எம்.ஜி.ஆரை கிண்டல் செய்தாரா டி.ராஜேந்தர்…?

பலபேர் பிரபலமாகி கொடிகட்டிப் பறந்த காலத்தில், களத்தில் குதித்து…

முதல் படத்திலேயே முற்றிலும் புதுமுக ஜோடிகளை அறிமுகப்படுத்தி…

பாடல்களை எதிர் உவமை எனும் புது பாணியில் எழுதி…

கிளைமேக்ஸில் கதாநாயகன் இறந்துவிடுவதாக காட்டி…

பாடல் பின்னணிக் காட்சிகளில் புதுமைகளை கடைப்பிடித்து…

தனது இசையில் தனித்துவம் புகுத்தி…

தான் கதாநாயகனாக நடிக்கையில், நாயகியைத் தொடாமலேயே நடித்து…

தனது படத்தில், தான் சார்ந்த அரசியல் கட்சியைப் பிரச்சாரம் செய்து…

ஒரு பிரபலமான கதாநாயகனாக இருந்தபோதும், தனது படத்தின் இறுதியில், தான் இறப்பதுபோல் நடித்து…

சில படங்களில் கதாநாயகிகளையும் இறக்க வைத்து…

இப்படி ஏராளமான அதிரடிகளுக்கு சொந்தக்காரர்தான் இன்று விஜய டி.ராஜேந்தர் என்று பெயரை மாற்றிக்கொண்ட பழைய டி.ராஜேந்தர்!

நான் தொடக்க காலத்தில் டி.ராஜேந்தர் படங்களின் மீது பெரிய விருப்பம் காட்டியதில்லை. பாலச்சந்தரின் படங்களைப் போன்று, நாடகத் தன்மையில் இருத்தல் மற்றும் சில காரணங்களுக்காக ஒதுக்கியே வந்துள்ளேன். இவரின் இசை மற்றும் பாடல் வரிகள் மீது மட்டும் மதிப்பும், ஈர்ப்பும் இருந்தது.

ஆனால், காலப்போக்கில், இவரின் ஆரம்பகால படங்கள் உள்ளிட்ட பல படங்களை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியபோது, அதிலுள்ள பல சிறப்பம்சங்களை நுணுகிப் பார்க்க நேர்ந்தது.

பாரதிராஜவே பயந்தார் (?)

’16 வயதினிலே’ எடுக்கும்போது, புதுமுக நடிகர்களைப் போட்டால், எங்கே படம் படுத்துவிடுமோ என்று பாரதிராஜா பயந்து, அன்றைய ஸ்டார்களான கமல்-ஸ்ரீதேவியைப் போட்டு படம் எடுத்ததாக செய்திகள் சொல்வதுண்டு. ஆனால், டி.ராஜேந்தரோ, முதல் படமான ஒருதலை ராகத்தில், மிக தைரியமாக, யாரென்றே தெரியாத, பெரிய அழகில்லாத இருவரை, ஜோடிகளாக்கினார். காதல் சோகப் பாடல்களை, சென்டிமென்ட் மற்றும் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அப்படத்தில் வைத்து கலக்கியிருப்பார். பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் போன்றோர் அந்த விஷயத்தில் அவரை எச்சரித்தார்கள். ஆனால், அவர் அந்த எச்சரிக்கைகளை மீறி வெற்றிகண்டார்.

சினிமாவில் ஒரு புதுப் புரட்சி!

இவர் கதாநாயகனாக நடித்தப் படங்களில், நாயகியைத் தொடாமல் நடிப்பது ஒரு தனி ஸ்டைல் என்றே சொல்லலாம். சினிமாவில் அது ஒரு புரட்சியும்கூட. ஆனால், அந்தப் புரட்சி பெரிதாக கவனிக்கப்படாமலேயே போய்விட்டதுதான் சோகம். அந்த கலாச்சாரம் தொடர்ந்திருந்தால், தமிழ் சினிமா வேறு ஒரு நிலைக்குப் போயிருக்கும்.

அற்புதமான டூயட் பாட்டுகளில்கூட, இவர் ஸ்டைலாக மற்றும் கலர்ஃபுல்லாக உடை உடுத்திக்கொண்டு, நாயகியை கவனியாது எங்கெங்கோ முகத்தைத் திருப்பி பார்த்துக் கொண்டிருப்பார். பரட்டை முடியைக் கோதுவார். அப்படி பார்த்தவாறே, நாயகியோடு நடந்து வருவார். ஆனால் நாயகியோ, இவரை ஏக்கமாக, விழுங்கி விடுவதுபோல் பார்ப்பார். ‘டேய், கொஞ்சமாவது தொடுடா, ப்ளீஸ்…’ என்பதுபோல் இருக்கும் அப்பெண்ணின் பார்வை.
அன்றைய நாளில், பக்கா திமுக-காரரான டி.ஆர்., தனது இதுபோன்ற டூயட் காட்சிகளின் மூலம், தனது அன்றைய தலைவரின்(கலைஞர் கருணாநிதி) அரசியல் வைரியான எம்.ஜி.ராச்சந்திரனை கிண்டலடித்தார் என்கிறார்கள் சிலர். எம்.ஜி.ஆர்., தனது கதாநாயக காலத்தில், டூயட் காட்சிகளில், நாயகிகளை மிக அதிகமாக தொட்டுப் பிடித்து நடித்தார் என்று பரவலான விமர்சனங்கள் உண்டு. (அவரின் பிந்தைய காலப் படங்களின் டூயட் பாடல்கள் ஆபாசமானவை என்றும்கூட கூறுவார்கள்). எனவே, தான், இப்படி கொஞ்சம்கூட தொடாமல் நடிப்பதன் வாயிலாக, நாயகிகளை தொட்டு நடிப்பதில் புகழ்பெற்ற எம்.ஜி.ராமச்சந்திரனை கிண்டல் செய்தார் என்பதுதான் அந்த சுவாரஸ்ய கூற்று…!

தனது தாடியை விடாதவர்

கதாநாயகர்கள் மொழுமொழுவென்று முகத்தை வைத்துக்கொண்டு நடித்த காலத்தில், எதைப் பற்றியும் கவலையின்றி, தனது தாடியையும், பரட்டை முடியையும் கடைசிவரை கைவிடாமலேயே, கதாநாயகனாக நடித்தவர். இதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். இதுபோன்று, தமிழில், வேறு எந்த கதாநாயக நடிகரும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. தனது பாத்திரத்திற்கு தேவையென்றால் மட்டுமே, பொதுவாக, கதாநாயகர்கள், தங்கள் முக கெட்டப்பை மாற்றுவார்கள். ஆனால், இவரோ, அனைத்து சூழல்களுக்கும் ஒரே கெட்டப்பிலேயே வந்தார்.

தனது படங்களில், கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம் மற்றும் இசை உள்ளிட்ட பல வேலைகளை இவர் ஒருவரே மேற்கொண்டார். வேறு இயக்குநர்களின் படங்கள் சிலவற்றிலும் இவர் இசையமைத்தார் (பூக்கள் விடும் தூது, பூக்களைப் பறிக்காதீர்கள், கிழிஞ்சல்கள் உள்ளிட்டவை)

டி.ஆரின் சொந்த ஊர் டெல்டா மாவட்டமான இன்றைய நாகை மாவட்டத்தில் உள்ளது. ஆனால், இவர் தனது எந்தப் பாடலிலும் காவிரி நதியைப் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை. ஆனால், மதுரையில் ஓடும் வைகை நதி மீது இவருக்கு என்ன பிரியமோ தெரியவில்லை…! தனது பாடல்களில் வைகை நதியைக் கொண்டு வந்துள்ளார்.

‘வைகை கரைக் காற்றே நில்லு, வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு’

‘வைகை இல்லா மதுரை இது; மீனாட்சியைத் தேடுது’

அரசியல் ஈடுபாடு

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்திலேயே, திமுக மேடைகளில், அவரைத் தாக்கியும் பேசினார் டி.ஆர். ஆனால், ஏதோ ஒரு விஷயத்தில், டி.ஆர். மீது எம்.ஜி.ஆர். கோபமாக, திருமதி.உஷா ராஜேந்தர், ராமாவரம் தோட்டம் சென்று, முதல்வர் எம்.ஜி.ஆரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் செய்திகள் உண்டு.

அன்றைய நாளில், தீவிர கருணாநிதி தொண்டரான டி.ஆர்., ‘என் தங்கை கல்யாணி’ என்ற படத்தில், முன்னாள் தீவிர திமுக-காரரும், பின்னாளில் அதிமுக சென்றவருமான காலஞ்சென்ற நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுடன் இணைந்து ஒரு திமுக பிரச்சாரமே செய்திருப்பார். பின்னாளில், 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில், சென்னை பூங்காநகர் தொகுதியில் வெற்றியும் பெற்றார்.

அனைத்துமே சிறந்தவையா?

இவரின் படங்கள் அனைத்தும் சிறந்தவை, பார்க்கக்கூடியவை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், தமிழ் திரைத்துறையில், இவர் எடுத்த பலவித புதிய முயற்சிகள் மற்றும் திரைத்துறையில் இருக்கையிலேயே அரசியலில் காட்டிய தீவிர ஈடுபாடு போன்றவற்றை அலசுவதே இக்கட்டுரை.

Prasanna Bharathi

Associate Editor - Udagam 360

Prasanna Bharathi has 9 posts and counting. See all posts by Prasanna Bharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *