இதுவல்லவோ நட்பிற்கு இலக்கணம்..! #நண்பர்கள்_தினம்
- இதுவல்லவோ நட்பிற்கு இலக்கணம்..! #நண்பர்கள்_தினம் - 06/08/2017
- 1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும் - 21/07/2017
- பாரதிராஜாவின் படங்களும் ஆச்சர்யங்களும்…! - 08/06/2017
நட்பு என்றால் அதற்கு உதாரணமாக, சிலரின் நட்பை பற்றி கூறுவார்கள். கார்ல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு மற்றும் புராணத்தில் வரும் கண்ணன் – குசேலன் நட்பு என்பன போன்ற பல எடுத்துக்காட்டுகள் வந்து விழும்.
ஆனால், வரலாற்றின் நவீன காலத்தில் நம்மிடையே இருந்த, ஒரு மகா அதிசய நட்பைப் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் மற்றும் அந்த நட்பைப் பற்றிய விளம்பரம் எந்த அளவிற்கானது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
அதிசய நண்பர்கள்!
பெரியார் – ராஜகோபால ஆச்சாரியார் (இராஜாஜி) ஆகிய இருவருக்கு இடையிலான தனிப்பட்ட நட்புதான் அந்த அதிசய நட்பு!
இந்த இருவரின் நட்பு, வேறு பல நட்புகளை காட்டிலும் தனித்துவமானது. ஏனெனில், கார்ல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நட்பை எடுத்துக்கொண்டால், ஒரேமாதிரியான சிந்தனை கொண்ட இருவருக்கு இடையில் ஏற்பட்ட நட்பாகும் அது.
கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் ஆகிய இருவருக்கு இடையிலும், கொள்கை ரீதியாகவோ அல்லது சிந்தனை ரீதியாகவோ குறிப்பிடத்தக்க மாறுபாடு கொண்டவர்கள் இல்லை. கண்ணன் – குசேலன் நட்பும் அத்தகையதே.
இவர்கள் நட்பில் என்ன சிறப்பு?
இங்கேதான், பெரியார் – ராஜாஜி நட்பு மாறுபட்டு நிற்கிறது. இவர்கள் இருவருமே, தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதி, எதிர் – எதிர் துருவங்களில் நின்று செயல்பட்டவர்கள். அரசியல், சமூக மற்றும் கருத்து தளங்களில் மிகவும் எதிரெதிர் கருத்துக்களைக் கொண்டவர்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் சிறந்த நண்பர்கள்.
இதில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். எதிரெதிர் கொள்கைகளும், அரசியல் நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் எந்தளவு நேருக்குநேர் மோதிக்கொண்டுள்ளனர்? அப்படி மோதிக்கொண்டே, அந்த மோதலானது, தங்களின் தனிப்பட்ட நட்பை பாதிக்காதவாறு தக்கவைத்துக் கொண்டுள்ளார்களா? என்பதுதான் கேள்வியே!…
நட்பு என்றால், வெறுமனே எங்காவது சந்தித்தால், சாதாரணமாக சிரித்துக்கொள்வது அல்லது இரண்டொரு வார்த்தைகள் பேசிக்கொள்வது என்பதல்ல. ஆழமான, அந்தரங்க நட்பு. இந்த நட்புதான், பெரியார் மற்றும் ராஜகோபால ஆச்சாரியார் ஆகியோருக்கிடையே இருந்தது.
இருவரின் சமூக களம் எப்படிப்பட்டது?
பெரியார், தனது நடு வயதுகளில் தொடங்கி, தான் இறக்கும் 95 வயதுவரை, எந்த சமூகத்தின் ஆதிக்கத்தை கடுமையாகவும், தீவிரமாகவும் எதிர்த்து வந்தாரோ, அந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆச்சாரியார்.
அதேபோல், ஆச்சாரியார், தன் வாழ்நாளின் பெரும்பகுதி, எந்த பெரும்பான்மை சமூகத்தை முன்னேறவே விடக்கூடாது, அவர்களை படிக்கவிடக்கூடாது என்று செயல்பட்டாரோ, அந்த பெரும்பான்மை சமூகத்தில் ஒருவர் பெரியார்.
தீராத தலைவலி
ஆச்சாரியாரின் அரசியல் செயல்பாடுகளுக்கு தொடர்ந்த தலைவலியாய் திகழ்ந்தவர் பெரியார்! 1930களின் இறுதியில், ஆச்சாரியார் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அவர் கொண்டுவந்த இந்தி திணிப்பை கடுமையான எதிர்த்து, போராட்ட களம் கண்டவர் பெரியார்.
மேலும், 1954ம் ஆண்டு, ஆச்சாரியார் இரண்டாவது முறை முதல்வராக இருந்தபோது, அவர் கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக எதிர்த்து, ஆச்சாரியார் தனது பதவியை விட்டு செல்வதற்கு முக்கிய காரணமாய் இருந்தார் பெரியார்.
காமராஜரை ஆதரித்த பெரியார்
தனக்குப் பதிலாக, தான் விட்டுச்செல்லும் நாற்காலியில், தன் கொள்கைக்கு தோதான சி.சுப்பிரமணியத்தை அமர்த்த முயன்ற ஆச்சாரியாருக்கு, அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரை அப்பதவிக்கு தீவிரமாக ஆதரித்து, ஆச்சாரியாரின் திட்டத்தை காலி செய்தவர் பெரியார்.
மேலும், பல்லாண்டுகளாக, காங்கிரசில் எதிரெதிர் துருவங்களாக இயங்கிவந்த காமராஜர் – ஆச்சாரியார் ஆகியோரின் அரசியலில், காமராஜரை தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். ஆச்சாரியார் ஒரு முயலைப் பிடித்து, அதற்கு 4 கால்கள் என்று சொன்னால், அதற்கு நீங்கள் 3 கால்கள் என்று சொல்லுங்கள் என்று மக்களிடையே முழங்கியவர் பெரியார்.
ஆரம்பகாலம் முதற்கொண்டே…
ஈரோடு நகரசபை சேர்மனாக பெரியாரும், சேலம் நகரசபை சேர்மனாக ஆச்சாரியாரும் ஏறக்குறைய சமகாலத்தில் பதவி வகித்தவர்கள். ஆச்சாரியாரும், வரதராஜுலு நாயுடுவும் சேர்ந்தே, பெரியாரை 1919ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வந்தனர்.
அப்போதிருந்து, இடஒதுக்கீட்டுப் பிரச்சினை, தலித் ஆலய நுழைவுப் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை உள்ளிட்ட பல விஷயங்களில், ஆச்சாரியாரும், பெரியாரும் எதிரெதிர் துருவங்களே. பெரியார் ஒரு கட்டத்தில், காங்கிரசை விட்டு விலகி, சுயமரியாதை இயக்கம் தொடங்கியதிலிருந்து அந்த எதிர்ப்பு நிலை இன்னும் வேகமெடுக்கிறது.
பெரியார் – மணியம்மை திருமணம்
1940ம் ஆண்டுகளின் இறுதியில், தன் கொள்கையில் அலாதி பற்றுக்கொண்டு, தனக்கு சிறந்த முறையில் பணிவிடை செய்துவரும் மணியம்மை என்ற பெண்ணை, இயக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, திருமணம் செய்துகொள்ள வேண்டி, அதுதொடர்பான ஆலோசனையை, தனக்கு கொள்கை ரீதியாக நெருக்கமாக இருக்கும் வேறு யாரிடமும் கேட்காமல், தனது நெருங்கிய நண்பர் ஆச்சாரியாரிடமே கேட்கிறார் பெரியார்.
அதற்கு, “ரகசியம்” என்று குறிப்பிட்டு, பதில் கடிதம் எழுதுகிறார் ஆச்சாரியார். அக்கடிதத்தில், மணியம்மையுடனான உங்களின் திருமணம், உங்களின் இன்றைய சமூக மதிப்பிற்கு பெருமளவில் சேதம் உண்டாக்கும். எனவே, அத்திருமணத்தை தவிருங்கள்” என்ற பொருள் தரும்படி கூறுகிறார். ஆனால், பெரியார், மணியம்மையை திருமணம் செய்துகொள்கிறார்.
ஏச்சு, பேச்சுகளை தாங்கிய ஆச்சாரியார்
பெரியாரின் தொண்டர்கள், தங்கள் தலைவரின் முடிவுக்கு, ஆச்சாரியாரே காரணம் என்று அவரை ஏசுகின்றனர். ஆனால், “ரகசியம்” என்று குறிப்பிட்டு எழுதிய கடிதம் என்பதால், உண்மை என்ன? என்பது பற்றி, எவ்வளவு ஏச்சு, பேச்சுக்கு ஆளானாலும், ஆச்சாரியாரும் வாய் திறக்கவில்லை, தனது நண்பரின் கருத்துக்கு மதிப்பளித்து பெரியாரும் வாய்திறக்கவில்லை.
அதுதான் பெரியார்!
தான் மருத்துவமனையில் இருந்தபோது, தனக்கு வழங்கப்பட்ட நெய்யை, ஆச்சாரியாருக்கு பிடிக்குமே என்று எண்ணி, வீட்டிற்கு செல்லும்போது, ஆச்சாரியாரை தேடிச்சென்று அதைக் கொடுத்துச் சென்றதுபோல், இவர்கள் இருவரின் நட்பிற்கு பல உதாரணங்கள் உண்டு. ஆனால், கொள்கைக்காகவே வாழ்ந்தவர் பெரியார் என்பதால், ஒரு பிராமணர், நண்பர் என்பதற்காக, அவரின் செயல்களை ஆதரிக்கவோ அல்லது தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, கண்டும் காணாமலோ இருந்துவிடவில்லை. அதுதான் பெரியாரின் சிறப்புத்தன்மை.
அதேபோல், ஆச்சாரியாரும் தான் கொண்ட கொள்கைக்கு கடைசிவரை விசுவாசமாகவே இருந்தார். சிலம்பு செல்வர் என புகழப்படும் ம.பொ.சிவஞானம் போன்றவர்கள், ஆச்சாரியாருக்கு சிஷ்யர்கள்போல் செயல்பட்டு, பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் கடுமையாக எதிர்த்தார்கள். அந்த சிலம்பு செல்வர் போன்றவர்கள்தான், பெரியாரை எதிர்க்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு சிறந்த முன்மாதிரிகள் மற்றும் உந்து சக்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலங்காத பெரியார் கலங்கினார்..!
ஆச்சாரியார், 1972ம் ஆண்டு இறந்தபோது, பெரியார் குலுங்கி குலுங்கி அழுததாய் சொல்வார்கள். தன் முதல் மனைவி நாகம்மையார் இறந்போதுகூட, அப்படி அழாதவர் பெரியார். ஆச்சாரியார் இறந்த அடுத்த ஆண்டிலேயே, அதாவது 1973ம் ஆண்டிலேயே பெரியாரும் இந்த உலகிலிருந்து நீங்கிவிட்டார்.
என்ன ஒரு ஒற்றுமை!
இவர்கள் இருவரும் ஏறக்குறைய ஒரே வயதுவரை வாழ்ந்தார்கள். ஆச்சாரியார் பிறந்தது 1878ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி. மறைந்தது 1972ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி.
பெரியார் பிறந்தது 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி. மறைந்தது 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி.
பெரியாருக்கு ஒரு ஆண்டு முன்னதாகவே பிறந்து, ஒரு ஆண்டு முன்னதாகவே சென்றுவிட்டார் ஆச்சாரியார். பெரியார், ஒரு ஆண்டு பின்னதாக பிறந்து, ஒரு ஆண்டு பின்னதாக சென்றார். இருவரும் இறந்தது அடுத்தடுத்த தேதிகளில்.
இன்னொரு முக்கிய விஷயம், இவருவரும், தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அன்று, அருகருகே இருந்த கோவை (அன்று ஈரோடு, கோவை மாவட்டத்தில்தான் இருந்தது. தனி மாவட்டம் பிரிக்கப்படவில்லை) மற்றும் சேலம் மாவட்டங்களில் பிறந்தவர்கள்.
உண்மையான நட்பிற்கு இதுபோன்ற பல உதாரணங்கள் இருக்கும் நிலையில், வருடத்திற்கு ஒரு முறை நண்பர்கள் தினத்தன்று மட்டும் குறுஞ்செய்தி செய்துவிட்டு உங்கள் நண்பர்களையும், நட்பின் இலக்கணத்தையும் கொச்சைப்படுத்திவிடாதீர்கள்!