நோய்களை முற்றிலும் குணமாக்க, $3 பில்லியன் டாலர்… மார்க் சக்கர்பெர்க் அறிவிப்பு!

“இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனிதர்களிடையே நிலவும் பல்வேறு விதமான நோய்களை வேரோடு அழிக்கும் வகையிலான ஆராய்ச்சிகள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டுகளுக்கு  $3 பில்லியன் கொடுக்கப்படும்” என அறிவித்துள்ளது, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் அவரின் மனைவி பிரிஸில்லா சான் தம்பதி.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் பேசிய பிரிஸில்லா சான், “நான் அடிப்படையில் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்பதால், ஒரு நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வலியும், வேதனையும் நன்றாக தெரியும். எனவே இனி வரும் வருடங்களில் பல்வேறு வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், வந்ததை குணப்படுத்தவும் தேவையான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த $3 பில்லியன் பணம் பேஸ்புக்கில் தங்களுக்கு உள்ள 99% பங்குகளைக் கொண்டு செயல்படுத்தப்படும். மேலும், இந்த திட்டமானது விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் ஒரே அணியாக சேர்ந்து, பல புதிய படைப்புகளையும் தீர்வுகளையும் காண பயன்படும்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மார்க் ஸுக்கர்பேர்க், உலக மக்களில் சுமார் 10.8 மில்லியன் பேர் இருதய நோயாலும், 8.5 மில்லியன் பேர் தொற்று நோய்களாலும், 8.2 மில்லியன் பேர் புற்றுநோயாலும் மற்றும் இதர மக்கள் பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மார்க் ஸுக்கர்பேர்க் மற்றும் அவரின் மனைவி பிரிஸில்லா சான்

என்னென்ன செய்ய போகிறார்கள்?

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் $600 மில்லியன் மதிப்பீட்டில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா-சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் பிரபல பேராசிரியர்கள் தலைமையில் ‘பயோஹப்’ எனப்படும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இந்த மையம் ஏற்கனவே உள்ள நோய்களுக்கான தீர்வை மட்டுமல்லாது, உலகை அச்சுறுத்தி வரும் ‘ஜிகா’ போன்ற சமீபத்திய கிருமிகளுக்கும் தீர்வை கண்டறியவும் பயன்படுத்தப்படும். பொதுவான மருத்துவ ஆராய்ச்சி முறைகளுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருள்கள் மூலம் நோய்கள் வந்த பின்னரும், வருவதற்கு முன்னரும் கண்டறியவும், குணப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சிக்கலான நரம்பு, இரத்தம், செல்கள் சம்பந்தமான நோய்களுக்கான சிகிச்சை முறையும் மேம்படுத்த ஆராச்சிகள் மேற்கொள்ளப்படும்.

இது தவிர உலகம் முழுவதும் உள்ள அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களை ஒன்றிணைத்து “சேலஞ்ச் நெட்ஒர்க்” ஒன்று உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் மற்றும் அவரின் மனைவி சானுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதே சமயத்தில் இந்த பில்லியன் தம்பதியினர் உலகுக்கு நன்மை அளிக்கும் தங்களின் வருங்கால கனவுத் திட்டங்களை செயற்படுத்த “சான் ஸுக்கர்பேர்க்” என்னும் தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கினர். அதன் மூலம் “ மனித ஆற்றலை மேம்படுத்தவும் மற்றும் மக்களிடையே உடல்நலம், கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்வேறு துறையில் சமத்துவத்தை உயர்த்த திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.”.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் ஆப்பிரிக்காவை சேர்ந்த என்ஜினீர்களுக்கு பயிற்சி அளித்து தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியமர்த்தும் ‘அன்டெலா’ என்னும் நிறுவனத்திற்கு $24 மில்லியனும், இம்மாத தொடக்கத்தில் இந்தியாவை சேர்ந்த வீடியோ வழி கல்வி கற்றல் நிறுவனமான ‘பைஜூவிவிற்கு’ $50 மில்லியனும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *