உலகையே அச்சுறுத்தும் டிரம்ப்பின் அடுத்த அதிரடி! #ParisAgreement

அதிவேகமாக மோசமடைந்து வரும் புவியின் காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக உலகின் 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டு மக்களுடனும், சர்வதேச நாடுகளுடனும் மோதல் போக்கையே கையாண்டு வருகிறார். குறிப்பாக அறிவியல்ரீதியாக நடைமுறைப்படுத்தவியலாததாக கூறப்படும் அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லை சுவர் விவகாரம், முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்கள் மீதான பயணத்தடை, ஒபாமாகேர் என்னும் சுகாதார காப்பீட்டு திட்ட ஒழிப்பு, ஊடகங்கள் மீதான பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வு, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தல் போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறார்.

மேற்கண்ட சறுக்கல்களைவிட டொனால்ட் டிரம்ப்பின் மோசமான கொள்கையாக பார்க்கப்படுவது, காலநிலை மாற்றம் குறித்த அவரின் கருத்துக்களே ஆகும். ஆம், “காலநிலை மாற்றமென்பது அமெரிக்காவின் உற்பத்தியை குறைக்கும் பொருட்டு சீனாவால், சீனர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று” என்பதே காலநிலை மாற்றம் மீதான டொனால்ட் டிரம்ப்பின் புரிதலாகும்.

இந்நிலையில் கடந்த வாரம் இத்தாலியின் சிசிலியில் நடைபெற்ற G-7 நாடுகள் கூட்டத்தின்போது 2015ம் ஆண்டு பாரீஸ் காலநிலை உடன்படிக்கை குறித்த முடிவை இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின்போது பேசிய டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கர்களின் நலனை கருத்திற்கொண்டும், மூடப்பட்ட தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது” என்று திடுக்கிடும் முடிவை அறிவித்துள்ளார்.

இந்தியாவை குற்றஞ்சாட்டிய டிரம்ப்!:

நேற்று நடைபெற்ற பாரீஸ் காலநிலை உடன்படிக்கை மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், இந்தியாவை பல இடங்களில் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக “இந்தியா ஒவ்வொரு வருடமும் பல பில்லியன்கணக்கான நிதியை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெற்றுவருவதாகவும், மேலும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் காரணமாக அமெரிக்கா புதிய அனல்மின் நிலையங்களை திறப்பது தடுக்கப்படுவதாகவும், ஆனால் அதேசமயம் 2020ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனல்மின் நிலையங்களை இருமடங்காக்கவுள்ளதாகவும்” என நேரடியாகவே தாக்கினார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இம்மாத இறுதியில் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் சூழ்நிலையில் டிரம்ப்பின் இக்கருத்து சலசலப்பை உருவாக்கியுள்ளது.

பாரீஸ் காலநிலை உடன்படிக்கை கூறுவதென்ன?

நமது பூமியினுடைய மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால் அது மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர்மட்டம் உயருதல், பேய்-மழை, கடும் வறட்சி, நோய்கள் போன்றவை எண்ணிடலங்காத வகையில் அதிகரித்து நம்மை அச்சுறுத்தி வருகின்றன.

மேற்கண்ட பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பணித்திட்ட பேரவையானது (United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கடந்த 1992ம் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து 23 ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தையின் பிறகு, கடந்த 2015ம் டிசம்பரில் பாரீசில் நடந்த காலநிலை மாநாட்டில் (COP21) வரலாற்று சிறப்புமிக்க “பாரீஸ் உடன்படிக்கை”யானது, உலகின் 195 நாடுகளினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியசை (முடிந்தால் 15.5 டிகிரி செல்சியஸ்) தாண்டவிடாமல் தடுக்கும் வகையில், அதற்கு முக்கிய காரணமான பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் அளவை குறைக்க உலக நாடுகள் முடிவு செய்திருந்தன. குறிப்பாக பசுமை இல்ல வாயுக்களை அதிகளவில் வெளியிடும் அமெரிக்கா போன்ற நாடுகளானது, இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்கு தேவையான நிதியுதவியை அளிக்கவும் இது வழிவகை செய்கிறது.

இந்நிலையில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடரும் பட்சத்தில், வரும் 2030-2050க்கு இடைப்பட்ட ஒவ்வொரு ஆண்டும் 2,50,000 மக்கள் இதன் காரணமாக உயிரிழப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

டிரம்ப்பின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த உலகத் தலைவர்கள்:

இம்மானுவேல் மக்ரோன்

பிரான்சின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள இம்மானுவேல் மக்ரோன், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு குறித்து கூறும்போது ,”பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு தவறானதாகும். அறிவியலாளர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டு இந்த அறிவிப்பால் ஏமாற்றமடைந்ததாக நினைப்பவர்கள் பிரான்சை அவர்களின் இரண்டாம் வீடாக எண்ணி இங்கு வந்து, எங்களோடு இணைந்து பணியாற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான டிம் குக், “இந்த முடிவு நமது பூமிக்கு தவறானதாகும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஆப்பிள் நிறுவனம் எந்நாளும் பின்வாங்காது’ என்று தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான மார்க் சக்கர்பேர்க், “பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் இந்த முடிவு நமது சுற்றுச்சூழலையும், பொருளாதாரத்தையும், நமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும். பேஸ்புக் அமைக்கும் தரவு மையங்கள் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக்கொண்டு அமைக்கப்படும். மேலும், காலநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியை, இன்னும் காலதாமதம் ஆவதற்கு முன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Withdrawing from the Paris climate agreement is bad for the environment, bad for the economy, and it puts our children's…

Posted by Mark Zuckerberg on Thursday, June 1, 2017

முரண்பாடாக உள்ள இந்தியாவின் காலநிலை குறித்த கொள்கை:

பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளது உலகநாடுகளிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதிலும், குறிப்பாக பாரீஸ் காலநிலை உடன்படிக்கையால் அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படும் நிலையில், வளர்ந்த நாடுகளிடம் இருந்து பில்லியன்கணக்கான நிதியுதவியை பெறும் இந்தியா, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அனல்மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்னுற்பத்தியை 2020ம் ஆண்டுக்குள் இருமடங்காக்கும் என்று அறிவித்துள்ளது எவ்வகையில் நியாயமாகும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி முன்னேறி வரும் சூழ்நிலையில் சுற்றுச்சூழலுக்கு அதிகப்பட்ச தீங்கை விளைவிக்கும் அனல்மின் நிலையங்களை பெருக்குவதில் ஆர்வம் காட்டும் இந்தியா, அதே சமயத்தில் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் அதன் முடிவிற்கு உட்பட்டு கையெழுத்திட்டிருப்பது முரண்பாடாக உள்ளது. மேலும், இதுவரை பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லாத அணுமின் நிலையங்களை அமைப்பதிலும் இந்தியா தொடர்ந்து அதீத ஆர்வம் காட்டி வருகிறது.

காலநிலை மாற்றத்தில் இருந்து உலகை காப்பதில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஒரு நியாயம், இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

நாட்டில் அதிகரித்து வரும் மதவாதத்தையும், வெகுஜன மக்களுக்கு எதிரான அரசின் பல்வேறு நடவடிக்கைளையும், OPS மற்றும் EPS குறித்து பேசுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்களே, என்றைக்கு இதுபோன்ற விஷயங்கள் குறித்து எப்போது பேசப்போகிறீர்கள்?!

*மேற்கண்ட கட்டுரையானது, “ஊடகம் 360” இணையதளத்தின் முதன்மை ஆசிரியரால் விகடன் இணையதளத்திற்காக எழுதப்பட்டதாகும்.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *