அமெரிக்க அதிபராக முதல் 100 நாட்கள்: என்ன செய்தார் டொனால்ட் டிரம்ப்?

முன்னெப்போதும் இல்லாததை விட அனல் பறந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் பலரும் எதிர்பார்க்காத வகையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து அமெரிக்காவின் 45வது அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். “கார்ப்பரேட் நாடு” என்ற வார்த்தைக்கு பொருளை அளித்த அமெரிக்காவில் எவ்வித குறிப்பிடத்தக்க அரசியல் அனுபவமும் இல்லாத ஒரு தொழில் அதிபர் அந்நாட்டின் அதிபரானதில் எவ்வித அதிர்ச்சியும் இல்லை என்றனர் அரசியல் விமர்சகர்கள். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சர்ச்சையே இன்னும் தீராத நிலையில் அமெரிக்க அதிபராக தனது 100வது நாளை சனிக்கிழமை நிறைவு செய்துள்ளார் டொனால்ட் டிரம்ப். எனவே, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கான காரணமென்ன, அமெரிக்க அதிபராக கடந்த 100 நாட்களில் அவர் சறுக்கினாரா, சாதனை செய்தாரா என்று அலசுகிறது இந்த கட்டுரை.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய நிலை:

“குடியேறிகளின் நாடு” என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் அமெரிக்கா என்று கூறலாம். ஏனெனில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 32 கோடியில் கிட்டத்தட்ட 4 ½ கோடி பேர் மற்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்களே. மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி இருப்பவர்கள் பல இலட்சம் பேர்.

ஒரு விடயத்தை உடனடியாக புரிந்துக்கொள்வது முதல் படைப்புத்திறனில் சிறந்து விளங்குவது வரை பெரும்பாலான அமெரிக்கர்களை விடவும் இந்தியர்களும், சீனர்களும் தனிச்சிறப்புடன் விளங்கினர்.  எனவே, அமெரிக்காவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள் முதல் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசாங்க பதவிகள் என பலவற்றின் முக்கிய பொறுப்புகளில் இந்தியா, சீனா மற்றும் சில நாடுகளை சேர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமானதால், இந்நிலை அமெரிக்கர்களிடையே அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது.

டொனால்ட் டிரம்ப் வெற்றிப்பெற்றதற்கான காரணங்கள்:

ஒருவர் அமெரிக்க அதிபராக இரண்டு முறை மட்டுமே இருக்கமுடியும் என்பது அந்நாட்டின் அரசியலமைப்பு விதி. எனவே, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த பராக் ஒபாமாவின் பதவி முடிவடைய, அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக 69 வயதான ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் வேட்பாளராக 70 வயதான டொனால்ட் டிரம்ப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நேரிடையாக ஒரே மேடையில் வாதிடுவது வழக்கம். இந்நிலையில் பெரும்பாலான அமெரிக்கர்களின் கோரிக்கையான வேலையில்லா திண்டாட்ட ஒழிப்பு, அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவது, பொருளாதாரத்தை நிலைநாட்டுதல், வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வருதல், குடியேற்ற விதிகளை கடுமையாக்குதல், முஸ்லீம் மீதான கெடுபிடிகளை அதிகப்படுத்துதல் போன்றவற்றை தனது வாக்குறுதியாக அளித்த அளித்த டொனால்ட் டிரம்ப் குறிப்பாக மத்திய வர்க்க மக்களை பெரிதும் கவர்ந்தார். மேலும், அந்நேரத்தில் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும், அது சார்ந்த பல்வேறு ‘போலிச் செய்திகளும்’ அதிகளவில் பகிரப்பட்டன. இந்நிலையில் மொத்த வாக்குப்பதிவு சதவீதத்தில் டொனால்ட் டிரம்ப்பை விட அதிக (2.1%) சதவீதத்தை ஹிலாரி கிளிண்டன் பெற்றிருந்தாலும், அச்சதவீதத்தை விட முக்கியத்தும் வாய்ந்த பிரதிநிதிகளின் ஓட்டுகளை அதிகம் பெற்றதன் மூலம் அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் டொனால்ட் டிரம்ப்.

டிரம்ப்பின் சாதனைகள்:

    1.    டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப்:

உலக பொருளாதாரத்தில் முதல் இடத்தை நோக்கி முன்னேறி வரும் சீனாவை கண்டு அஞ்சிய அமெரிக்கா கடந்த ஆண்டு கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உலகின் 40 சதவீத பொருளாதாரத்தை கையில் வைத்துள்ள நாடுகளுக்கிடையே “டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப்” என்னும் ஐரோப்பிய யூனியனுக்கு நிகரான பலம் வாய்ந்த அணியை உருவாக்கியது. இதிலுள்ள 12 நாடுகள் தங்களுக்கிடையே தடைகள்  அற்ற, குறைந்த வரிகளுடைய வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஈடுபடவும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை கொள்கைகளிலும், மின்னணு தகவல் பரிமாற்ற விவகாரங்களிலும் ஒத்துழைப்பளிக்கும் வகையில் அமைத்திருந்தது. ஆனால், இதற்கான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிஸில் ஒபாமாவால் நிறைவேற்ற முடியாமலேயே அவரது பதவிக்காலம் முடிவுற்றது. இந்நிலையில் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தான் அளித்த வாக்குறுதியின்படி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

  1.  சட்டவிரோதமாக எல்லையில் நுழைதல்:

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது  அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற உடன் சட்டவிரோத குடியேறுதலை தடுக்கும் வகையில் நிர்வாக உத்தரவொன்றை பிறப்பித்தார். இதன் காரணமாக டிரம்ப் பதியேற்ற ஒரே மாதத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோரின் சதவீதம் அதன் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 36 சதவீதம் வரை குறைந்துள்ளாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது.

  1. பாதுகாப்புத் துறை:

அமெரிக்க இராணுவத்தை மேலும் நவீனமாக்கும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். சிரியாவில் நடைபெற்று வரும் போரின்போது சமீபத்தில் நடந்த இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதல் உலக நாடுகளிடையே பாராட்டை பெற்றது. குறிப்பாக வட கொரியாவின் உருவாக்கியவராக கூறப்படும் கிம் இல் சங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அணு ஆயுத கருவிகளை பயன்படுத்தாமல் சாதாரண ஏவுகணையை பயன்படுத்தியதற்கான காரணம் அமெரிக்காவின் எதிர்ப்பே என்று கூறப்படுகிறது.

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக நில் கோர்சச்சை காங்கிரஸின் பெருவாரியான ஆதரவுடன் நியமித்துக் கூட டிரம்ப்பின் வெற்றியாக கருதப்படுகிறது.

டிரம்ப்பின் சறுக்கல்கள்:

     1.  அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர்:

டொனால்ட் டிரம்ப் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுதான் சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் அதிகளவில் கைமாற்றப்படும் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவது. இந்த திட்டம் ஏற்கனவே தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத ஒன்று என்றும், பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்கள் நிதி தேவைப்படும் என்றும் கூறி டிரம்ப்பை பலரும் கேலியும் கிண்டலும் செய்து வந்த நிலையில், டிரம்ப் அதிபரானவுடன் இந்த தடுப்பு சுவரை கட்டுவதற்குறிய பணத்தை மெக்ஸிகோவே அளிக்கும் என்று கூறியுள்ளது மேலும் குழப்பத்தைத்தான் உண்டாக்கியுள்ளது.

 

  1. சுகாதார காப்பீடு:

அமெரிக்காவில் வாழும் ஒவ்வொருவரும் சுகாதார காப்பீடு வைத்திருப்பது காட்டாயமானதாகும். ஆனால் அனைத்து தரப்பு மக்களாலும் அதிக செலவு செய்து காப்பீட்டை பெறவியலாது என்பதால் முந்தைய ஒபாமா தலையிலான பெடரல் அரசாங்கம் ‘ஒபாமாகேர்’ என்ற சிறப்பு சுகாதார காப்பீட்டுத்திட்டத்தை கொண்டுவந்தது. இந்நிலையில் டிரம்ப் அதிபராக பதவியேற்றவுடனேயே ‘ஒபாமாகேரை’ முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால், டிரம்ப் நினைத்ததை போன்று எதுவும் நடக்காததால், “சுகாதார காப்பீடு நாம் எவரும் எதிர்பார்க்காத வகையில் கடினமான நடைமுறைகளை கொண்டுள்ளதென்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

  1. பயணத்தடை:

உலககெங்கும் நடக்கும் தீவரவாதத்துக்கும், தீவிரவாதிகளும் முஸ்லிம்களே ஆவார்கள் என்பது டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வரும் கூற்று. இந்நிலையில் டிரம்ப் தான் அதிபராக பதவியேற்றவுடனேயே ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா மற்றும் சூடான் ஆகிய முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கான தடை விதிக்கும் நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். முஸ்லிம்கள் மீதான டிரம்ப்பின் வெறுப்புணர்வை வெளிக்காட்டும் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த தடையுத்தரவை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு டிரம்ப்பின் முக்கிய பின்னடைவாக கருதப்படுகிறது.

  1. காலியாக உள்ள முக்கிய அரசுப் பணிகள்:

நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன் கூறிய டிரம்ப், அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளின் 553 முக்கிய பதவிகள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் அதிபராக பதவியேற்றவுடன் வெறும் 22 காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது அவரின் நிர்வாகத் திறனை மீண்டுமொரு முறை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், இதுவரை இருந்த அரசுகளிலேயே இது மந்தமானதாக உள்ளதால் அரசின் துறைகளுக்கிடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

  1. ஊடகங்கள் மீதான வெறுப்புணர்வு மற்றும் பாகுபாடு:

தனக்கு எதிராக ஒரு வார்த்தையை எழுதினாலும் அக்குறிப்பிட்ட பத்திரிகையையோ அல்லது தொலைக்காட்சியையோ ‘போலிச் செய்தி’ வெளியிடுபவர் என்று கூறி தன்னை கேள்விக் கேட்பதற்கு கூட டிரம்ப் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச ஊடகமான ‘CNN’,’BuzzFeed’ போன்றவை அப்பட்டியலில் முன்னணி இடத்தை பெறுகின்றன. ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் தான் பதவியேற்றதன் 100-வது நாளன்று பல்வேறு ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்களுடன் உரையாடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமாகும். ஆனால், டொனால்ட் டிரம்ப்போ அந்நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு பென்சில்வேனியாவில் மக்களுடன் பேரணியொன்றை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஆடம்பர செலவு:

தான் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் அதற்குரிய முழு சம்பளத்தை தவிர்த்து ஆண்டுக்கு $1 மட்டுமே பெறுவேன் என்று கூறிய டொனால்ட் டிரம்ப், தனது முதல் மூன்று மாத சம்பளமான $78,333வை தேசிய பூங்காவிற்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய அதிபரான ஒபாமா ஒரு வருடத்தில் பயணத்திற்கு செலவிடும் தொகையை டிரம்ப் குடும்பத்தினர் ஒரே மாதத்தில் செலவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  1. தவறான தகவல்கள்:

டிரம்ப் வெற்றி பெற்றதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது குறித்த விசாரணையை அமெரிக்க புலனாய்வுத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் தனக்கும் இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளாக தவறான தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், சிரியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை பற்றிய பேட்டியின்போது அமெரிக்கா சிரியா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்று கூறுவதற்கு பதிலாக ஈராக் என்று கூறிவிட்டார். இது போன்று, தான் முன்னரே தெரிவித்த பல தகவலை தான் தெரிவிக்கவே இல்லை என்று கூறுவதையே டிரம்ப் தனது வழக்கமாக கொண்டுள்ளது அவரின் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் செயல்பாட்டை எதிர்த்து பெண்கள், டெக் உலகின் முன்னணி நிறுவனங்கள், பொது மக்கள், தற்காலிகமாக/நிரந்தரமாக குடியேறியவர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும், பேரணியையும் பல்வேறு காரணங்களுக்காக முன்னெடுத்து வருவதும், டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் ஆகிவற்றை யோசித்து முதல் 100 நாட்களில் அவர் சாதனை செய்தாரா அல்லது சறுக்கினாரா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *