அரை நூற்றாண்டாக தமிழக ஊடகங்களின் ஆக்ரமிப்பாளர்…!

மேற்கண்ட தலைப்போடு, படத்தையும் பார்ப்பவர்கள் யாரை சொல்ல வருகிறேன் என்று உடனே ஊகிப்பது சாதாரண விஷயமே…! ஆனால், இக்கட்டுரை திமுக தலைவர் கருணாநிதியைப் புகழ்வதற்காக எழுதப்பட்டதா? இது திமுக சார்பு கட்டுரையா? என்ற ஐயம் பலருக்கு உடனே எழும். ஏனெனில் நாம் பெரும்பாலும் அப்படித்தான் பழக்கப்பட்டு விட்டோம். ஒருவர் நல்ல தலைவரா அல்லது கெட்டத் தலைவரா? அவர் செய்த நன்மைகள் என்ன? அல்லது தீமைகள் என்ன? என்ற ரீதியில் அலசுவதை விட்டுவிட்டு, மனிதர்கள் என்ற முறையில் அவர்களிடம் இருக்கும் நல்ல பண்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதைப்பற்றி அலசுவது எந்தவகையிலும் குற்றமாகாது என்பதே என் எண்ணம். அந்த வகையில் முயன்று பார்க்கப்பட்டதுதான் இக்கட்டுரை. கருணாநிதியின் அரிய பண்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதைப்பற்றி ஓரளவு பேசுவதே எனது நோக்கம். அவரின் இந்தக் குறிப்பிட்ட பண்பானது, அவரை எப்போதும் ஆகாத நபர்களாலும் பலமுறை சிலாகித்துப் பாராட்டப்பட்டுள்ளது…!

உள்ளே செல்வோமா…!

தொடக்க காலம் தொட்டு, திமுக-வில் தனக்கென ஒரு குறிப்பிடத்தக்க செல்வாக்கு வட்டத்தையும், தொண்டர்களின் நேரடி தொடர்பையும் வளர்த்துவந்த கருணாநிதி, அண்ணாவின் காலத்தில் அக்கட்சியின் முக்கிய செல்வாக்கு வட்டத்தில் வலம் வருகிறார். அண்ணாதுரையின் மரணத்திற்கு பிறகு, பலரும் எதிர்பாரா ஒரு நிலையில், தொண்டர்களின் நேரடி தொடர்பற்ற மற்றும் அரசியல் விளையாட்டுகளில் போதிய அனுபவமற்ற நெடுஞ்செழியன் போன்றவர்களை பின்னுக்குத் தள்ளி, அன்றைக்கு தனக்கிருந்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்களின் துணையுடன், கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுகிறார். 1969ம் ஆண்டு பிப்ரவரி முதல் 1976ம் ஆண்டின் முதல் மாதம் வரை, தொடர்ந்து முதல்வராக இருக்கிறார் கருணாநிதி. பின்னர், எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, 1989ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டின் தொடக்கம் வரை மீண்டும் முதல்வராக இருக்கிறார். பின்னர், 1996-2001 வரையிலும், 2006-2011 வரையும் முதல்வர். ஏறக்குறைய 19 ஆண்டுகள் முதல்வர் பதவி…!

ஆனால், அவரின் அரசியல் வாழ்வை ஒப்பிடும்போது, அவர் முதல்வர் பதவி வகித்தது, மிகவும் குறைவான ஆண்டுகளே. 1969 முதல், மொத்தம் 48 ஆண்டுகள் ஒரு பெரிய மாநிலக் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர், 19 ஆண்டுகள் மட்டுமே முதல்வர்.

ஆனால், இவரின் சமகால போட்டியாளர்களுள் ஒருவரான எம்.ஜி.ராமச்சந்திரன், ஏறக்குறைய 15 ஆண்டுகள் (1972ம் ஆண்டின் இறுதி மாதங்கள் தொடங்கி, 1987 டிசம்பர் வரை) மட்டுமே ஒரு கட்சியின் தலைவராக இருந்து, அதில் 10 ஆண்டுகளை முதல்வர் நாற்காலியிலேயே கழித்தார்…! சமீபத்தில் மறைந்த ஜெயலலிதாவோ, தான் கட்சித் தலைவராக பதவி வகித்த 27 ஆண்டுகளில் (1989 முதல்) 15.5 ஆண்டுகள் முதல்வராக இருந்துவிட்டார்.

எது எப்படியிருப்பினும், கருணாநிதி தொடர்ந்து பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருபவராகவே 5 மாதங்கள் முன்புவரை இருந்து வந்திருக்கிறார். காரணம் என்ன? அவரின் அரசியல் ராஜதந்திரமா? அவரின் சாணக்கியத்தனமா? நிச்சயமாக இல்லை. உண்மையில் அவைதான் காரணமென்றால், அவர் இன்னும் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்க வேண்டும் மற்றும் 2 முறை தனது ஆட்சி கலைக்கப்படாமல் காப்பாற்றியிருக்க வேண்டும். (சில நேரங்களில் சில விஷயங்களில் அவர் விடாப்பிடியாகவும் இருந்திருக்கலாம்) அவர்மீது தேவையின்றி கல்லெறிந்த பத்திரிகைகள் மற்றும் விமர்சகர்களை, அவரின் சமகால போட்டியாளர்களைப்போல், அடக்கி ஒடுக்கியிருக்க வேண்டும்.

ஆனால், மேற்கண்டவை எதுவும் நடக்காமலும், அவரால் தொடர்ந்து மீடியாக்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களையும் ஆக்ரமிக்க முடிந்திருக்கிறது…! அந்த ஆக்ரமிப்பில், இவருக்கு எதிரான விமர்சனங்களும் மிக கணிசமானவை என்பதையும் மறுப்பதற்கில்லை.

இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கும்போது கிடைக்கும் ஒரே பதில், அவரின் ஓயாத உழைப்பு என்பதே…! இதுவரை இருந்த தமிழக முதல்வர்களிலேயே, மிக மிக கடின உழைப்பாளி, கருணாநிதியே…! என்று சில விமர்சகர்கள கூறுகின்றனர். கூர்ந்து பார்த்தால், ஏன், அப்படிக்கூட பார்க்கத் தேவையில்லை; மேலோட்டமாகப் பார்த்தால்கூட, அந்தக் கூற்றில் குற்றங்காண முடியவில்லை.

சாதாரணமாக, அன்றாட பத்திரிகைகளைப் படிப்பதாக இருந்தாலும் சரி,

தான் சிறுவயது மாணவனாக இருந்தபோது தொடங்கி, இன்றுவரை தொடர்ந்து நடத்திவரும் சாதனை பத்திரிகையான முரசொலியில் எழுதுவதாக இருந்தாலும் சரி,

சொந்தமாக எழுதி அறிக்கை விடுவதிலும் சரி,

முதல்வராக இருக்கையில், கோப்புகளை முழுமையாக படிப்பதிலும் சரி,

அரசின் சில முக்கிய கட்டுமானத் திட்டங்களை தேவையானபோது பார்வையிடுவதிலும் சரி,

அரசு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் விழாக்களில் நேரடியாக கலந்துகொள்வதிலும் சரி,

இயற்கைப் பேரிடர் பாதிப்புகளை நேரடியாக பார்வையிடுவதிலும் சரி

அரசப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரையும் சந்திப்பதிலும் சரி,

நண்பர்களோடு கலந்துரையாடுவதிலும் சரி,

பிறர் தரும் புத்தகங்களைப் படித்து கருத்து சொல்வதிலும் சரி,

எப்போதும் எதையாவது படித்துக் கொண்டிருப்பதிலும் சரி,

இலக்கியங்கள் மற்றும் சினிமா கதை வசனங்கள் உள்ளிட்டவைகளை எழுதுவதிலும் சரி,

கட்சியினுடைய தலைமை அலுவலகம் வருவதாக இருந்தாலும் சரி,

இதர நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதாக இருந்தாலும் சரி,

எதிர்க்கட்சி என்ற முறையில் எப்போதும் துடிப்பான அரசியல் செய்வதாக இருந்தாலும் சரி,

தனது குடும்ப விவகாரங்களை தீர்ப்பதிலும் சரி….

மேற்கண்ட அனைத்திலும், திமுக தலைவர் கருணாநிதி ஒரு அற்புதமான உழைப்பாளி…! பொதுவாழ்க்கை என்றதொரு பதத்திற்கு ஒரு சிறப்பான அர்த்தத்தை தந்தவர் அவர்…! இவரின் கடின உழைப்புதான், ஓய்ந்துவிடாத இவரின் தன்னம்பிக்கைதான், குறைந்தவிடாத இவரின் தன் முனைப்புதான், இவரை, இத்தனையாண்டுகள், எத்தனை சறுக்கல்கள் நேர்ந்தாலும், தூக்கி நிறுத்தி வைத்துள்ளன…!

இவர் தந்த உழைப்பில் சில விழுக்காடுகளைக் கூட, எம்.ஜி.ராமச்சந்திரனோ அல்லது ஜெயலலிதாவோ நிச்சயமாகத் தரவில்லை என்பது தெளிவாக தெரியக்கூடிய ஒன்றுதான். ஆனால், கருணாநிதிக்கு உழைப்பு முதன்மையான பலமென்றால், அவர்களின் பலம் வேறு. கருணாநிதியின் ஒட்டுமொத்த எதிர்ப்புத் தளங்களும் அவர்களுக்கு ஆதரவாக நின்றன. கருணாநிதியை பயமின்றி விமர்சனம் செய்வோர், அவர்களிடத்தில் பம்முவார்கள். மீடியாக்களும், ஏன் நடுநிலை மீடியாக்கள் என்று தம்மை அறிவித்துக்கொண்டு செயல்படுபவைக்கூட, இந்த விமர்சன விஷயத்தில் நடுநிலையாக செயல்பட்டதைப்போன்று கண்டறிய முடிந்ததில்லை.

இந்திய அளவில், திமுக தலைவரை விட, வயதில் இளைய சில அரசியல் தலைவர்கள், தம் பிள்ளைகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, ஓரளவு ஒதுங்கியும் விட்டார்கள். இவருக்கு அடுத்த வயதை ஒத்த பலர், அரசியலிலிருந்தே ஒதுங்கி விட்டார்கள். ஆனால், கருணாநிதிக்கோ, அரசியல் வாழ்வின் மீது ஒரு தீராத மோகம்!(கலைஞர் கருணாநிதியின் அரசியல் மோகம் குறித்து, அறிஞர் அண்ணாதுரை கூட,  ஒரு சுவையான விமர்சனத்தை செய்ததுண்டு) இவரிடமிருந்து இவர் கட்சியினரோ அல்லது குடும்பத்தினரோ, எதையும் வலுக்கட்டாயமாக பறித்துவிடவும் முடியாது. இவர் ஒன்றும் என்.டி.ராமராவோ, முலாயம்சிங் யாதவோ அல்லது எடியூரப்பாவோ அல்ல…
அதிமுக நிறுவனரின் மீது, தமிழக மக்களில் ஒரு பகுதியினர், தங்களின் பகுத்தறிவை மீறிய அளவில், பித்துப்பிடித்து திரிந்தார்கள். கருணாநிதிக்கு அந்த சினிமா கவர்ச்சியோ அல்லது உருவக் கவர்ச்சியோ இல்லைதான். ஆனாலும், ஒரு
பெரிய எண்ணிக்கையிலான தொண்டர் படையை இவரால் தொடர்ந்து தன் பக்கம் வைத்துக்கொள்ள முடிகிறது. எத்தனை தேர்தல் தோல்விகளை சந்தித்தபோதும், காணாமல் போய்விடாமல், முதல் இரண்டு இடங்களுக்குள்ளேயே  தொடர்ந்து அரசியல்களமாட முடிந்தது. ஒரு நிலப்பிரபுத்துவ பாணியில் இவர் பல்லாண்டுகளாக திமுக-வை நடத்திவந்த போதிலும், இவரின் செல்வாக்கு சேதாரத்திற்கு உள்ளாகவில்லை.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக, தன்னை அரசியல்ரீதியாக ஆட்டிப் படைத்த ஜெயலலிதா காலமானதும், என்னவொரு கால ஒற்றுமையோ தெரியவில்லை, இன்னும் சில ஆண்டுகள் துடிப்பாக இயங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, தனது தொன்னூறுகளில் இருக்கும் கலைஞர் கருணாநிதிக்கு வயோதிக தொல்லை உக்கிரமடையத் தொடங்கியது. தீவிர சிகிச்சைக்கு உட்பட்டு, வீடு திரும்பிய கருணாநிதியிடமிருந்து, எந்த அறிக்கைகளும் இல்லை; முரசொலியில் உடன்பிறப்புகளுடனான உரையாடல்கள் இல்லை. அரசியலில் ஏதோ வெறிச்சோடியது போன்ற ஒரு சூழல் நிலவுகிறது…

