உங்களுக்கு ஸ்ட்ரீட் வியூ தெரியும்! ஷீப் வியூ தெரியுமோ?
பரோயே தீவுகள், டென்மார்க் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தன்னாட்சி மாகாணம். இயற்கையின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் ஆண்டு முழுவதும் குளிரான இருக்கும் 18 தீவுகளைக் கொண்டது. அத்துடன் மலைகள், பறவைகள் போன்றவற்றுடன் வித்தியாசமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டது. மொத்தம் கிட்டத்தட்ட 50,000 மக்கள் வாழும் இத்தீவுகளில், ஆடுகளின் எண்ணிக்கை 70,000, அதாவது மனிதர்களை விடவும் அதிகம். எனவே இது ஆடுகளின் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரில் எல்லா இடங்களிலுமே, ஆடுகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் அளவிற்கு, இயற்கை சூழ்ந்த அழகான பிரதேசம்!
டுரிட்டா, பரோயே தீவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண். இவருக்கு நெடுங்காலமாகவே ஒரு கவலை இருந்ததாம். அதாவது மற்ற ஐரோப்பிய நாடுகளின் நகரங்கள், தீவுகள் எல்லாம் உலக மக்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில் பரோயேவுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதுதான் அது. எனவே தன் தீவை பிரபலப்படுத்தும் வகையில் தன்னாலான முயற்சிகளை எடுக்க தொடங்கினார். இங்குதான் என்ட்ரி ஆகிறது கூகுள் நிறுவனம்!
கூகுள் நிறுவனத்தின் மிக முக்கியமான சேவைகளில் ஒன்று “கூகுள் மேப்ஸ்” ஆகும். இதை பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனாளர்களே கிடையாது என்று கூறுமளவுக்கு அத்தியாவசியமான ஒன்றாகவும் ஆகிவிட்டது. இந்நிலையில் கூகுள் மேப்ஸின் அடுத்த கட்டமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது “கூகிள் ஸ்ட்ரீட் வியூ”, அதாவது உலகின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களின் வீதிகளை 360 டிகிரியில் உட்கார்ந்த இடத்திலிருந்து காண முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. இதன் சிறப்பம்சங்களை அறிந்த டுரிட்டா “கூகுளின் ஸ்ட்ரீட்வியூவை” தன் தீவில் அதிகமாக இருக்கும் ஆடுகளை பயன்படுத்தி உருவாக்கலாம் என்று யோசித்ததன் பயனாக கூகுள் நிறுவனம் அவரின் யோசனையை பட்டைத் தீட்டி அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அளித்து அவரை அந்த ப்ராஜெக்ட் மானேஜராகவும் நியமித்துள்ளது.
அதன்படி, அழகான பரோயே தீவை 360 டிகிரியில் படம் பிடிக்கும் சூரிய ஒளியில் இயங்கும் பிரத்யேகமான கேமராவை அங்குள்ள ஆடுகளின் மீது பொருத்திவிட்டனர். ஆடுகள் செல்லும் இடங்களையெல்லாம் இந்த கேமரா படம் பிடித்து அப்டேட் செய்து கொண்டே இருக்குமாம். இதன் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பரோயேவை அடையாளம் கண்டுக்கொண்டு இங்கு படையெடுப்பார்கள் என்று நம்புகிறார்கள். வெறும் ஆடுகள் மட்டும் இல்லாமல் கார்கள், பைக்குகள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களிடம் இந்த கேமராவை அளித்தும் படம் பிடிக்கிறது கூகிள் நிறுவனம். இந்த தீவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அங்குள்ள சுற்றுலா அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு அவர்களும் இந்த 360 டிகிரி திட்டத்திற்கு பங்களிக்கலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள்!
ஷீப்வியூ வீடியோ..