கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் பெறக்கூடிய 9 உதவிகள்!

சாஃப்ட்வேர் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம், ஹார்டுவேர் தயாரிப்பிலும் முழுவீச்சில் இறங்கியுள்ளது. சமீபத்தில் அறிவித்த கூகுள் பிக்ஸல் விரைவில் இந்தியாவில் விற்பனையைத் துவங்கவிருக்கிறது. இந்த பிக்ஸல் மொபைல்களில் ஏகப்பட்ட புதிய சிறப்பம்சங்கள் இருந்தாலும், அதில் பிரத்யேகமானதாக கூகுள் கூறுவது அதன் புதிய விர்ச்சுவல் பர்சனல் அசிஸ்டெண்ட் . இந்த அசிஸ்டெண்ட் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவும் தெரியுமா?

1. கேட்டால் கிடைக்கும்!

இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் அளித்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆப்பான ‘கூகிள் நவ்’-வின் குறைபாடே அது இருவழி உரையாடலை மேற்கொள்ள இயலாது என்பதுதான். ஆனால் இந்த புதிய விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்டிடம் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு தகுந்த பதில்களை பெறவியலும்.

எடுத்துக்காட்டாக,

தமிழ்நாட்டில் இந்தாண்டு எப்போது பருவமழை துவங்கும்? என்று  கேட்டால்,

அதற்குரிய தகுந்த பதிலை அளிக்கும். (இணையதளங்களில் இருக்கும், தரவுகளின் அடிப்படையில் இந்த பதில்கள் இருக்கும்)

நீங்கள் அடுத்த கேள்வியாக, எவ்வளவு மழை எதிர்பார்க்கலாம்? என்று கேட்டால்,

இணையத்தில் உள்ள தகவல்களை கண்டறிந்து ஒரு சில நொடிகளில் அதற்கான பதில் உங்களை வந்து சேரும்.

2.மொபைலில் உள்ள ஆப்களை இயக்கலாம்

உங்கள் மொபைலில் உள்ள ஓலா, உபேர், மியூசிக் மற்றும் வீடியோ போன்ற சில குறிப்பிட்ட ஆப்களை உங்கள் குரல் மூலமாகவே இயக்க முடியும்.

எடுத்துக்காட்டாக “ரெமோ படத்துக்கு, இன்று மாலை காட்சிக்கு இரண்டு டிக்கெட்கள் முன்பதிவு செய்யவும்” என்று ஆங்கிலத்தில் கூறினால் ஒருசில நொடிகளில் வேலை முடிந்துவிடும்.

3. நீங்கள்தான் இதற்கு மாஸ்டர்!

பிக்ஸல் மொபைல்களை அறிமுகப்படுத்தும்போது பேசிய கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, இந்த அசிஸ்டெண்ட் ஆப்பை நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு துல்லியமான நீங்கள் எதிர்பார்க்கும் பதில்களை அளிக்கும் வகையில்  இந்த ஆஃப் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதாவது உங்கள் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. நீங்கள் இதனைப் பயன்படுத்தும் முறையினை வைத்தே, உங்களை கணித்து விடும்.

4. தேடலை எளிதாக்கும்..!

குறிப்பிட்ட நபர் ஒருவரிடம் இருந்து சில  மாதங்களுக்கு முன்பு நீங்கள் பெற்ற மின்னஞ்சலை அந்த நபரின் பெயர் அல்லது மின்னஞ்சலின் குறிப்புகளை அளித்தாலே இந்த விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் நொடிப்பொழுதில் அதை கண்டறிந்து கொடுத்துவிடும். அதேபோன்று நீங்கள் செலுத்த வேண்டிய மொபைல், மின்சார, கடன் அட்டை கட்டணங்கள் குறித்த தகவல்களையும் பெறவியலும்.

5. 70 பில்லியன் தகவல்கள்!

இணையத்தில் தகவல் தேடலில் முன்னோடியான கூகிள் நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டன்ட்டை 70 பில்லியனுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக ஜப்பானின் தலைநகரம் எது? என்று கேட்டால் நொடிப்பொழுதில் டோக்கியோ என்ற பதிலை உங்களுக்கு வழங்கும். விக்கிபீடியாபோல ஏராளமான தகவல்களை கொண்டுள்ளது இந்த அசிஸ்டெண்ட்.

6. உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்!

கூகுள் நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் ஆப்பை புதிய விஷயங்களை கற்பதற்காக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் மற்ற நிறுவனங்களின் ஆப்களோடு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வெளிநாட்டு மொழிகள், தியானம், உடற்பயிற்சி, சமையல் போன்றவற்றை கற்க உதவும். இதற்காக பல்வேறு நிறுவனங்களின் சேவையை இதற்குள் பயன்படுத்த அனுமதிக்கிறது.

7. கோராவிடம் இருந்தும் தகவல் பெறலாம்!

உங்களுக்கு கூகுள் விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் அளிக்கும் பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்றால் பிரபல கேள்வி-பதில் இணையதளமான (Quora) கோராவிடமிருந்தும் பதில்களை பெறும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

8. அருகில் உள்ள இடங்கள் பற்றிய தகவல்களை பெறலாம் 

உங்கள் பிக்சல் மொபைலில் ஜிபிஎஸ் மற்றும் இன்டர்நெட் ஆன் செய்யப்பட்டு இருந்தால் உங்கள் அருகில் இருக்கும் ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் குறித்த விவரங்களை துல்லியமாக அறியவியலும்.

 

 

 

9. தானாகவே இயங்கி பதிலளிக்கும்:

நீங்கள் உங்கள் நண்பரிடம் அடுத்த மாதம் கோவாவிற்கு செல்வதை பற்றி பேசிக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் உரையாடலை நீங்கள் கூறாமலும் தொடர்ந்து கவனிக்கும் இந்த விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் கோவாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள், வானிலை, ஹோட்டல் குறித்த விவரங்கள் போன்றவற்றை தானாகவே அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சிறப்பம்சங்களும் விரைவில் படிப்படியாக செயற்பாட்டிற்கு வரும் என்றும் அவற்றில் சில குறிப்பிட்ட சிறப்பம்சங்கள் சில நாடுகள்/ நகரங்களுக்கு/ மொழிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூகுள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *