
சிறுபான்மையினர் மீதான வன்மத்தையும், வன்முறையையும் கக்குகிறதே
அல்லது
உங்களின் மூளையை தூய்மைப்படுத்தியதுண்டா?
மனுசாஸ்திரத்தையும் வருணாசிரம தர்மத்தையும் போதிக்கிறதே
உங்களுடைய வெகுமதியால்
என் கண்ணியத்திற்கு களங்கம்
என்னுடைய வெகுமதியால்
உங்களுடைய இறுமாப்பிற்கு பங்கம்
என்னுடைய பாபாசாகிப்பை உரிமை கொண்டாடி
எனது தற்காலிக தூய்மையாளர்களாகிறீர்கள்
எனது காயங்களை இந்த சோப்பு இன்னும் ரணமாக்குகிறது
ஜாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமை என்ற காயங்களை
உங்களின் இரக்கம் எனக்குத் தேவையில்லை
உங்களின் புறக்கணிப்பே எனக்குத் தேவை.
எதிர்ப்பின் கூக்குரல்களில் நான் உரிமைக்கான
பாடலைப் பாடுகிறேன்;
இது எனக்கு கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் அளிக்கிறது
போராடுதலுக்கான சுதந்திரத்தை.
இருவேளை உணவுக்காக
உங்களின் மலத்தை நான் சுமக்கிறேன்
அதை நான் செய்யாவிடில்
இந்தக் குடியரசில் பட்டினியாகத்தான் உறங்குவேன்.
சோப்பும் ஷாம்ப்பும் உணவளிப்பது உங்களின் மடமைக்கு
எனது வயிற்றுக்கல்ல.
நாட்டின் கவனத்தை தன்மீது திருப்ப
உங்களின் பிரபு இங்கிருக்கிறார்
நாங்களோ பார்ப்பதற்கு அழகாய்
சுத்தம் செய்யப்படுகிறோம்
உங்களின் அன்பிற்குரியவர்கள்போல் ஆரவாரிக்க நாங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்
என்னுடைய அகப்புறத்தில் அமைதி குலைகையில்
நடுக்கமுறப்போவது எது?
ஓ பிரபுவே, வந்து என் வீட்டைப் பார்!
அது உன்னுடைய காவிக்கொடியைவிட சுத்தமாகவே இருக்கிறது
உங்களின் உணர்வு தூயதாக இருக்கையில் மட்டுமே பேசவும்
உங்கள் இதயத்தில் நடனமாடும் மனுவை எரிக்கும்போது மட்டுமே புன்னகைக்கவும்.
என் அமைதி குலையத் தொடங்கிவிட்டது
அங்கே ஏற்கனவே விடியல் தென்பட்டுவிட்டது.
நீங்கள் திரும்பிச் செல்லும் முன்னதாக
இதோ எனது வெகுமதி
அம்பேத்கர் மற்றும் புத்தர் என்ற இரு சோப்புகள்தான் அது.
உங்கள் மனதில் இருக்கும் அடிமை சிந்தையை தூய்மையாக்குங்கள்,
உங்கள் அறிவில் ஊடுருவியிருக்கும் சாதியையும், மனுவையும் அழித்தொழியுங்கள்,
உங்கள் காவிக்கொடியை துவைத்து வெண்மையாக்குங்கள்.
ஒருபக்கத்தில் இரு சூரியன்கள் இருக்க இயலாது,
எங்களுக்கான சூரியன் எம்மிடம் இருக்கிறான்
உங்களுடையவைகளை எரித்து சாம்பலாக்க.
மொழிபெயர்ப்பு – பிரசன்ன பாரதி