இந்தியாவை முந்திய பாகிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள்! – இந்திய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாத பெண்கள்!  

உலக பெண்கள் தினம், மார்ச் 8-ம் தேதி பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம் சமூகத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்களும், உரிமை மறுப்புகளும் நாளுக்குநாள் அதிகமாகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. எனவே தான் உலகின் பெரும்பாலான நாடுகள் மற்றும் நகரங்களில் பெண்கள் தின கொண்டாட்டம் என்பது வெறும் மற்ற உலக தினங்களை போலல்லாமல் பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் தினமாக பயன்படுத்தப்படுகிறது.

நம் நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்களும், உரிமை மறுப்புகளும் மற்றும் பல விதமான அநீதிகளும் அவர்களின் சொந்த வீடு முதல் சமூகத்தின் பல நிலைகளிலும் இழைக்கப்டுகிறது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் அரசு இயந்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில், பெண்களின் எண்ணிக்கை என்பது, நாம் உலகின் மோசமான நாடுகள் என்று நினைக்கும் பல நாடுகளையும் விட மிகவும் குறைவாகத்தான் உள்ளது என்பது சில தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மொத்தம் 543 உறுப்பினர்களை கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் வெறும் 62 உறுப்பினர்கள் அதாவது 11 சதவீனத்தினரே பெண்களாவர். பெண்களுக்கெதிரான குற்றங்களும் அநீதிகளும் அதிகமிருக்கும் நம் நாட்டில் அதற்கான குரலை பெண்கள்  நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்புகளோ, தத்தமது தொகுதிகளில் முன்னேற்ற பணிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலையோ இல்லை. பொருளாதாரத்திலும், மின்னணுமயமாக்கத்திலும், உற்பத்தியிலும், கல்வியிலும், பாதுகாப்புத்துறையிலும் உலகின் முன்னணி நாடுகளுக்கு சவால் கொடுக்கும் நிலையில் இந்தியா உள்ளதாக கூறிக்கொள்ளும் அரசாங்கம், கிட்டத்தட்ட மேற்குறிப்பிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கு கீழுருக்கும் நாடுகளான ருவாண்டா, பொலிவியா, அண்டோரா, சீசெல்ஸ், நமீபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் கூட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட மிகவும் அதிகமாகும்.

உலகின் நாடாளுமன்றங்களில் உள்ள பெண் உறுப்பினர்களின் சராசரி 22.4% ஆகும். உலக சராசரியை விட அதிகமாக ஐரோப்பாவில் 25.2 சதவீத்தினரும், ஆப்ரிக்காவில் 22.6 சதவீத்தினரும், ஆசிய கண்டத்தில் 19% மற்றும் அரேபிய நாடுகளில் 18% சராசரியாக உள்ளது.  உலகின் 42 நாடுகளில் 30% அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாக உள்ளனர்.

buy antabuse online cheap buy prednisone with paypal 148வது இடத்தில் இந்தியா!

உலகின் 190 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பட்டியலில் 11 சதவீதத்துடன் இந்தியா 148வது இடத்தையே பெற்றுள்ளது. இந்தியா 148வது இடத்தை பெற்றது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், அதனினும் பெரிய அதிர்ச்சி இந்த பட்டியலில் டாப் இடங்களை பெற்றுள்ள நாடுகளை பார்த்தால் கண்டிப்பாக ஏற்படும்.

உகாண்டா 34.3 சதவீதத்துடன் 31வது இடத்தையும், 32.6% உடன் ஜிம்பாப்வே 34வது இடத்தையும், நேபாளம் 29.6% உடன் 48வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 27.7 சதவீதத்துடன் 54வது இடத்தையும், ஈராக் 25.3% உடன் 67வது இடத்தையும், சோமாலியா 24.2% உடன் 71வது இடத்தையும், 20.6% உடன் பாகிஸ்தான் 89வது இடத்தையும் பெற்று இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ளன. மேலும் வங்கதேசம், சவூதி அரேபியா, இந்தோனேஷியா, கென்யா, சாம்பியா, ஜமைக்கா, லிபியா, ரஷ்யா, கானா, உக்கரைன் போன்ற பல்வேறு நாடுகளை விட இந்தியா பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

இந்த தரவு பட்டியலில், ஆப்பிரிக்க நாடான ருவாண்டா 61.3 சதவீத பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உலகிலேயே முதலிடத்தையும், பொலிவியா 53.1%, கியூபா 48.9%, ஐஸ்லாந்து 47.6%, நிகரகுவா 45.7%, ஸ்வீடன் 43.6%, செனெகல் 42.7%, மெக்ஸிகோ 42.6%, பின்லாந்து 42%, தென்னாபிரிக்கா 42% ஆகிய நாடுகள் முதல் பத்திடங்களை பெற்றுள்ளன.  

அனைத்து கூட்டமைப்புகளிலும் பின்தங்கிய இந்தியா

உலகின் 190 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பட்டியலில் 148வது இடத்தை பெற்றுள்ள இந்தியா, பட்டியலிடப்பட்ட 18 ஆசிய நாடுகளில் 13வது இடத்தையும், டாப் 8 சார்க் நாடுகளில் 5வது இடத்தையும், டாப் 5 பிரிக்ஸ் நாடுகளில் 4வது இடத்தையே பிடித்துள்ளது.

இந்த நிலைக்கு காரணமென்ன?

மேற்கண்ட பட்டியல்களில் முன்னணி இடங்களை பெற்றுள்ள பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலில் உள்ளது. குறிப்பாக ருவாண்டாவில் 30 சதவீத நாடாளுமன்ற இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கான பயணம் கடந்த 1996-லிலேயே ஆரம்பித்து, 1999, 2002 மற்றும் 2003ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2008ல் மீண்டும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி 2010ல் அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை ஒரு மசோதாவை அமல்படுத்த வேண்டுமென்றால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளின் ஒப்புதலும் அவசியமானது. ஆனால் 15வது மக்களவை 2014ம் ஆண்டு முடிவடையும் வரை அதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. அதன் பின்னர் தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தலைமையிலான அரசும் அம்மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனவே, நம் சமூகத்தில் பெண்களுக்கான உரிமை என்பது வார்த்தையளவில் மட்டுமே இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும், பள்ளியிலும், கல்லூரியிலும், அலுவலகத்திலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் சமத்துவ நிலையை அடைவதே ஆகும். பெண்களின் பாதுகாப்பிற்காக விர்ச்சுவல் உலகத்தில் இணையதளத்தையும், கைபேசி செயலியையும் அறிமுகப்படுத்தும் அரசாங்கம், ரியாலிட்டியில் இனியாவது எதாவது செய்யுமா?!

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

gkjsairam has 49 posts and counting.See all posts by gkjsairam

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *