இந்தியாவில் 13 பேரில் ஒருவர் மாட்டிறைச்சி உண்பவர் – சொல்கிறது மத்திய அரசின் புள்ளி விவரம்!
இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் சந்தித்து வருகிறது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு மாணவ அமைப்புகளும் மாட்டிறைச்சி திருவிழாக்களை நடத்திவருகிறார்கள். மேலும், மத்திய அரசின் இந்த அறிவிப்பை தங்களது மாநிலங்களில் நடைமுறைப்படுத்த போவதில்லையென கேரளா, மேற்குவங்காளம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் மாநிலவாரியாக எத்தனை சதவீதம் சைவம்-அசைவம் உண்பவர்கள் உள்ளார்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள் எத்தனை சதவீதம் உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகளுக்குக்கான பதிலை மத்திய அரசின் மக்கள் தொகை ஆணையம் மற்றும் தேசிய மாதிரி ஆய்வு மையத்தின் தரவுகள் ஆச்சர்யகரமான பதிலை அளித்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் 15க்கு மேற்பட்டவர்களில் ஆண்களில் 28.4%, பெண்களில் 29.3 சதவீத பேர் சைவ உணவுகளையும், அசைவ உணவுகளை 71.6% ஆண்களும், 70.7 சதவீத பெண்களும் உண்பதாக 2014ம் ஆண்டு அறிக்கையின் மூலம் தெரிகிறது.
மேலும் இந்தியாவிலேயே அதிகபட்ச சைவபிரியர்கள் ராஜஸ்தானிலும் (ஆண்கள்: 73.2%, பெண்கள்:76.6%), அதிகபட்ச அசைவப்பிரியர்கள் மேற்கு வங்காளத்திலும் (ஆண்கள்: 98.7% , பெண்கள்:98.4%) உள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆண்களில் 2.2%, பெண்களில் 2.5 சதவீத பேர் சைவ உணவுகளையும், அசைவ உணவுகளை 97.8% ஆண்களும், 97.5 சதவீத பெண்களும் உண்பதாக அந்த புள்ளிவிவரம் கூறுகிறது.
அடுத்ததாக தற்போது நாட்டில் மிக முக்கிய விவாதப்பொருளாகியுள்ள மத்திய அரசின் மாட்டிறைச்சி மீதான தடை இருந்து வரும் நிலையில், நாட்டில் உள்ள 13 பேரில் ஒருவர் மாட்டிறைச்சி உண்பவர் என்ற தகவலானது தேசிய மாதிரி ஆய்வு மையத்தின் 2011-12ம் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, இந்தியா முழுவதும் 7.53 சதவீத மக்கள் மாட்டிறைச்சி (பசு மற்றும் எருது சேர்த்து) உண்பதாக இந்த புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவிலேயே அதிகபட்சமாக மேகாலயாவில் 80.74% பேர் மாட்டிறைச்சி உண்பதாகவும், குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.07% மக்கள் உண்பதாகவும், தமிழகத்தில் 5.89% பேரும் மற்றும் மாட்டிறைச்சி மீதான கடுமையாக எதிர்க்கும் கேரளாவில் 25.28% பேரும் மாட்டிறைச்சி உண்பதாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.