தீவிர ஓய்விலும், தொடர் சிகிச்சை மேம்பாட்டிலும் அவரின் நாட்கள் நகர்கிறது என்ற செய்திகளே நமக்குக் கிடைக்கின்றன. ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளாக இவரின் அறிக்கைகளோ அல்லது இவரைப் பற்றி செய்திகள் வராத நாட்களோ கிடையாது என்பார்கள். இதுவொரு உலக சாதனை…! என்றும்கூட சொல்வார்கள். அவரின் ஓட்டம் இப்போதைக்கு நின்றிருந்தாலும், அந்தச் சாதனை, பல்லாண்டுகள் தொடப்பட முடியாத சாதனையாகவே கட்டாயம் இருக்கும் என்று எவரும் கூறலாம்…!

வரும் ஜுன் 3ம் தேதி அவரின் 94வது பிறந்தநாளோடு, சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட வைர விழாவையும்(60 ஆண்டுகள்) சேர்த்து, நாடெங்கிலும் உள்ள பல்வேறு தலைவர்களையும் அழைத்து, பிரமாண்டமாக கொண்டாட திமுக தயாராகி வருகிறது. அன்றைய நாளில் அவர் நம்முன் எப்படி தோன்றுகிறார் என்று பார்ப்போம்…! தமிழக அரசியல் சூழல் சீர்கெட்டு சின்னாபின்னமாகி கிடக்கும் நிலையில், கருணாநிதியின் இயக்கமின்மை கடுமையாகவும், ஏக்கமாகவும் உணரப்படுகிறது. அவரது வாழ்நாளில், அவருக்கு இதுவொரு கொடுமையான காலகட்டமாகவே இருக்கும் என்று யூகிக்கலாம்; ஏனெனில், இயங்கலில் இடைவெளி விழுந்துவிட்டதல்லவா…!

இந்திய அரசியல் தலைவர்களிலேயே, எத்தனை சரிவுகள் மற்றும் விமர்சனங்களை சந்தித்த போதும், தன் சுபாவத்தையும், தன் வியூகத்தையும் மாற்றிக் கொண்டாரோ இல்லையோ, ஆனால், தன் அயராத உழைப்பை, தன் தொடர்ச்சியான இயங்கலை எப்போதுமே சமரசம் செய்துகொள்ளாத திமுக தலைவர், இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு மாபெரும் ஆளுமையாக நீங்காது நிலைத்திருப்பார் என்பதை எந்த கேள்விக்கும் உட்படுத்த வாய்ப்பில்லை…!

Prasanna Bharathi

Associate Editor - Udagam 360

Prasanna Bharathi has 9 posts and counting. See all posts by Prasanna Bharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *